PUBLISHED ON : செப் 02, 2011 12:00 AM

தி.மு.க.,வுக்கு இதுவும் அவமானம்!
அ.அப்துல் ரஹீம், அனகாபுத்தூர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'பொய் நில மோசடி புகாரின்படி, தி.மு.க., தொண்டர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள் என, பலரை சிறையில் அடைக்கின்றனர்' என, தி.மு.க., சார்பில் குற்றம் சாட்டப்பட்டு, மாநிலம் தழுவிய போராட்டங்கள், கூட்டங்கள் நடந்து வருகின்றன.
தி.மு.க.,வின் பிரச்சார பீரங்கியாக வலம் வந்த நடிகர் வடிவேலுவும் நில அபகரிப்பு புகாரில் சிக்கி, அந்த நிலத்தை, அவர் மேல் குற்றம் சுமத்திய ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடமே, திருப்பிக் கொடுத்துள்ளார்.நடிகர் வடிவேலு, 2002ல், சர்ச்சைக்குள்ளான அந்த நிலத்தை வாங்கி, பின், 2009, பிப்ரவரியில் தன் மனைவிக்கு தானமாகவும், பின், அவர்கள் இருவரும் சேர்ந்து, அதே ஆண்டு, செப்டம்பரில் தங்கள் மகனுக்கு தானமாகவும் கொடுத்துள்ளனர்.
எவ்வளவு மாறாட்டங்கள்! ஆனால், அந்த நிலம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திடம், (டிக் நிறுவனம்) 2000த்திற்கு முன், வாங்கியதாக, அதன் அதிகாரி, 2006ல் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், அப்போதெல்லாம் செவிசாய்க்காமல், தி.மு.க.,வின் போர்வையில் வலம்வந்து, இந்த ஆட்சியில் திருப்பிக் கொடுப்பதால், இது சுத்தமான நில அபகரிப்பு என, தெளிவாக தெரிகிறது.'பொய்ப் புகார் அடிப்படையில் நில மோசடி' என, சர்வகாலமும் கதறும் தி.மு.க.,வினர், இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றனர்? 'வைகைப்புயல்' இதன் மூலம், 'புரட்டுப் புயலாகி' இன்று, 'சமாதானப் புயலாக' மாறுவதன் மர்மம் என்னவென்று மக்களுக்குப் புரியாதா?இன்னும் போகப் போக, எத்தனை பேர் இப்படி வெள்ளைப் புறாக்களை பறக்க விடுவரோ? ஏற்கனவே, உலகப் புகழ் ஊழலில் சிக்கித் தவிக்கும் தி.மு.க.,விற்கு, இது ஒரு பெருத்த அவமானம்.போராட்டங்களை விட்டு விட்டு, இப்படி சமாதானப் பறவையாக தி.மு.க.,வினர் மாறுவதே, 'கம்பி' எண்ணுவதை தவிர்க்க வழி.
மீறல்களும்நடந்தன...கே.எஸ்.குமார், சென்னையிலிருந்து எழுதுகிறார்: பாபா ராம்தேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு; பின் தடியடி. அன்னா ஹசாரேவுக்கு, முதலில் கைது வைபவம், பின் சட்ட விதிகளுக்கு மீறிய உபசாரம். முன், காங்கிரசுக்கு, 'நல்ல' கேப்டன் இல்லாதிருந்தது. இப்போது, அந்த கப்பலுக்கு கேப்டனே இல்லாது போய்விட்டது!ஏதோ ஒரு விதத்தில், இந்தியா முழுவதும் ஊழலுக்கு எதிரான போராட்டங்களில், மக்கள் நேரடியாக களம் இறங்கி விட்டனர். இதன் வேகம் அதிகரித்தது, வட மாநில, 'டிவி' சேனல்கள் மூலம் தான் என்பதில் ஐயமில்லை.நம்மவர் இன்னும், அழுமூஞ்சி சீரியல்களிலிருந்தும், 'மயில் மான்' ஆட்டத்தில் இருந்தும், மோசடி மன்னர்கள் வரிசையாக சிறை புகும் உணர்ச்சி மிகு காட்சிகளிலிருந்தும், வெளி வரவில்லை!
பா.ஜ., தலைவர் அத்வானி, பிரதமரை ராஜினாமா செய்யக் கூறியும், தேர்தலை எதிர் நோக்கும் படியும், 'அட்வைஸ்' செய்தது வியப்பளிக்கிறது!
தேர்தல் வந்துவிட்டால், அன்னா ஹசாரே இயக்கத்தின் நோக்கம் நிறைவேறிவிடுமா என்ன? எதிர்பாராத வகையில், வரவேற்கத்தக்க அளவில், அன்னாவின் இயக்கம், மக்கள் கையில் வந்துவிட்டது. அதை, அரசியலாக்காமல், அரசியல் முதிர்ச்சியுடன் கையாளவேண்டியது, எதிர்க்கட்சிகளின் கடமை.மேலும், பிரதமர், கபில் சிபல், சிதம்பரம் மூவரையும், 'த்ரீ இடியட்ஸ்' என, போஸ்டர் போட்டதையும், சோனியா என்ற குரங்காட்டி கையில், மன்மோகன் குரங்காகச் சித்தரிக்கப்பட்டதையும், அன்னா குழு கண்டித்திருக்க வேண்டும்.
ஊழலை ஒழிக்கசட்டம் போதுமா?
எஸ்.ராமன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: நம் சமுதாயத்தில், இது வரை பெரும் எதிர்ப்புகள் இல்லாமல், பல மட்டங்களிலும் ஊழல் என்ற வியாதி புரையோடிக்கிடக்கிறது. நோய் முற்றிய நிலையில், அதை களைந்தெறிய, அன்னா ஹசாரே போன்ற இயக்கங்கள் சிலிர்த்து எழுந்து, மக்களின் ஆதரவை பெற்றுள்ளன.இந்த இயக்கங்களின் நோக்கங்கள் முழு வெற்றி அடைய, ஊழல் வாதிகளை கடுமையாக தண்டிக்க சட்டம் இயற்றினால் மட்டும் போதாது. இம்மாதிரி தவறுகள் நடப்பதற்கு காரணமான காரணி
களின் மறுபக்கத்தையும் ஆராய்ந்து, அறிய வேண்டும்.பணிகள் உடனடியாக முடிவதற்காக, நம்மில் பலர், லஞ்சம் கொடுப்பது என்ற, குறுக்கு வழியை நாடவேண்டாம். நம்மிடம் தவறு இருந்தால், அதை திருத்த முயலவேண்டுமே தவிர, லஞ்சம் வழங்கி, காரியத்தை சாதிக்கும் மனப்பான்மையை அறவே விட்டொழிக்க வேண்டும்.
ஆரம்ப கல்விநிலை முதற்கொண்டு, லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு என்ற தாரக மந்திரத்தை, குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும்.இந்த விஷயத்தில், கல்வியாளர்கள் மாணவர்களுக்கும், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கும், முன்னோடியாக செயல்படவேண்டுமே தவிர, அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கி, அவர்களை ஊக்கப்படுத்த முயலக்கூடாது. கொடுப்பவர்களால் தான், வாங்குபவர்கள் வளர்கின்றனர்.
ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு, ஒவ்வொரு இந்தியனுக்கும் உரியது. 'லஞ்சம் கொடுப்பதை தவிர்' என்பது, ஒவ்வொரு இந்தியனும் தனக்கு தானே இட்டுக் கொள்ளும் கட்டளையாக அமைய வேண்டும்.மக்கள் பிரதிநிதிகளால் நிறைவேற்றப்படும் சட்டங்களைவிட, மக்களின் நல்ல மன மாற்றங்களுக்கு, சமுதாயத்தை சீர்படுத்தும் வலிமை அதிகம் என்பது உண்மை.
ஊருக்குத் தான்உபதேசம்...
ம.செ.கவிதைக்கண்ணன், சிவகங்கையிலிருந்து எழுதுகிறார்: 'சித்திரை முதல் நாள் தான், தமிழ்ப் புத்தாண்டு' என, தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்; ஆனால், 'தி.மு.க.,வினருக்கு, தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு' என, கருணாநிதி கூறியுள்ளார்; அதுபற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால், கருணாநிதி கூறுவதை, அவருடைய குடும்ப, 'டிவி' சேனல்கள் கடைபிடிக்கின்றனவா?
கருணாநிதி ஆட்சியில், தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளுக்கு மாற்றப்பட்டது. ஆனால், அவரது குடும்ப, 'டிவி' சேனல்கள், 'சித்திரைத் திருநாள் சிறப்பு நிகழ்ச்சி' என, சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின.'தமிழ்ப் புத்தாண்டு, சித்திரை முதல் நாள் இல்லை' என, கருணாநிதி அறிவித்துவிட்டாரே, அப்புறம் நிகழ்ச்சிகளை நடத்தி, விளம்பரம் மூலம் வருமானம் பார்ப்பது ஏன்?வருமானம் வருகிறது என்றால், இவர்களுக்கு கொள்கையாவது, வெங்காயமாவது. ஊருக்கு உபதேசம் செய்வதை கருணாநிதி விட்டுவிட்டு, தன் குடும்ப சேனல்களுக்கு, 'காசுக்காகக் கொள்கையை குழிதோண்டி புதைக்காதீர்' என, அறிவுரை கூறட்டும்.