PUBLISHED ON : ஜூலை 25, 2025 12:00 AM

ஆர்.மகேசன், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழ்நாடு தேர்வு ஆணையம் சமீபத்தில், 3,900 காலி பணியிடங்களுக்கு குரூப்- - 4 தேர்வை நடத்தி முடித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ் தாளில் கடினமான கேள்விகளைக் கேட்டு, தேர்வு எழுதியவர்களின் அதிருப்திக்கும், சாபத்திற்கும் ஆளாகியுள்ளது, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி தான் அடிப்படைத் தகுதி என்றபோதும், இளங்கலை, முதுகலை, பொறியியல் பட்டதாரிகள் என, 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதியுள்ளனர். இதிலிருந்து தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் எந்த அளவு தலைவிரித்து ஆடுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்!
'சங்க காலத்து ஓலைச்சுவடிகளிலும், மன்னர் காலத்து கல்வெட்டுகளிலுமிருந்தும் கேள்வி கேட்டால், எப்படி பதில் எழுத முடியும்?' என்று தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., இரண்டாமாண்டு பயிலும் மாணவி ஒருவர் விரக்தியில் புலம்பிச் சென்றார்.
இதில், தமிழ் தாளில், 40 மதிப்பெண் எடுத்தால்தான், மற்ற தாள்கள் திருத்தப்படும் என்ற புதிய விதியும் நடைமுறையில் இருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கு தமிழ் மொழிமீது அவ்வளவு பற்று இருந்தால், பள்ளிக்கல்வியில் தமிழுக்கு முக்கியத்துவம் தந்து இருக்கலாமே!
ஆரம்பக்கல்வி தாய்மொழியில் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற புதிய கல்விக்கொள்கையை ஏற்றிருந்தால், பிளஸ் 1 பொதுத் தேர்வில், 40,000 மாணவர்கள் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்திருப்பரா? தமிழ்ப் பாடத்தை மாணவர்கள் ஒரு சுமையாகக் கருதும் சூழல் உருவாகி இருக்குமா?
தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள், போட்டித் தேர்வில் தமிழ் வினாத்தாளைக் கண்டு மிரண்டுபோகும் நிலை தான் ஏற்பட்டிருக்குமா?
கிராமப்புற மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வு கடினமானதாக இருப்பதாலும், நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களுக்கு அவர்களால் கப்பம் கட்ட இயலாது என்பதாலும், நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்று ஆர்ப்பரித்தவர்கள், தாய்மொழித் தேர்வை கடினமாக்கி, தேர்வு எழுதுவோரை கண்ணீர் சிந்த வைப்பது ஏன்?
போட்டித் தேர்வு என்ற பெயரில் லட்சக்கணக்கான இளம் தலைமுறையினரை மன உளைச்சலுக்கு ஆளாக்காமல், வயது, கல்வித்தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் நேர்மையான முறையில் காலி பணியிடங்களை நிரப்பலாமே!
'ப' வடிவ பஸ் வருமோ? கு.நாகராஜ், ஆண்டிப்பட்டி யில் இருந்து அனுப்பிய, 'இ
- மெயில்' கடிதம்: சர்க்கஸ் கூடாரங்களில் பார்வையாளர்களை மகிழ்விக்க
கோமாளி ஒருவர் இருப்பார். காலப்போக்கில் சர்க்கஸ் கூடாரம் காலியாக,
கோமாளிகள் எல்லாம் அரசியல்வாதிகளாகி விட்டனர்.
இவர்கள் அனைத்துக்கட்சிகளிலும் இருந்தாலும், தி.மு.க.,வில் இருப்பவர்கள் கொஞ்சம் ஸ்பெஷல் கோமாளிகள்!
பகுத்தறிவு, சமூகநீதி, ஒன்றியம் என புதுப்புது சொல்லாடல்களை உருவாக்கி, புரட்சி செய்கிறேன் பேர்வழி என்று எதையாவது செய்வர்.
கணபதி ஐயர் தெரு என்றிருந்தால், ஐயர் என்பதை தார் வைத்து அழித்து, ஜாதியை ஒழித்துவிட்டேன் என்பர்.
அவ்வகையில், தமிழகத்தின் தலையாய பிரச்னையான கடைசி பெஞ்சை ஒழித்துக்கட்ட, 'ப' வடிவ பெஞ்ச் திட்டம் ஒன்றைக் கண்டுபிடித்து உள்ளனர்.
'இது என்ன புதுப்புரளியா இருக்கு... இந்த கடைசி பெஞ்ச் ஒழிப்புத்திட்ட மகாசிந்தனை எப்படித் தோன்றியது?
கழிப்பறையில் அமர்ந்திருக்கும் போது, கணநேரத்தில் தோன்றிய சிந்தனை என்பாரே
இம்சை அரசன் 23ம் புலிகேசி என்ற படத்தில் நடிகர் வடிவேலு... அப்படியல்லவா
இருக்கிறது!'- என்று மக்கள் நினைக்க, 'இனி தமிழகத்தில் கடைசி பெஞ்சே
இருக்கிறது...' என்று பெருமைப்படுகின்றனர், தி.மு.க.,வினர்.
பள்ளி
கட்டடத்தின் தரம், ஆசிரியர் பற்றாக்குறை என்று பள்ளி சார்ந்த விஷயங்கள்
எவ்வளவோ இருக்க, பள்ளிக்கல்வித் துறையோ பெஞ்சை எப்படி போடுவது என்று
ஆராய்ச்சியில் இறங்கிஉள்ளது.
எல்லாம் சரி... இவர்கள் பெருமையாகப் பேசும் ஓசி பஸ்ஸில் கடைசி சீட் இருக்குமே... அதை என்ன செய்வதாக உத்தேசம்?
அதற்கும், 'ப' வடிவ பஸ் வருமா இல்லை, 'ஓ' வடிவ பஸ் வருமா?
இக்கொடுமையெல்லாம், சட்டசபை தேர்தல் வரை சகித்துத்தான் ஆக வேண்டும் போலிருக்கே!
ஒழுங்கு முறை அவசியம்! சு.செல்வராஜன், கோவை யில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: சமீபத்தில் ஆமதாபாதில், 271 உயிர்களைக் காவு கொண்ட விமான
விபத்து குறித்து விசாரணை அறிக்கை வெளிவந்துள்ளது. எரிபொருள் டேங்க்
சுவிட்சை, 'ஆன்' செய்யாமல், 'ஆப்' செய்த நிலையிலேயே விமானத்தை இயக்கியது
தான் விபத்துக்கு காரணம் என்பது தெரிந்த போது, இதயமே நொறுங்கிப் போனது.
மனிதர்கள் தங்களது சிறிய தவறால் உயிர், வேலை, பணம் என்று மிகப் பெரிய
விலையை கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனாலும், அவர்களின் அலட்சிய
மனோபாவங்கள் மாறுவதில்லை.
காஸ் சிலிண்டரை, 'ஆப்' செய்யாமல் வீட்டை
விட்டுக் கிளம்புவது, தண்ணீர் தொட்டியில் குழந்தைகள் விழுந்து பலியாவது
என்று நீண்ட பட்டியலே தரலாம்.
இதற்கெல்லாம் காரணம், வாழ்வின்
ஒழுங்கு முறைகளின் மீது நம்பிக்கையோ, ஆர்வமோ இல்லாதது தான். எழுதுவதற்கு
பேனாவைத் திறந்தவுடன், அதன் மூடியை பேனாவுக்குப் பின் பொருத்திவிட வேண்டும்
என்ற சிறு விஷயத்தில் ஆரம்பிக்கிறது, ஒழுங்குமுறை. சாவியை அதற்குஉரிய
இடத்தில் வைக்கும் வழக்கம் இருந்தால், அதைத் தேடுகிற வேலை மிச்சம் அல்லவா?
அதுபோன்று தான் ஒவ்வொரு விஷயத்திலும், நாம் கடைப்பிடிக்கும் ஒழுங்கு முறைகள், நம் வாழ்வை ஒழுங்கு படுத்துகிறது.
பள்ளிகளில் பாடங்களோடு, ஒழுங்குமுறைகளும் கற்றுத் தரப்பட வேண்டும்.
வெற்றியின் ரகசியமே, ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் ஒழுக்கத்தை கடைப்
பிடிப்பதில் தான் உள்ளது!
இத்தகைய ஒழுங்கு முறை இன்மையே, விமான விபத்துக்கும் காரணம்.
விமானம் மற்றும் ரயில் போக்குவரத்தில் பாதுகாப்பு என்பது ஒரு, 'பைலட்'டைப்
பொறுத்த விஷயமாக இருக்கக் கூடாது. பல கட்டங்களில் பலதரப்பட்ட
அதிகாரிகளால் மேற்பார்வை செய்யப்பட வேண்டும்.
இல்லையேல், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்!