PUBLISHED ON : ஆக 24, 2011 12:00 AM

ஒன்று சேர்வோம்: வெற்றி பெறுவோம்!
தாரணன், ஈரோட்டிலிருந்து எழுதுகிறார்: அன்னா ஹசாரேயின் ஊழல் ஒழிப்பு இயக்கம், இரண்டாவது சுதந்திரப் போராட்டமாக எழுச்சி பெற்றிருக்கிறது. இந்திய மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, ஊழலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர். இதை உணராமல், மத்திய அரசும், அதன் அமைச்சர்களும், பார்லிமென்டின் உரிமைகள், சட்டத்தின் மாட்சி பற்றி முழங்கிக் கொண்டிருக்கின்றனர். நாளொருமேனியும், பொழுதொரு
வண்ணமும், சட்டத்தை அவமதிப்பதும், அலங்கோலப்படுத்துவதும், அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் தான். அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டியது, காலத்தின் கட்டாயமாகும். 'பார்லிமென்ட், மக்களின் கருத்தை பிரதிபலிக்க வேண்டும்' என, மூத்த வழக்கறிஞர் துளசி கூறியிருக்கிறார். அது, அரசியல்வாதிகளின் அபிலாஷைகளை நிறைவேற்றும் இடமாக மாறிவிடக் கூடாது. அதிகாரமும், செல்வாக்கும், தங்களிடம் மட்டுமே குவிந்திருக்க வேண்டுமே தவிர, மக்களிடம் போய் விடக்கூடாது என்பதில், அரசியல்வாதிகள் அனைவரும் ஒருமித்த கருத்துடையவர்களாயிருக்கின்றனர். பார்லிமென்ட் தான் உயர்ந்தது எனக் கூறிக் கொண்டு, அதை முடக்குவதும், வீணடிப்பதும் அரசியல்வாதிகள் தான். இதை, மக்கள் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
அரசியல்வாதிகளின் கடைசி குற்றச்சாட்டு, மக்கள் ஆட்சியில் தேர்தல் மூலம் தான் எதையும் மாற்ற வேண்டும் என்பது. இன்றைய சூழலில், தேர்தலில் எவ்வளவு தில்லு முல்லுகள், வன்முறைகள், லஞ்சம், அதிகார துஷ்பிரயோகங்கள் நடக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், நேர்மையான மனிதர்கள் தேர்தலில் வெற்றி பெற முடியுமா? உலகப் புகழ் பெற்ற பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங்கினாலேயே வெற்றி பெற முடியவில்லை. லாலுபிரசாத்துகளும், கிரிமினல் குற்றம் புரிந்து, சிறையில் இருக்கும் வன்முறையாளர் மட்டுமே வெற்றி பெறக்கூடிய, விந்தையான தேர்தல் முறை நம்முடையது.இதில், அன்னா ஹசாரே, சாந்தி பூஷன் போன்ற நல்ல சமூக சிந்தனையாளர்கள், தேர்தலில் வெற்றி பெற்று வருவது அரிது. மக்கள் போராட்டத்தின் மூலமே அரசியல் ஊழல்களையும், லஞ்ச லாவண்யங்களையும், நேர்மையற்ற அரசையும் மாற்ற முடியும். அதற்கான தருணம் இதுவே. மக்கள் அனைவரும் ஒன்று கூடுவோம்; வெற்றி பெறுவோம்.
ராம்தேவ் அல்ல ஹசாரே!
வீ.சுந்தரமகாலிங்கம், திருவனந்தபுரத்திலிருந்து எழுதுகிறார்: லோக்பால் மசோதாவின் வரம்பிற்குள் பிரதமர், நீதிபதிகள் சேர்க்கப்பட வேண்டும் என்பது, ஹசாரேயின் முக்கிய வேண்டுகோள். இவர்கள், சட்டத்திற்கு மேலானவர்களல்ல. இவர்களை விடுத்து, ஊழல் ஒழிப்பு மசோதா நிறைவேற்றுவதில் அர்த்தமில்லை; பிரயோஜனமும் இல்லை. எனவே, அரசு ஆலோசனை செய்து, இவர்களையும் உட்படுத்த வேண்டும்.
பாபா ராம் தேவ் நடத்திய கறுப்புப் பண எதிர்ப்புப் போராட்டம் போன்று, ஹசாரேயை அரசால் ஒழிக்க முடியாது. நாடெங்கும், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். அரசு அடக்குமுறை செய்தால், மக்கள் போராட்டம், வன்முறையாகி விடலாம். எனவே, அதைத் தவிர்ப்பது நல்லது. லண்டனில், போலீசாரால் ஒருவர் சுடப்பட்டதால், அது, பெரும் போராட்டமாக மாறி, லண்டனே எரிந்தது. நாகரிகமான, ஒழுக்கமான ஜனநாயகமுள்ள மக்களே அங்கே மாறி வருகின்றனர் என்பதையே, இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. மத்திய அரசு கவுரவம் பார்க்காமல், உண்மை நிலையை உணர்ந்து, அறிவுப்பூர்வமாகச் செயல்பட வேண்டிய தருணம் இது.
மக்களிடம் மனப்புரட்சி தேவை!
எஸ்.ராமன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: நாளுக்கு நாள், ஏறி வரும் தங்கத்தின் விலை பிரமிக்க வைக்கிறது. சவரனுக்கு, 20 ஆயிரம் ரூபாயை தொட்டு விட்ட தங்கம், இனி பலருக்கு எட்டாக் கனி தான். 'பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கிறேன்' என்ற வழிமொழியை, நடைமுறைப் படுத்த வேண்டிய தருணம் வந்து விட்டது.
இந்தியாவில், நடுத்தரக் குடும்பங்களில் கூட, 10 சவரன் நகை இல்லாமல், பெண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பினால், கவுரவ குறைச்சல் என்ற எண்ணம் தலை தூக்கி நிற்கிறது. கந்து வட்டி கடனில் தான், பல திருமணங்கள் நடந்தேறுகின்றன. இதற்காக நிலங்களும், வீடுகளும் அடமானம் வைக்கப்பட்டு, பின், வட்டி கட்ட முடியாமல், அவை மூழ்கிப்போகின்றன. தங்கத்தின் மீதிருக்கும் பற்றை விட்டொழித்தால், நடுத்தர வர்க்கத்துக்கு பாதி துன்பங்கள் குறையும். வல்லரசு நாடுகளின் பொருளாதார ஏற்ற தாழ்வுகளுக்கு ஏற்ப, தங்கத்தின் விலை ஆட்டம் போடுகிறது. அந்த ஆட்டங்களிலிருந்து, நாம் விலகி நிற்பதே, விவேகமான செயல். தங்க நகைகள், முதலீடு மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உதவும் சொத்தாக கருதப்படுகிறது. இந்த காரணங்களுக்காக, பெற்றோர், திருமணத்தின் போது, தங்கள் பெண்ணிற்கு மனம் உவந்து அளிக்கும் தங்க நகைகளுக்கு பதில், நீண்ட கால, அரசு கடன் பத்திரங்கள், வங்கி வைப்பு நிதிபத்திரங்களை பரிசாக வழங்கலாம். இவைகளை வாங்கும் போது, செய்கூலி இல்லை. முதலீடாக மட்டுமில்லாமல், தொடர்ந்து வட்டி வருவாயை அளிக்கும் இவைகளை, கழுத்து சங்கிலியைப் போல், திருடர்கள் அறுத்து செல்ல முடியாது. நெருக்கடி தருணங்களில் இவைகளின் மீது, குறைந்த வட்டியில் கடன் வாங்கும் வசதிகளும் உள்ளன.விண்ணுக்கு விலை செல்லும் தங்கத்தை துரத்துவதை விட்டு விட்டு, நம் பொருளாதார சக்திக்குட்பட்ட முதலீடுகளில் கவனம் செலுத்துவது தான், நடுத்தர வர்க்கத்துக்கு நல்லது.
இம்மாதிரி முதலீடுகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும்.தங்கத்தை ஒதுக்கும், மனப்புரட்சி தேவை!
தேர்தல்: ஹசாரே முன்வர வேண்டும்!
ஆர்.சம்பத்குமார், சென்னையிலிருந்து எழுதுகிறார்: காந்தியவாதி ஹசாரே, தன் இயக்கத்தைத் துவக்கிய போது, துள்ளிக் குதித்து மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன். அவருக்கு ஆதரவாக, தன்னார்வத் தொண்டு நிறுவனமான, 'ஊழலுக்கு எதிரான இந்தியா' எனும் அமைப்பு, சென்னையில் நடத்தி வரும் கையெழுத்து வேட்டை, அமைதி நடைப்பயணம் ஆகிய சிலவற்றில் பங்கேற்ற மூத்த குடிமகன்.மக்கள் மத்தியில், குறிப்பாக, 30திலிருந்து, 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில், ஊழல் பற்றிய விழிப்புணர்வை, ஹசாரேவின் இயக்கம் பெருமளவில் ஏற்படுத்தியுள்ளது, பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இது குறையாதவாறு, கவனத்துடன், தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு, 2014ல், தேர்தல் கோதாவில், ஹசாரே இறங்க வேண்டும். ஊழல்வாதிகளை மக்கள் தூக்கி எறிவர் என்பதற்கு, தமிழக சட்டசபைத் தேர்தல் ஒரு சான்று.அதேபோல், ஹசாரே சுட்டிக் காட்டும் நபர்களுக்கு, அடுத்த தேர்தலில் மக்கள் ஓட்டளிப்பர். அதற்கான ஆயத்தங்களில், அவர் ஈடுபட வேண்டும்.