PUBLISHED ON : ஜன 18, 2025 12:00 AM

அ.அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சினிமா வாய்ப்புக்காக எம்.ஜி.ஆர்., முயற்சி செய்து கொண்டிருந்த காலம் அது...
ஒரு சினிமா விழாவில் பார்வையாளராக அமர்ந்திருக்கிறார், எம்.ஜி.ஆர்., திடீரென ஒரே பரபரப்பு!
அனைவரும் எழுந்து வாயிலை பார்த்து, கை தட்டி ஆர்ப்பரிக்கின்றனர். எதற்கு இந்த ஆர்ப்பரிப்பு என்று திரும்பிப் பார்க்கிறார், எம்.ஜி.ஆர்.,
அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர் அரங்கத்திற்குள் நுழைகிறார். அவரது தோற்றமும், அவருக்கான வரவேற்பும் எம்.ஜி.ஆரை பிரமிக்க வைக்கிறது.
அக்கணம் மனதில் ஒரு சபதம் எடுக்கிறார்...
'நாமும் ஒருநாள் பாகவதரைப் போல மிகப்பெரிய நடிகர் ஆக வேண்டும். அப்போது, நமக்கும் இதேபோன்று வரவேற்பு கிடைக்க வேண்டும்' என்று!
- இதற்குப் பெயர்தான் லட்சியம்!
தன் லட்சியத்தை நிறைவேற்ற திறமையை வளர்த்து, வாய்ப்புகளை உருவாக்கி, அதில் கடுமையாக உழைத்து வெற்றி பெற்றார், எம்.ஜி.ஆர்.,
அவர், பாகவதரை ரோல் மாடலாக தான் கருதினாரே தவிர, அவரை லேபிளாக பயன்படுத்தி, அவர் புகழில் தன் வளர்ச்சியை உருவாக்கிக் கொள்ளவில்லை!
ஆனால், இன்றைய அரசியல் தலைவர்கள் பலர், தங்கள் தகுதி, திறமை, உழைப்பு, கொள்கையை நம்பி ஜெயிக்க முடியாமல், இன்னும் காந்திஜி, காமராஜர், அம்பேத்கர், ஈ.வெ.ரா., பெயர்களை சொல்லி, அவர்கள் நிழலில் வளரவே விரும்புகின்றனர்.
இதில் சில தலைவர்கள் ஈ.வெ.ரா., மற்றும் அம்பேத்கர் பெயரை பயன்படுத்த தங்களுக்கு மட்டுமே காப்புரிமை இருப்பதுபோல சண்டை போடுவது கேலிக்கூத்து!
இவர்களில் எவரும், தங்கள் 'லேபிள்' தலைவர்களின் கொள்கைகளை கடைப்பிடிப்பதும் இல்லை; பின்பற்றுவதும் இல்லை. மாறாக, தங்களுக்கான அடையாளத்திற்கு, அவர்கள் முகங்களை கடன் வாங்குகின்றனர்!
தங்களுக்கென்று லட்சியமோ, கொள்கைகளோ, வருங்கால திட்டங்களோ இல்லாத இவர்கள், லேபிள் தலைவர்களின் முகங்களுக்குப் பின் மறைந்து, கூட்டணி என்ற பெயரில் பலனை மட்டும் அனுபவிக்கத் துடிக்கின்றனர்.
'லட்சியம் இல்லாத மனிதன் நடமாடும் பிணம் போன்றவன்' என்பதை உணர்ந்து, சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்கள், லேபிள் முகத்துக்கு பின் ஒளிந்து கொள்வதை விடுத்து, தங்களுக்கான அடையாளத்துடன் திகழ வேண்டும்!
உடன்பிறப்புகளின் அநாகரிகம்!
என்.வைகை
வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இன எதிரிகளை
புறமுதுகு காட்டி ஓடவிட்ட கட்சி, தி.மு.க., உங்கள் நாவை அடக்குங்கள்;
உங்கள் நடத்தையை சரிசெய்து கொள்ளுங்கள். தமிழகத்தை மதிக்காவிட்டால், ஓட ஓட
விரட்டப் படுவீர்கள்' என, தமிழக கவனர் குறித்து, தி.மு.க., - எம்.பி.,
கனிமொழி தரம் தாழ்ந்து பேசியுள்ளது, அக்கட்சியில் கண்ணியம் எப்படிப்பட்டது
என்பதை பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது!
நாவை அடக்கும் அளவுக்கு கவர்னர், அப்படி என்ன பேசி விட்டார்?
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது, தேசிய கீதமும் பாட வேண்டும் என்று தானே கேட்டுக் கொண்டார்?
இதில், நாவை அடக்க என்ன இருக்கிறது?
கனிமொழி
தான் இப்படி பேசுகிறார் என்றால், தயாநிதி மாறன் அதற்கு மேல், 'பதவியைத்
தக்க வைத்துக் கொள்ள தமிழ்த்தாய் வாழ்த்தை நீ அவமானப்படுத்துகிறாய். உன்னை
தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இதன் பின்விளைவுகள் வேறு மாதிரி
இருக்கும்' என்று கவர்னரை ஒருமையில் மிக மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.
இவர்கள் எல்லாம் பார்லிமென்ட் உறுப்பினர்களா இல்லை பேட்டை ரவுடிகளா?
தேசிய கீதத்தை இசைக்க சொன்னது ஒரு குற்றமா அல்லது இப்படி எல்லாம் பேசி, 'யார் அந்த சார்?' என்பதிலிருந்து தப்பிக்கும் முயற்சியா?
எதுவாக இருந்தாலும், மக்கள் உங்கள் செயல்களை, பேச்சை பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை மறந்து விடாதீர்கள்!
தி.மு.க.,வினரிடம்
இதுவரை இல்லாத கண்ணியத்தை, இனிமேலாவது கடைப்பிடித்து, எவரையும்
மரியாதையாக பேசக் கற்றுக் கொள்ளுங்கள்; இது போன்ற அநாகரிக பேச்சு வேண்டாம்!
வாய்ச்சொல் வீரரின் வெற்றுப்பேச்சு!
கே.சுப்பு,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நான் உயிருடன்
இருக்கும்வரை, தி.மு.க., ஆட்சியை அகற்றவிட மாட்டேன்...' என்று வசனம்
பேசியுள்ளார், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ.
ஒருத்தனுக்கு உட்காரவே தெம்பு இல்லையாம்; சண்டை செய்ய, 10 பேர் கேட்டானாம்...
சொந்தக் கட்சியை துாக்கிப் பிடிக்க வழியில்லை; இதில், தி.மு.க., ஆட்சியை அகற்ற விட மாட்டாராம்...
'கட்சியில்
ஸ்டாலினை முன்னிலைப்படுத்துகிறார் கருணாநிதி' என்று குற்றஞ்சாட்டி,
தி.மு.க.,விலிருந்து பிரிந்து, தனிக்கட்சி ஆரம்பித்த இவர், இன்று,
ஸ்டாலினுக்கு பல்லக்கு துாக்கிக் கொண்டிருக்கிறார் என்றால் எதற்கு?
ரெண்டு எம்.எல்.ஏ., 'சீட்'டுக்கு!
'இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்படுமா?' என்று கேள்வி எழுந்துள்ளதாக மிகவும் கவலைப்படுகிறார்.
வைகோ
போன்று இங்கு பல வெற்று வாய்கள் உள்ளன. பிரிவினைவாதம் பேசும் அவர்கள்
எல்லாம் வீர உரை நிகழ்த்திக் கொண்டிருப்பதில் இருந்து தெரிய வேண்டாமா...
இந்தியாவில் ஜனநாயகம் எவ்வளவு சுதந்திரமாக உள்ளது என்று!
மத்திய
அரசு, குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்து, ஹிந்து ராஜ்யத்தை உருவாக்கி,
அதில் ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் வைத்து விடுவராம்!
என்னே ஒரு கற்பனை...
மத்திய
அரசு கொண்டு வந்த விஸ்வகர்மா திட்டம் குலக்கல்வி என்றால், அதை அப்படியே
காப்பி அடித்து வெளியிட்டுள்ளதே தி.மு.க., அரசு... அதற்கு பெயர் என்ன?
ஒருவேளை... திராவிட மாடல் அரசும், ஹிந்து ராஜ்யத்தை உருவாக்க நினைத்து தான், மத்திய அரசின் திட்டத்தை காப்பி அடித்துள்ளதோ?
ஜம்மு
- காஷ்மீரில் சிறப்பு சட்டம் 370 நீக்கப்பட்டபோது, 'அய்யோ... இனி
இந்தியாவே அவ்வளவு தான்... பாகிஸ்தான்காரன் தினமும் குண்டு வைப்பான்;
காஷ்மீரில் ரத்த ஆறு ஓடும்' என்று நீலிக்கண்ணீர் வடித்த இந்த உத்தமர் தான்,
இப்போது, 'இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றத்தான், ஒரே நாடு ஒரே தேர்தலை
கொண்டு வரப் பார்க்கின்றனர்' என்கிறார்.
இதுபோன்று வெற்றுப்பேச்சு பேசியே, இத்தனை ஆண்டுகளை ஓட்டியாச்சு... இனியாவது, மக்களுக்கு பயன்படும்படி பேசுங்களேன்!