PUBLISHED ON : ஜூலை 27, 2011 12:00 AM

எளிமை, நேர்மை இருந்தால்...ஆர்.நடராஜன், திண்டுக்கலிலிருந்து எழுதுகிறார்: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின், பிரதம சீடர்களான முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமும், கே.என்.நேருவும், நில அபகரிப்பு ஊழலில் சிக்கியுள்ளனர்.
மத்திய அமைச்சர் அழகிரியின் நெருங்கிய நண்பரும், இந்த ஊழலில் சம்பந்தப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
'தமிழக அரசு, வேண்டுமென்றே பொய்வழக்குப் போட்டுள்ளது' என்று கூறும் இவர், தங்கள் பக்கம் நியாயம் இருந்தால், தலைமறைவாகத் தேவையில்லை; வழக்குகளை நேரடியாக சந்திக்கலாம். இவை, ஏறத்தாழ, 50 ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டுகின்றன.முன்பு, 1963ல் தமிழக முதல்வராக இருந்த காமராஜரின் மீது, 'ஐதராபாத் வங்கி ஒன்றில், மிகுந்த பணம் சேமித்து வைத்துள்ளார்' என்று, ஒரு அபாண்ட பழி சுமத்தினார் கருணாநிதி. உடன் பத்திரிகை நிருபர்கள், காமராஜரை அவரது இல்லத்தில் சந்தித்து, கருணாநிதியின் அறிக்கை குறித்து கருத்து கேட்டனர்.'என் வீடு திறந்த புத்தகம். வீட்டிலுள்ள அறைகள், பீரோவின் சாவிகளைத் தருகிறேன்.
உங்கள் முன்பே கருணாநிதி குறிப்பிடும் ஐதராபாத் வங்கிக்குப் பேசுகிறேன். நீங்கள் அங்கேயும் விசாரிக்கலாம். என்ன கேட்டாலும் சொல்கிறேன்' என, காமராஜர் பதிலளித்தார்.வந்திருந்த நிருபர்கள் அவரிடம், 'உங்கள் நேர்மை உலகறிந்தது. தவறாக நாங்கள் வந்ததற்கு எங்களை மன்னிக்கவும்' என கூறிவிட்டு சென்றனர். இச்செய்தி, மறுதினம், எல்லா தமிழகப்பத்திரிகைகளிலும் வெளிவந்ததை அன்றைய தமிழக மக்கள் நன்கு அறிவர்.அதே நேரம், பல ஆண்டுகளாக காங்கிரஸ் எம்.எல். ஏ.,வாக, மிகுந்த புகழுடன் இருந்தவரும், சிறந்த பேச்சாளரும், காமராஜரின் எளிய தொண்டராகவும் விளங்கிய, அனந்தநாயகி பற்றி, கருணாநிதி தன் பத்திரிகையில் அவதூறாக எழுதியதையும், பொதுக்கூட்டங்களில் பேசியதையும், தமிழக வரலாறு மறக்காது.
அதற்கு அனந்தநாயகி, 'நான் ஏதேனும் தவறு செய்திருந்தால், நான் வணங்கும் கடவுள் என்னை தண்டிப்பார். நான் வேறு எந்த அறிக்கையும் தர அவசியமில்லை' என பதிலளித்ததும், அந்த விவகாரம் உடன் அடங்கிவிட்டது.பணம், சொத்து இவை மட்டும் வாழ்க்கை இல்லை என, கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை, மக்களுக்கு உணர்த்தும் . தியாகம், எளிமை, பொதுவாழ்வில் நேர்மை இருந்தால், வரலாறு மறக்கமுடியாத புகழை அள்ளித்தரும்.
சீன கம்பெனிமோட்டாரா:அபாயம் உண்டு!வாமனப்பிரியன், கருங்குழியிலிருந்து எழுதுகிறார்: இலவச கிரைண்டர் வழங்க, சீன நிறுவனங்களும் முன் வந்துள்ளன. இது, ஆட்சியாளர்களுக்கு, 'ரெட்' சிக்னல்.சீன நிறுவனங்கள், பல வித தரங்களில் நாடுகளுக்கு ஏற்ப பொருட்களை தயாரிக்கின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு, உயர்தரமான பொருட்களையும், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு, மூன்றாம் தர பொருட்களையும், ஏற்றுமதி செய்வது, சீன நிறுவனங்களின் வியாபார உத்தி.அண்மையில் நண்பர் ஒருவர், 'என் நிறுவனத்துக்கு மோட்டார் வாங்க, சென்னைக்குச் சென்றேன்.
பிரபல கம்பெனிகள் தயாரிக்கும் மோட்டார்களின் விலை யை விட, பாதி விலையில் சீன மோட்டார்கள் சந்தையில் கிடைப்பதாக கடை உரிமையாளர் கூறினார். ஆனால் அவை, 'யூஸ் அண்ட் த்ரோ' ரகங்கள். அப்பாவி மக்கள், இதை உணராமல் வாங்கி, பணத்தை இழக்கின்றனர்' என்று வருத்தப்பட்டார்.தமிழக அரசு, குறைவான விலையில் கிடைக்கிறது என்பதற்காக, சீன மோட்டாரோடு கிரைண்டர் வாங்கினால், நாள் கணக்கில் தான் மாவு அரைக்கும்; வருடக்கணக்கில் அரைக்காது. இதனால், மக்களிடையே, அரசுக்கு அவப்பெயர் தான் உண்டாகும்.உள்ளூர் கம்பெனிகளிடம் வாங்கினால், அரசு அவர்களின் சட்டையைப் பிடித்து உலுக்கி கேட்க முடியும். சீன கம்பெனிகள், தமிழக அரசை அசட்டை செய்யவே வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
விரைந்துமுடிக்க வேண்டும்!ரா.தங்கசாமி, அகஸ்தியர்பட்டி, நெல்லை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: சுப்ரீம் கோர்ட், '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் மேற்கொள்ளும் நடவடிக்கையைப் போல், தமிழகத்தில் நடந்துள்ள, மிகப் பெரிய குற்றமான நில மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள், எந்த உயர் அந்தஸ்தில் இருந்தாலும், அவர்கள் அனைவரும் பாகுபாடின்றி தண்டிக்கப்பட வேண்டும்.தமிழகத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களிலும், தனிப்பிரிவிலும் கொடுக்கப்பட்டுள்ள புகார்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, அத்தனையும் தீர விசாரணை செய்யப்பட்டு, குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்கே மிகுந்த காலம் தேவைப்படும் என்றே தோன்றுகிறது.
பணிச் சுமையால் தவறுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால், நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படும். மேலும், குற்றம் புரிந்தவர்களும், சுப்ரீம்கோர்ட் வரை சென்று, கால விரையம் ஏற்படுத்துவர்.நில மோசடிப் புகார்களின் விசாரணையை முடித்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வழக்குகளையும் ஒருங்கிணைத்து, ஐகோர்ட்டின் மதுரைக் கிளையில், தனிப்பிரிவு ஏற்படுத்தி, தொடர்ந்து விசாரிக்க வேண்டும். யாரையும் பழிவாங்கும் எண்ணமில்லாமல், விசாரணைக்கான காலம் நிர்ணயம் செய்ய வேண்டும்.மேலும், போதுமான சட்டத்திருத்தங்கள் கொண்டு வந்து, விரைந்து நீதி வழங்கி, இழந்த நிலங்களை மீட்க ஆவன செய்ய வேண்டும். அப்போது தான், மோசடி பேர்வழிகளிடமிருந்து விளை நிலங்களை மீட்க முடியும். விரைந்து நீதி வழங்குவதில், தமிழகம் முன்மாதிரியாக திகழும்.
சட்டியில்இல்லையே...நா.மு.நாச்சியப்பன், காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: ஐந்து வகுப்புகள் கொண்ட பள்ளிக்கு, ஓர் ஆசிரியர் என்பது, பல ஆண்டுகளாக தொடர்கதையாக உள்ளது. பல பள்ளிகளில், இப்போதும் இதே நிலை தான் காணப்படுகிறது.நான் சிவகங்கை ஒன்றியப் பள்ளிகளில், பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளேன். அப்போதே, ஒரு பள்ளிக்கு ஓர், இரு ஆசிரியர்கள் மட்டுமே என்ற கொடுமையை பார்த்திருக்கிறேன். இதற்கு உதவிக்கல்வி அலுவலரையோ, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரையோ குறைசொல்ல முடியாது; அவர்களால் என்ன செய்ய முடியும்? சட்டியிலேயே உணவு இல்லை; அகப்பையில் எப்படி வரும்?
தமிழகத்தின் பெரும்பாலான மாணவர்கள், அரசுப் பள்ளியில் தான் பயில்கின்றனர். ஆனால், இப்பள்ளிகளில், எதிலும் தன்னிறைவு இல்லை. பாலைவனங்களாக உள் ளன.தமிழகக் கல்வித்துறை, முதல்வரின் நேரடிப் பார்வையில் வர வேண்டும். அப்போதுதான், தமிழகக் கல்வித் தரம் உயரும். அதுவரை, தன்னிறைவு பெறாத பள்ளிகள் தான் மிஞ்சும்.