PUBLISHED ON : அக் 23, 2025 12:00 AM

ஆர்.ராமதுரை, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவேன்' என்று கூறிய தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தபின், அதுகுறித்து வாய் திறக்க மறுக்கிறார். தி.மு.க.,வை ஆட்சியில் அமர வைத்தவர்கள் அரசு ஊழியர்கள். 'எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்புவது உறுதி...' என்று கூறியுள்ளார், மத்திய - மாநில பொதுத்துறை ஓய்வூதியர் பேரமைப்பு பொதுச்செயலர் வெங்கடேசன்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என்று மொத்தம் இரண்டு லட்சம் பேர் தேறுவரா?
இந்த இரண்டு லட்சம் பேர் ஓட்டளித்து தான் தி.மு.க., வெற்றி பெற்றதா?
கோவில் கோபுரங்களின் கீழ் வரிசையில் பொருத்தப்பட்டிருக்கும் பொம்மைகள், அந்த கோபுரத்தையே தாங்கள் தான் தாங்குவதாக கருதிக் கொண்டிருக்குமாம். அதுபோல், தி.மு.க., என்ற கோபுரத்தை தாங்கும் பொம்மைகளாக, தங்களை நினைத்துக் கொள்கின்றனர், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், ஓய்வூதியர்களும்!
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களின் ஓட்டை எதிர்பார்த்து தி.மு.க., தேர்தலை எதிர்கொள்ளப்போவதில்லை.
கடந்த நான்கரைஆண்டுகளாக தமிழக வாக்காளர்களுக்கு கொடுத்து வந்த இலவசங்களும், மகளிர் உரிமைத்தொகையும், மாணவ- - மாணவியர் உதவித் தொகையும், இலவச பஸ் பயணம் போன்ற சலுகைகள், தேர்தலில் தங்களை கரை சேர்த்து விடும் என்று நம்புகிறது, தி.மு.க.,
அத்துடன், இருக்கவே இருக்கிறது, 'திருமங்கலம் பார்முலா!'
எனவே, தி.மு.க., கரை சேர அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களின் தயவு தேவையில்லை; ஓட்டுக்கு பணமும், இலவச திட்டங்களும் போதும்!
lll
வெள்ளை கொடியை பறக்க விடுவாரா அன்புமணி! அ.ரவீந்திரன், குஞ்சன்விளை,
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
மருத்துவர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியை துவக்கிய காலத்தில்,
அக்கட்சியின் அதிரடி அரசியல், தி.மு.க., - அ.தி.மு.க., என இரண்டு
கட்சிகளையுமே மிரள வைத்தது என்றே சொல்லலாம்!
சாதாரண போராட்டம்
என்றால் கூட, மரங்களை வெட்டி, சாலைகளில் போட்டு போக்குவரத்தை தடை செய்வது,
அவ்வழியே செல்லும் வாகனங்களை அடித்து நொறுக்குவது என்று, ஓர் அராஜக அரசியல்
தான் செய்து வந்தார், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்.
கடந்த 30
ஆண்டுகளாக தி.மு.க., - அ.தி.மு.க., என்று தாவி, பதவி சுகத்தை அடைந்தாலும்,
தமிழகத்தின் அரியணையில் ஏறிவிட வேண்டும் என, தலைகீழாக நின்று தண்ணீர்
குடித்துப் பார்த்தார், ராமதாஸ்.
அவரது மகனும், பா.ம.க.,
தலைவருமான அன்புமணி, 'மாற்றம் முன்னேற்றம்' என முழங்கிப் பார்த்தார்; எந்த
மாற்றமும் ஏற்படாமல், ஏமாற்றம் தான் இன்று வரை தொடர்கிறது.
இந்நிலையில், ராமதாஸ் தன் மகள் வழி பேரனை அரசியலில் முன்னிறுத்த துடிக்க, தந்தைக்கும், மகனுக்கும் முட்டிக் கொண்டது.
எத்தனையோ பேர் மத்தியஸ்தம் செய்தும் இருவரும் சமாதானம் ஆவதாக தெரியவில்லை.
'அன்புமணி மீண்டும் பா.ம.க.,வில் அதிகாரம் செய்ய வேண்டும் என்றால்,
ராமதாஸின் இரண்டாவது மனைவியான சுசீலாவை சந்தித்தால், பிரச்னை தீரும்'
என்கின்றனர், பா.ம.க.,வினர்.
ஆனால், முட்டல், வார்த்தை மோதலாகி,
இப்போது, 'பா.ம.க., என் தனிப்பட்ட சொத்து; அதில் அன்புமணிக்கு உரிமை இல்லை.
அவருக்கு என் இன்ஷியலைத் தவிர, வேறு எதையும் தர மாட்டேன். அவர் பா.ம.க.,
பெயரைச் சொல்லி கட்சி நடத்தாமல், தனிக்கட்சி ஆரம்பிப்பது நல்லது...' என்று
கூறி விட்டார், ராமதாஸ்.
இனி, அன்புமணி என்ன செய்வார்?
பா.ம.க.,வினர் கூறுவது போல், அன்புமணி வெள்ளைக் கொடி ஏந்தி, தன் சித்தியை
சந்திப்பாரா அல்லது பா.ம.க.,வை தன் வசப்படுத்துவாரா இல்லை புதிதாக கட்சி
ஆரம்பிப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்!
lll
தங்கம்
வாங்கலாம் தவறில்லை! கே.நாகலட்சுமி, விழுப்புரத்திலிருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: சமீபத்தில், வாசகர் ஒருவர், 'தங்கத்தின் மீது முதலீடு
செய்வதை நிறுத்தி, நிலம் போன்ற வேறு வழிகளில் முதலீடு செய்தால், தங்கம்
விலை தானாக குறையும்' என்று எழுதி இருந்தார்.
அவர் நினைப்பது
போல் இந்தியாவில் மட்டும் தங்கம் விலை ஏறவில்லை; தங்கத்தின் விலையேற்றம்
உலகம் முழுதும் உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.
முன்பு உலக
நாடுகள், அமெரிக்க டாலரை கையிருப்பாக வைத்திருக்கும். ஏனென்றால், எந்தவொரு
நாட்டின் வர்த்தகமும் அமெரிக்க டாலரில் தான் நடக்கும். அதனால், டாலரின்
மதிப்பு ஏறிக்கொண்டே சென்றது.
ஆனால், அமெரிக்க அதிபராக டிரம்ப்
பதவியேற்ற பின், அவரது வர்த்தக கொள்கைகளால், பெரும்பான்மை நாடுகளுக்கு
அமெரிக்க டாலரில் வர்த்தகம் நடைபெறுவதில் விருப்பம் இல்லை. 'பிரிக்ஸ்'
அமைப்பில் உள்ள பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா, எகிப்து,
எத்தியோப்பியா, இந்தோனேஷியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற
நாடுகள் கூட, சமீபத்தில் தங்களுக்கு இடையிலான வர்த்தகத்தை நடத்துவதற்கு,
ஒரு பொதுவான கரன்சியை உருவாக்க முடிவெடுத்துள்ளன.
இந்நிலையில்
தான், பெரும்பான்மை நாடுகளில் அரசாங்கமே டாலருக்கு பதிலாக தங்கத்தை
கையிருப்பாக வைத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டன. இதனால், உலக அளவில்
தங்கத்தின் விலை ஏறத் துவங்கியது.
ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு
நாடுகளே தங்கத்தை கையிருப்பாக வைத்துக்கொள்ள முடிவு செய்து விட்டன. இதில்,
ரஷ்யா பண்டமாற்று முறையில் தங்கத்தில் வர்த்தகம் செய்யலாமா என்று
யோசிக்கிறது.
நிலைமை இவ்வாறு இருக்க, பெண்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை நிறுத்தினால் தங்கம் விலை எப்படி குறையும்?
நம் நாட்டில், தங்கம் கலாசார ரீதியாக நம்முடன் பிணைக்கப்பட்ட ஒன்று.
தங்கத்தை, 'லட்சுமி' என்று சொல்வோம். பெரும்பாலும், நம் பெண்கள் தங்கள்
சிறுவாட்டு சேமிப்பில் தான் நகைகள் வாங்குகின்றனர்.
எனவே, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, தனியார் சிட்பண்டுகளில் பணம் கட்டி ஏமாறுவதை விட தங்கத்தில் முதலீடு செய்யலாம்.
வேறெந்த முதலீட்டையும் விட தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது. அதனால், தங்கம் வாங்குவதில் தவறில்லை!
lll

