PUBLISHED ON : பிப் 01, 2024 12:00 AM
கே.மணிவண்ணன், நடுபாளையம், கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சமீபத்தில் அளித்த பேட்டியில், 'வரும் தேர்தலில் மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடக்காது; ஜனநாயகத்தை காக்க, மக்களுக்கு இதுவே இறுதி வாய்ப்பு' என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.
* கடந்த, 1975ல் இந்திரா ஆட்சியில் எமர்ஜென்சியை கொண்டு வந்து, நாடு முழுதும் எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்த போது ஜனநாயகம் காக்கப்பட்டதா...?
* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, 90 முறை கலைத்தபோது ஜனநாயகம் காக்கப்பட்டதா...?
* தங்களுக்கு பிடிக்காத மாநில அரசுகளை கலைத்ததன் வாயிலாக சட்டசபைக்கும், பார்லிமென்ட்டுக்கும் ஒரே நேரத்தில் நடந்த தேர்தலுக்கு சாவுமணி அடிக்கப்பட்டதே... அப்போது ஜனநாயகம் காக்கப்பட்டதா...?
* சீக்கிய பாதுகாப்பு வீரர்களால், இந்திரா சுடப்பட்டு இறந்த போது, நாடு முழுதும் கலவர தீயை மூட்டி, அப்பாவி சீக்கியர்கள், 3,000 பேரை கொன்று குவித்த போது ஜனநாயகம் காக்கப்பட்டதா...?
* இலங்கையில் தம் தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவித்த போது ஜனநாயகம் காக்கப்பட்டதா...?
* அதிகாரத்தை மத்தியில் குவித்து வைத்து, மாநிலங்களை கை ஏந்தும் பிச்சைக்காரர்களாக வைத்த போது ஜனநாயகம் காக்கப்பட்டதா...?
* மிக சிறந்த பொருளாதார மேதையான மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த, 10 ஆண்டு காலமும், அவரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காத போது,
ஜனநாயகம் காக்கப்பட்டதா...?
இப்படி, நாட்டை 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட காங்., ஆட்சியில் நடந்த பல ஜனநாயக விரோத செயல்களை
பட்டியல் போட்டு கொண்டே சென்றால், பக்கங்கள் போதாது.ஆகவே, ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளிய காங்கிரஸ் கட்சிக்கு, ஜனநாயகத்தை பற்றி பேச சிறிதும் தகுதியில்லை.
குற்றவாளிகளுக்கு ஜாமின் தர கூடாது!
எஸ்.செபஸ்டின், சிவகாசி,விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
* சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில் கம்பியால், ஐந்து பேரை தாக்கி, 60 சவரன் நகைகள் கொள்ளை
* கோவை ஆர்.எஸ்.புரத்தில், குஜராத்தைச் சேர்ந்த பருத்தி வியாபாரியின் மனைவி, மகன் மற்றும் பணிப்பெண் ஆகியோரை கட்டிப் போட்டு, 9 லட்சம் ரூபாய் மற்றும் 37 சவரன் கொள்ளை
* கான்ட்ராக்டர் மனைவியை கொலை செய்து தாலியை பறித்த கும்பல்
* நாகர்கோவில், பிளசன்ட் நகரில் டாக்டர் வீட்டில், 90 சவரன் மற்றும் ரொக்கம் கொள்ளைமேற்கண்ட செய்திகள் அனைத்தும் ஜன., 27ம் தேதி, 'தினமலர்' நாளிதழில் வெளியானவை. மொத்தத்தில் தமிழகத்தில் கொலை, கொள்ளை
மற்றும் அராஜகங்கள் சர்வ சாதாரணமாக தினமும்அரங்கேறுகின்றன. மக்களும், வியாபாரிகளும் எப்போது, என்ன நடக்கும் என்ற பீதியிலேயே இருக்க வேண்டி உள்ளது.இதற்கெல்லாம் காரணம்,நீதிமன்றங்கள் மீதோ, காவல் துறையினர் மீதோ, குற்றவாளிகளுக்கு பயம் என்பது சிறிதும் இல்லாமல் போய் விட்டது. ஒரு கொலை குற்றவாளியையோ, கொள்ளை குற்ற வாளியையோ கைது செய்து விசாரணை செய்தால், அவர் மீது ஏற்கனவே
பல குற்றங்கள் நிலுவையில் இருப்பதாகவும், தற்போது ஜாமினில் வெளியில் வந்துள்ளதாகவும்
காவல் துறையினர் கூறுகின்றனர்.
ஏற்கனவே, அவர் செய்த முதல் குற்றத்திலேயே தண்டனை கிடைத்திருந்தால், பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்; பல கொள்ளைகள் தடுக்கப்பட்டிருக்கும். எனவே, குற்றவாளிகளுக்கு எளிதாக ஜாமின் கிடைப்பதாலும், எப்படியும்தண்டனை கிடைக்க பல ஆண்டுகள் ஆகலாம். அதற்குள் நம் ஆயுளும் முடிந்து விடும் என்ற தைரியத்திலும், குற்றச் செயலை செய்ய துணிகின்றனர். மேலும், 'குற்றவாளிகளை காவல் துறையினர் அடிக்கவோ, துன்புறுத்தவோ கூடாது; கனிவுடன் விசாரிக்க வேண்டும்' எனவும்
சட்டம் கூறுகிறது.இது எல்லாவற்றையும் தாண்டி, தண்டனை கிடைத்தாலும், சிறையில் குற்றவாளிகளுக்கு வேண்டிய சகல வசதிகளும் கிடைக்கின்றன. எனவே தான், குற்ற வாளிகளும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றனர். இதற்கு முடிவு காண வேண்டுமானால், குற்றவாளிகளுக்கு ஜாமின் கொடுக்காமல் விரைவாக, கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்; மேலும் சிறைவாசம் என்பது, கடும்
தண்டனையாக இருக்க வேண்டும். அப்போது தான், குற்றங்கள் இல்லாத தமிழகம் சாத்தியமாகும்.
தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மத நல்லிணக்கத்தோடு கூடி வாழ்வோம்' என்று, குடியரசு தினத்தன்று இப்பகுதியில் சென்னை வாசகி எழுதிய கடிதம் இடம் பெற்றிருந்தது. அதற்கு பொருத்தமாக, 'சொல்லாமலே செய்வோம்' என்பது போல, சிலிர்க்க வைக்கும் சம்பவம் ஒன்று நம் தமிழகத்தில் நடந்திருக்கிறது...
காரைக்குடி அருகே ஆலம்பட்டு - குறுந்தம்பட்டு கிராமத்தில், 350 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் ஒன்று, பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா அன்று, அப்பகுதியை சேர்ந்த ஹிந்து பெண்கள் தேங்காய், பழங்கள், இனிப்புகள் என்று சீர்வரிசை தட்டுகளை எடுத்து வந்து, மசூதியில் கொடுத்து மரியாதை செலுத்தி இருக்கின்றனர். உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா பள்ளிவாசலை திறந்து வைத்ததுடன், குடியரசு தின விழாவை ஒட்டி, பள்ளிவாசல் வளாகத்தில் தேசியக் கொடியையும் ஏற்றி இருக்கிறார். தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என்று, இரு சமுதாய மக்களுமே நல்லிணக்கம் காட்டிய இவ்விழா, 75ம் ஆண்டு குடியரசு தின விழாவின், 'ஹைலைட்'டாக
அமைந்திருந்தது.லோக்சபா தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, தேசத்தின் வளர்ச்சிக்கான கொள்கைகளையும், மக்கள் நலனுக்கும், தேச வளத்துக்கும் உரிய திட்டங்களை
மட்டும் சொல்லி, அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்ய வேண்டும்.தயவு செய்து மத துவேஷத்தையும், வெறுப்பையும், பிரிவினையையும் துாண்டும் விதமாக பிரசாரம் செய்வதை தவிர்த்து, வளர்ச்சி திட்டங்களை முன்னிறுத்தி பிரசாரம் செய்ய வேண்டும்.
ஜாதி, மதம் கலக்காத, ஜனநாயக திருவிழாவை நம் அரசியல் கட்சி தலைவர்கள் நடத்தி காட்ட
வேண்டும்.