PUBLISHED ON : ஜூலை 24, 2011 12:00 AM

யாருக்கும் வெட்கம் இல்லை!ச.ராசன், திருச்சியிலிருந்து எழுதுகிறார்:
மிகப்பெரிய குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தபோது, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்தவர், தன் காலத்தில் இப்படி நடந்ததே என வருத்தப்படவில்லை. தனக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட அவமானம் என்றும் கருதவில்லை. ஆனால், அவருக்கு கவர்னர் பதவி வழங்கி அழகு பார்க்கிறோம்.
நாம் இப்படி, எருமை மாட்டின் மீது மழை பெய்தது போல், உணர்ச்சிகள் அற்ற சோற்றுப் பிண்டமாக இருந்தால், இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் குண்டு வெடிக்கும். நம் உளவுத்துறைக்கு தான் சூடு, சொரணைக் கிடையாதே.அமெரிக்காவில், இரட்டை கோபுரம் தகர்ந்தவுடன், ஏமாந்து விட்டோமே என்று, உச்ச அதிகார மையம் முதல், உளவுத்துறை கீழ்நிலை அதிகாரி வரை, தனிப்பட்ட அவமானமாக கருதினர். அதன் விளைவாக, பின்லாடனுக்கு துணை போன நாடுகள் தாக்கப்பட்டன. அவர்தான் இதை திட்டமிட்டு செய்தது எனக் கருதி, தொடர்ந்து துரத்தி, பின்லாடனின் மறைவிடத்தை கண்டுபிடித்து கொன்றனர். ஆனால் நாம், இந்திய உயிர்களை ஈசல் போல கருதுகிறவர்கள். எனவே, இங்கு இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் குண்டு வெடிக்கலாம்.பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா பண உதவி செய்தால், ஒப்புக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். 'பண உதவியில், மூன்றில் ஒரு பங்கை நிறுத்துவோம்' என அறிவித்தால், அமெரிக்காவை பாராட்டுகிறோம்.சூடு, சொரணையற்ற நமக்கு விடிவு ஏது?
நாம்மாறுவோமா?திருமலை ராஜன், ராஜகீழ்பாக்கம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: வடக்கே ரயில் விபத்துகளும், பயங்கரவாதத் தாக்குதல்களும் தொடர்கிறது என்றால், தெற்கே தினமும், நான்கு மீனவர்கள் தாக்கப்படுகின்றனர். இவை எல்லாவற்றுக்கும் பிரதமரின் பதில், 'கவலைப்படுகிறேன்' என்பது மட்டுமே!உள்துறை அமைச்சரோ, ஒரு படி மேலே போய், 'இனி இவ்வாறு நடக்கவிடமாட்டோம்' என, சூளுரைக்கிறார். முன்பும், மும்பை விவகாரத்தில் இப்படிதான் சொல்லப்பட்டது. ஆனால், மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது.வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவோ, 'சீனா நம் நிலத்தில், சாலை அமைப்பது குறித்து, பாதிப்பில்லை' என்கிறார். கபில்சிபலோ, சொலிசிடர் ஜெனரலை நம்பாமல், தனியே ஓர் அட்வகேட்டை நியமித்துக் கொள்கிறார்.ஆனால் நாமோ, இதையெல்லாம் படித்துவிட்டு, 'அப்படியா... அடடே' என்று சொல்லிவிட்டு, நமக்கென்ன என, இருந்து விடுகிறோம்.எப்போது நாம் மாற்றிக் கொள்ளப் போகிறோம்?
விழிக்குமாரயில்வே?கே.எஸ்.குமார், விழுப்புரத்திலிருந்து எழுதுகிறார்: அகல ரயில்பாதை அமைக்கப்பட்ட பின், அதிக அளவில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. வட மாநிலங்களிலும், ரயில் தொடர்பு அதிகமாகி விட்டது. தமிழகத்திற்குள்ளும் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு வசதியாக, மேலும் சில ரயில்கள் இயக்கப்படுகின்றன. கட்டணத்திலும், வசதிகளிலும், பஸ் பயணத்தை விட சிறந்தது, ரயில் பயணம் தான். ஆனால் சமீப காலமாக, 'தண்டவாளத்தில் விரிசல்' என, செய்திகள் வெளியாவது, கவலையைத் தருகிறது. இத்தனை ஆண்டுகளாக கேள்விப் படாததை, அடிக்கடி கேள்விப்படுகிறோம். இதற்கு காரணம், எல்லா துறைகளிலும், மலிந்து விட்ட தரக்குறைவா; பாதைகள் அமைப்பதில் உபயோகிக்கப்படும் தண்டவாளங்கள் விஷயத்தில், கான்ட்ராக்ட், கமிஷன் போன்ற சாபக்கேடுகளா அல்லது மலிந்து போன மெத்தனமா?எதுவாயினும், இது லட்சக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். எனவே, ரயில்வே துறை மிகவும் கண்காணிப்புடனும், கண்டிப்புடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும்.
தமிழக தீர்ப்புமத்தியிலும் வேண்டும்!அஸ்வினி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: மன்மோகன் சிங் தலைமையில் இயங்கும் அமைச்சரவையில், பல அமைச்சர்கள், உயர்மட்ட அதிகாரிகள் மூலம், பல தரப்பட்ட ஊழல்கள் நடந்துள்ளன. சுரேஷ் கல்மாடி, ராஜா, தயாநிதி ஆகியோர், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். '2ஜி' ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் போன்ற விவகாரங்களில், பிரதமர் மன்மோகன் சிங், முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறார்.பிரதமரின் பேச்சில், வெளிப்படை இல்லை. கூட்டணி கட்சிகளின் தயவில் தான், மத்தியில் ஆட்சி நடக்க வேண்டும் என்ற கட்டாயத்தில், அக்கட்சிகளின் தவறுகளை, மன்மோகன் சிங் அரசு, கண்டு கொள்ளாமல் இருக்கிறது.மத்தியில், காங்கிரசை தவிர, வேறொரு கட்சி ஆட்சிசெய்தால், அந்த அரசை காங்கிரஸ் என்ன பாடு படுத்தியிருக்கும்! ஆனால், நம் நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள், இன்றைய மத்திய அரசை எதிர்க்க, போதுமான பலத்தை, அதிகாரத்தைக் காட்டவில்லை.ஜனநாயகம் வலுவாக இருக்க வேண்டுமானால், எதிர்க்கட்சிகளின் பங்கு அபரிமிதமாக இருக்கவேண்டும். அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாதது தான் காங்கிரசின், இத்தகைய அலட்சியமான செயல்பாட்டுக்குக் காரணம்.தமிழகத்தில், எப்படி ஒரு புரட்சி ஏற்பட்டு, ஊழல் ஆட்சி ஓரங்கட்டப்பட்டதோ, அதே நிலை மத்தியிலும் ஏற்பட்டால் தான், நாட்டுக்கு விமோசனம்.
சந்தேகம்ஏற்படுகிறதே...எஸ்.ஷண்முகநாதன், மங்கைநல்லூரிலிருந்து எழுதுகிறார்: முந்தைய, தி.மு.க., அரசு மீது, மக்களுக்கு எல்லையற்ற கோபம். ஆட்சி மாற்றம் வேண்டும் என, மக்கள் விரும்பினர். அதனால், கன்னியாகுமரி முதல், திருத்தணி வரை, தங்களுக்குள் பேசிக்கொள்ளாமலேயே, பெரிய மவுனப் புரட்சியை செய்துவிட்டனர். தி.மு.க., அரசை நீக்கி, அ.தி.மு.க.,வை, அரசுக் கட்டிலில் அமர்த்தியுள்ளனர்.இன்றைய முதல்வர் ஜெயலலிதா, தாம் பெற்ற எதிர்பாராத வெற்றிக்கு, தன் தனிப்பட்ட செல்வாக்கே காரணம் என கருதினால், அது முற்றிலும் தவறு. அவர், தன் வயது மற்றும் அனுபவத்தால், முதிர்ச்சி அடைந்திருப்பார். எனவே, இந்த முறை அவர் நல்லாட்சி தருவார் என, மக்கள் நம்புகின்றனர். முதல்வராக பொறுப்பேற்றது முதல், அவரின் நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் அந்த நம்பிக்கைக்கு, மேலும் வலு சேர்ப்பதாகவே இருந்து வருகின்றன.சமீபத்திய சில நடவடிக்கைகள் மட்டும், அவர் முந்தைய நிலையிலிருந்து மாறவில்லையோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.தமிழக நலனில் அக்கறையுள்ள பெரியவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் உயரதிகாரிகள், முதல்வரிடம், இதுபோன்ற தவறுகளை தைரியமாக எடுத்துரைக்க வேண்டும். இல்லையெனில், 'கெடுப்பார் இல்லானும் கெடும்' என்ற நிலை ஏற்பட்டுவிடும்.
மோசம், மிக மோசம்...நா.மு.நாச்சியப்பன், காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: 'மத்திய, மாநில அரசு மீது, மும்பை மக்கள் கோபம்; குண்டு வெடிப்பு தொடர்வதால் ஆவேசம்' என்ற செய்தி கண்டேன். இந்தியர்கள் அனைவருமே கோபத்தில் உள்ளனர். 'செயல்படாத பிரதமர், செயல்படாத அரசு' என்றால், மன்மோகன் கோபப்படுகிறார்.ஒருபுறம் இந்தியாவும், பாகிஸ்தானும் வெட்டித்தனமாகப் பேசிக் கொண்டிருக்கின்றன. மறுபுறம், இந்தியாவில், குறிப்பாக மும்பையில், பாகிஸ்தான் துணையுடன் குண்டு வெடித்து, அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்.
டில்லியில், உயர் தலைவர் வீட்டில் குண்டு வெடித்தால், உயிரின் அருமை தெரியும். ஆனால், இப்போது இரக்கப்படுவது, பணம் கொடுப்பது, விசாரிப்பது, கமிஷன் அமைப்பது என, காரியம் முடிந்து விடுகிறது.பார்லிமென்டை குட்டிச்சுவராக்க வந்த அப்சல் குரு, பல உயிர்களைக் கொன்ற கசாப் போன்றோர் பாதுகாப்பாக இருக்கின்றனர். இக்குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவன் பிடிபட்டாலும், அவனும் ராஜா மாதிரி இருப்பான். மேலும், மும்பையில் உள்ள பல பயங்கரவாதிகள் சொகுசாக வாழ்கின்றனர். 'தூக்குத்தண்டனை, சீனியாரிட்டி அடிப்படையில் தான் இருக்கும்' என, உள்துறை கூறுகிறது. அமைச்சரவை மோசம்; மும்பை காவல் துறை தூங்குவது மிக மோசம்!
100 அடி உயரமரங்கள் அழிப்புதூண்டியது யார்?க.ப.நாதன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தனியார் எஸ்டேட் ஊழியர்கள், வழிப்பாதைக்காக, சோலைக் காட்டின், 100 அடி உயர மரங்களை அழித்துள்ளதை அறிந்து, மிகவும் அதிர்ச்சியடைந்தேன். தேனி மாவட்டம், சின்னமனூர் வனச் சரகத்தின் சோலைக் காட்டில், பெரிய மரங்களை அழிப்பது, மிகவும் வருந்தத் தக்க செயல்.இக்காட்டிற்கு பின்புறம் தான், சபரி மலை உள்ளது. அக்டோபர் முதல், டிசம்பர் வரை, பக்தர்கள் சபரி மலைக்கு வருவதால், கேரள மாநிலத்தைச் சேர்ந்த யானைகள், சோலைக் காட்டுக்கு வந்து, தஞ்சம் புகுவது உண்டு. இயற்கை வழங்கிய கொடையான சோலைக்காட்டில், மீண்டும் இதே போல், மரங்கள் வளர்வதும், வளர்ப்பதும் அவ்வளவு சுலபமல்ல.மேலும், தனியார் எஸ்டேட் ஊழியர்கள், நடந்து செல்வதற்காக, மரங்களை வெட்டியது விரும்பத்தகாத செயல். வனத்துறையைச் சார்ந்த சில களப்பணியாளர்களின் உறுதுணை இல்லாமல், இது நடக்க வாய்ப்பில்லை. இதை ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு, மேலும் பலரும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவர்.எனவே, இவ்விஷயத்தில் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா?
கடுக்காய்க்குகடுக்காய்...க.மணி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: கறுப்புப் பணம் விவகாரம் தொடர்பாக, சிறப்புப் புலனாய்வுக் குழுவை, சுப்ரீம் கோர்ட் நியமித்ததை எதிர்த்து, மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.'சிறப்புப் புலனாய்வுக் குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது, அரசின் நடவடிக்கையில் நீதித்துறை தலையிடுவது போல உள்ளது' என, மேல்முறையீட்டுக்கு ஒரு காரணமும் கூறியுள்ளது.அரசு, உரிய நடவடிக்கையை நேர்மையாகவும், நம்பிக்கைக்குரிய வகையிலும் எடுத்திருந்தால், சுப்ரீம் கோர்ட், சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்து இருக்குமா?அரசின் அணுகுமுறை சந்தேகத்துக்கு உரியதாகவும், சுப்ரீம் கோர்ட்டுக்கே, 'கடுக்காய்' கொடுக்கக்கூடியதாக இருந்ததாலும் தானே, கோர்ட் வெகுண்டு, சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்து உள்ளது.இப்போது, கடுக்காய்க்கே கடுக்காய் கொடுப்பது போல, 'அரசின் நடவடிக்கையில் நீதித்துறை தலையிடுவது போல் உள்ளது' என, மேல் முறையீடு செய்துள்ளது.அரசு அலட்சியம் காட்டும்போது, அதைச் சுட்டிக்காட்டி திருத்தத் தான் சுப்ரீம் கோர்ட் உள்ளது. அதையும் தடுக்க நினைப்பது, கறுப்புப் பணம், இந்தியாவுக்குத் திரும்ப வரவே கூடாது என, அரசு கருதுவதாகவே எண்ணத் தோன்றுகிறது.
மிஞ்சியதுஏமாற்றம்!என்.கந்தசாமி, மதுரையிலிருந்து எழுதுகிறார்: மத்திய அமைச்சரவையில், பிரதமர் மன்மோகன் சிங், அதிரடி மாற்றம் செய்யப் போகிறார் என எதிர்பார்த்தோருக்கு, பெருத்த ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது.
மத்திய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் ஏற்பட்ட புகைச்சல் காரணமாக, மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியை மாற்றியதும், சுற்றுப்புற சூழல் அமைச்சருக்கு, வேறு துறையை ஒதுக்கியதும் தான் பெரிய மாற்றம் என்று கூறுகின்றனர். அப்படியிருந்தும், தி.மு.க.,வுக்கு இரண்டு இடங்களை, பிரதமர் மன்மோகன் சிங், ரிசர்வேஷன் செய்து வைத்திருக்கிறார்.தயாநிதியும், ராஜாவும் தொலைத் தொடர்பு அமைச்சர்களாக இருந்தபோது அடித்த கொள்ளையால், மத்திய அமைச்சர் பதவியே வேண்டாம் என்ற கசப்பான முடிவுக்கு, கருணாநிதி வந்திருப்பதில் வியப்பில்லை.தமிழகத்தைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜனுக்கு, இப்போது அதிர்ஷ்டம் அடித்ததால், மத்திய அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது. இனிமேல், மத்திய அமைச்சரவையில் எந்த மாற்றமும் இருக்காது. இதுதான் கடைசி மாற்றம் என்று, அடித்துச் சொல்லி விட்டார் மன்மோகன் சிங். அந்த அளவுக்கு சோனியாவுக்கும், மன்மோகன் சிங்குக்கும் மனப் போராட்டம் நடந்து முடிந்திருக்கிறது.இருந்த புகழையெல்லாம் இழந்தது தான், மன்மோகன் சிங் பிரதமராகி அடைந்த பலன். பாவம்,'சட்டி சுட்டதடா கை விட்டதா' என்று, பிரதமர் பதவியையும் விடமுடியாமல், தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்.
கேரவன்கொடுங்கள்!சிவ.நேசன், செங்கல்பட்டிலிருந்து எழுதுகிறார்: திகார் சிறையை சொகுசுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கனிமொழிக்கு உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளதாக கருணாநிதி கூறியது, கனிமொழியின் அறையில் குளிர் சாதன வசதி செய்யப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
தற்போது, முதுகுவலிக்காக பிரத்யேக மெத்தை கோரப்பட்டு, 'சிறை விதிகள் அனுமதித்தால், வழங்கலாம்' என, கோர்ட் உத்தரவிட்டுள்ளது.கருணாநிதி முதல்வரான பின் பிறந்தவர் கனிமொழி. எனவே, சிறு வயதில் கூட, கஷ்டங்களை அனுபவிக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டியிருக்காது. தமிழக தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழக முன்னாள் முதல்வர், துணை முதல்வர் பயன்படுத்திய குளிர்சாதன, சொகுசு மெத்தையோடு கூடிய பிரசார, 'கேரவன்கள்' தற்போது சும்மா இருக்கின்றன. அவற்றில் ஒரு கேரவனை கனிமொழிக்கு அனுப்பினால், சிறைவாசத்தின் பின் விளைவுகள் குறையும்.

