தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ஊழலில்லாமல் திட்டம் நடந்தால் நல்லது!

ஊழலில்லாமல் திட்டம் நடந்தால் நல்லது!

ஊழலில்லாமல் திட்டம் நடந்தால் நல்லது!


PUBLISHED ON : பிப் 27, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 27, 2024 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: அடுத்த தேர்தலை பற்றி சிந்திக்காமல், அடுத்த தலைமுறையை பற்றி சிந்தித்தவர் காமராஜர். அவருடைய ஆட்சிக்காலத்தில் கல்வி, மருத்துவம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் மட்டும் தான், இலவச திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.

ஆனால், கடந்த 56 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில், வறுமையை ஒழிக்கிறேன் என்ற பெயரில், தொலைநோக்கு சிந்தனையின்றி, தேர்தல் அதிக ஓட்டுகளை வாங்க வேண்டும் என்ற ஒற்றை லட்சியத்துடன், ஏகப்பட்ட இலவச திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்தனர்.

செருப்பு, பல்பொடி, வேட்டி சேலை, சைக்கிள், கிரைண்டர், மிக்சி, மின்விசிறி, லேப்டாப், தாலிக்கு தங்கம் என்று, ஏதேதோ இலவச திட்டங்களை நடைமுறைப்படுத்தினர்.

தற்போதைய அரசும், கல்லுாரி மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய், குடும்பத் தலைவியருக்கு, மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்றெல்லாம், திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. பசியால் வாடும் ஒருவனுக்கு, அவன் பசியாற, மீனை இலவசமாக கொடுப்பதை விட, அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தால், அவனுக்கு தேவையான மீனை அவனே பிடித்துக் கொள்வான். கையேந்த வேண்டாமே!

தற்போதைய அரசு, 'தாயுமானவர்' என்ற இலவச திட்டம் அறிவித்துள்ளதை வரவேற்கலாம். ஏழைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு அரசின் திட்டங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்துத் தந்து, அவர்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதே திட்டத்தின் நோக்கம்.

இத்திட்டத்திற்கு, மிகவும் அடிமட்டத்தில் உள்ள ஏழைகள், ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர், ஒற்றை பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள், சிறப்பு குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் என்று தகுதி நிர்ணயம் செய்தால் நல்லது.

மேலும், இத்திட்டத்தில், லஞ்சம், ஊழல் எதுவும் தலையிடாமல் செயல்படுத்தினால், இது நல்ல திட்டம் தான் என்பதில் சந்தேகம் இல்லை.



மனுக்களுக்கு தீர்வு காணும் ரகசியம்!


சா.குமரேசன், திருவூர், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'முதல்வரின் முகவரி' என்ற திட்டத்தின் கீழ் இதுவரை பெறப்பட்ட, 20.21 லட்சம் மனுக்களில், 19.69 லட்சம் மனுக் களுக்கு தீர்வு காணப்பட்டதாக, அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

பெறப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறையால் எவ்வாறு தீர்வு காணப்படுகிறது என்பது தெரியுமா? அரசால் பெறப்படும் மனுக்கள், சம்பந்தப்பட்ட துறைத் தலைவருக்கு அனுப்பப்படும். அதை, துறை தலைவர், மாவட்ட தலைமை அலுவலருக்கு அனுப்புவார்.

மாவட்ட தலைமை அலுவலர், வட்டார அளவிலான அலுவலருக்கு, அதாவது எந்த அலுவலரிடம், மனுதாரர் முதன் முதலில் மனு கொடுத்தாரோ, அவருக்கே அனுப்பி வைப்பார். இவர் என்ன செய்வார் தெரியுமா?

மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, ஒரே வரியில் பதில் அனுப்புவார். இதே பதில் மீண்டும் கீழிருந்து மேல்மட்டம் வரை செல்லும். இதை அரசும் ஏற்று, மனுதாரருக்கு தெரிவித்து, தீர்வு கண்டதாக தெரிவித்து விடும்.

எந்த அலுவலரும், மனு எந்த தேதியில் பெறப்பட்டது, மனுவின் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தது ஏன் என்பது குறித்து ஆராய்வது இல்லை. இது தான் பொது மக்கள் அரசு அலுவலகங்களுக்கு தீர்வு வேண்டி கொடுக்கப்படும் மனுக்களின் நிலை.

உதாரணத்திற்கு, நான் குடியிருக்கும் திருவள்ளூர் மாவட்டம், திருவூர் ஊராட்சி, திருவள்ளுவர் நகர் பகுதியில், சிறப்பு திட்டத்தின் கீழ் 1.3 கி.மீ.,க்கு சாலை புதுப்பிக்க, 74.50 லட்சம் ரூபாய் அரசால் ஒதுக்கப்பட்டது.

இதற்கான ஒப்பந்தப் புள்ளி 2023 ஜூன் 30லேயே இறுதி செய்யப்பட்டு, அதற்கான பணி ஆணையும் வழங்கப்பட்டது. ஆனால், ஏழரை மாதங்கள் கடந்த நிலையிலும், சாலை புதுப்பிக்கும் பணி துவங்கப்படாமல் உள்ளது. இது பற்றி, சம்பந்தப்பட்ட மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையோ அல்லது திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகமோ, தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளவில்லை.

இது குறித்து, புகார் அனுப்பியும் பயனில்லை. கடைசி முயற்சியாக, முதல்வரின் முகவரி திட்டத்துக்கு அனுப்பப்பட்ட மனுவுக்கு, திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தால், நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்து, புகா ருக்கு முடிவு கட்டப்பட்டதாக கூறப்பட்டது.

இதில், மேற்படி அலுவலகம் கடந்த ஏழரை மாத காலமாக என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என புலப்படவில்லை. கல், தார் மற்றும் இதர பொருட்கள் வாங்க பணம் இல்லையா அல்லது வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லையா?

இதிலிருந்து, பொது மக்களின் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் பெறும் அரசு அலுவலர்களின் பணியை, உயர் அதிகாரி கள் முறையாக கண்காணிப்பதில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.



பா.ஜ.,வின் அவசர, அத்தியாவசிய கடமை!


அ.யாழினி பர்வதம், சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சண்டிகர் மேயர் தேர்தலில், ஆம் ஆத்மி வேட்பாளரின் வெற்றியை தடுத்து மோசடி யாக பா.ஜ., வேட்பாளரை வெற்றி பெற செய்திருக்கிறார், தேர்தல் அதிகாரி.

இது குறித்த வழக்கில், 'சண்டிகர் மேயர் தேர்தல் ஜனநாயக படுகொலை' என்று உச்ச நீதிமன்றம் கண்டித்ததுடன், தேர்தலையும் ரத்து செய்திருக்கிறது. கூடவே, தேர்தல் அதிகாரி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டிருக்கிறது.

நாட்டில், மூன்றாவது முறையும் மோடி ஆட்சி தான் என, கருத்து கணிப்புகள் உறுதியளிக்கும்போது, சாதாரண மேயர் தேர்தலில் வெற்றி பெற, இதுபோன்ற தகிடுதத்தம் தேவை தானா?

இப்படித்தான் பாதயாத்திரையில் ராகுல், ஒரு நாய்க்குட்டிக்கு பிஸ்கட் கொடுக்கிறார்; அது வாங்க மறுக்கிறது. அதனால், நாயின் உரிமையாளரிடம் கொடுத்து ஊட்ட சொல்கிறார். இதை பொய்யாக திரித்து, நாய் தின்ன மறுத்த பிஸ்கட்டை தொண்டருக்கு ராகுல் கொடுத்ததாக வலைதளத்தில் பா.ஜ.,வினர் பரப்பினர்.

வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு மாபெரும் வெற்றி கனிந்து வரும் வேளையில், சில விஷமக்காரர்களின் இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்கள், மக்கள் மனதில் பா.ஜ., மீதான மதிப்பை குறைக்கும்.

விவசாயிகளின் போராட்டத்தை மீண்டும் துாண்டியது போல, எப்படியாவது பா.ஜ., வெற்றியை தடுக்க சதிகாரர்கள் சூழ்ச்சி வேலைகள் செய்ய துடித்து கொண்டிருக்கும் போது, பா.ஜ.,வினரே அதற்கு பாதை அமைத்துக் கொடுக்கலாமா?

இதுபோன்று தவறுகள் செய்வோரை, தேர்தலுக்கு முன் களையெடுக்க வேண்டி யது, பா.ஜ., தலைமை செய்ய வேண்டிய அவசர, அத்தியாவசியமான கடமை!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us