PUBLISHED ON : பிப் 18, 2025 12:00 AM

பொ.அசோகன், வெங்கம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடிகர் விஜயின், த.வெ.க., கட்சி, பல்வேறு அணிகளை அமைத்துள்ளது. அவற்றுள் ஒன்று, சிறார் அணி; பள்ளி செல்லவேண்டிய சிறார்களை அரசியலில் ஈடுபடுத்துவது சரிதானா என்பதை, விஜய் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே, பள்ளி மாணவர்களிடம் ஜாதிவெறி தலைவிரித்து ஆடுகிறது. கூடவே, போதைப் பழக்கமும் தொற்றிக் கொண்டுள்ளதை, ஆங்காங்கே சில சம்பவங்கள் வாயிலாக அறியமுடிகிறது. ஏன் சில மாணவியர் கூட பள்ளிச் சீருடையில் மது அருந்துவதை ஊடகங்களில் காண்கிறோம்.
இப்படி ஜாதி மற்றும் மதுபோதை, சிறார்களை சீரழிப்பது போதாது என்று, அரசியல் போதையையும் அறிமுகம் செய்ய வேண்டுமா?
கல்லுாரி மாணவர்கள் குழுக்களாக இணைந்து அராஜகம் செய்வதை பேருந்திலும், ரயிலிலும் காண்கிறோம். இனி, அரசியல் குழுவும் அதில் இணைந்து, கட்சி ரீதியாக மோதிக்கொண்டால் விளைவு மோசமாக இருக்கும்.
எனவே, உங்கள் போதைக்கு அடுத்தவர் வீட்டு பிள்ளைகளை ஊறுகாயாக மாற்றவேண்டாம். படிக்க வேண்டிய வயதில், அவர்களை நிம்மதியாக படிக்க விடுங்கள். 18 வயதுவரை உள்ளவர்கள் குழந்தைகள் என்றே இளைஞர் நீதிச் சட்டத்திலும், பாலியல் வன்முறைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்திலும் வரையறை செய்யப்பட்டுள்ளன. ஆகையால், வாக்களிக்கும் வயது வராத குழந்தைகளை, அரசியல் குட்டையில் அமிழ்த்தி, அவர்கள் வாழ்க்கையை பாழ்படுத்த வேண்டாம்!
ஈ.வெ.ரா., பற்றி தெரியவில்லையே?
என்.
வைகை வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்திய
அரசியல் அமைப்பை தாங்கள் மட்டுமே துாக்கிப் பிடிப்பது போல் நாடகம் போடும்
கூட்டம், ஒன்றை அறியுமா? இந்திய அரசியல் அமைப்பை உருவாக்குவதில்,
அம்பேத்கர் குழுவில் இடம் பெற்ற ஏழு பேர்களில், மூன்று பேர் பிராமணர்கள்!
அல்லாடி
கிருஷ்ணசாமி அய்யர், என்.கோபால் சாமி ஐயங்கார், பி.என்.ராவ் எனும் அந்த
மூன்று பேரின் அளப்பறியா பங்களிப்பை பற்றி, சட்டமேதை அம்பேத்கரே
சிலாகித்துக் கூறியுள்ளார்.
ஈ.வே.ரா., சமுதாய புரட்சி செய்தார் என்று, ஒரு கூட்டம் கூப்பாடு போடுகிறது.
இவர்கள் அறிவரா, 1,000 ஆண்டுகளுக்கு முன்பே சமுதாய புரட்சி செய்தவர், வைணவரான ராமானுஜர் என்பதை?
சேரியைச் சேர்ந்தவர்களை எல்லாம், பகவான் நாராயணனின் பிள்ளைகள் என்று பெருமைப் படுத்தியவர் ராமானுஜர்.
அதேபோன்று,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தாழ்த்தப்பட்ட மக்களும் சென்று வழிபாடு
செய்யும் உரிமையைப் பெற்றுத் தந்தவர், வைத்தியநாத அய்யர் என்ற பிராமணர்!
இதை எதையும் செய்யாமல், வாயால் வடை சுட்ட ஈ.வெ.ரா., இன்று பெரும் புரட்சியாளராக சித்தரிக்கப்படுகிறார்.
ஈ.வெ.ரா., செய்த புரட்சி எல்லாம், பிராமணர்களை வாய்க்கு வந்த படி வசை பாடியது மட்டுமே!
அதேநேரம், எந்த வாயால் பிராமணர்களை வசை பாடினாரோ, அதே வாயால், பிராமணரான ராஜாஜியிடம் நட்பு கொண்டு, ஒட்டி உறவாடினார்.
அதற்கு
அவர் கூறிய காரணம் என்ன தெரியுமா... 'ராஜாஜி கர்நாடக பிராமணர் என்பதால்
வந்த பாசமாக இருக்கும்' என்று கூறினார்; எப்பேர்ப்பட்ட மொழிப் பற்றாளர்
பாருங்கள்! இந்த ஈ.வெ.ரா.,
தமிழகத்தில், தான் கல்லா கட்ட முடிகிற
ஒரே பாணி, தமிழ் பிராமணர்களை துாற்றுவது மட்டும் தான் என்பதால், கடைசி வரை
அதை கடைப்பிடித்தார்!.
இதுதெரியாத உடன் பிறப்புகள், ஈ.வெ.ரா., சமூக நீதியை காத்தார் என்று பிதற்றிக் கொண்டிருக்கின்றனர்.
ஈ.வெ.ரா.,வை பின்பற்று வோருக்கே அவரைப் பற்றி தெரியவில்லை என்பது தான் உண்மை!
நேர்மைக்கு ஒரு சல்யூட்!
கு.அருணாச்சலம், சிதம்பரம், கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: தமிழகத்தில் ஓட்டுகளை விலைக்கு வாங்கும் யுக்தியை
அறிமுகப்படுத்தியவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி.
விலையில்லா
பொருட்கள் கொடுத்தும், வாக்குறுதிகளை அள்ளி வீசியும், ஜாதி, மத அரசியல்
செய்தும் தேர்தல்களில் ஓட்டுகளை வாங்கினார். அதில் உட்சபட்சமாக அமைந்தது
தான், திருமங்கலம் பார்முலா!
அதன் பிரதிபலிப்பு, இன்று வரை ஒவ்வொரு
இடைத்தேர்தலிலும் எதிரொலித்து வரும் நிலையில், ஓட்டுக்கு பணம் கொடுக்காமல்
ஒரு அரசியல் கட்சி தமிழகத்தில் தொடர்ந்து போட்டியிடுகிறது என்றால் அது,
நாம் தமிழர் கட்சி தான்!
தேர்தலில் ஒரு வெற்றியைக் கூட பதிவு
செய்யாவிட்டாலும், மெல்ல தன் ஓட்டு வங்கியை அதிகரிக்க செய்து, 8 சதவீத
ஓட்டுகளை பெற்று, இன்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உயர்ந்துள்ளது.
ஈரோடு
கிழக்கு இடைத்தேர்தலில், பிரதான கட்சிகள் எல்லாம் நொண்டிச் சாக்கு கூறி
தேர்தலை புறக்கணித்த நிலையில், நாம் தமிழர் கட்சி மட்டும் துணிச்சலாக,
தி.மு.க.,விற்கு எதிராக களம் இறங்கி, ஒற்றை பைசா கொடுக்காமல், 24,151
ஓட்டுகளை பெற்றுள்ளது.
இதன் வாயிலாக, காசுக்காக விலை போகாத
வாக்காளர்கள் இன்றும் உள்ளனர் என்பதை, நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த
ஓட்டுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
அவ்வகையில், நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டளித்த அந்த நேர்மையாளர்களுக்கு சல்யூட்!
தொடர் கதையாகும் குற்றங்கள்!
ப.ராஜேந்திரன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வேலுார் அருகே, ஓடும்
ரயிலில் கர்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவத்தில், அவர்
கூச்சலிட்டதால் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பிய ஹேமராஜ் என்பவனை,
ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
இது, அவனுக்கு முதல் குற்றம்
இல்லை; 2022ல் சென்னையில் இருந்து ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் மொபைல்
போன் பறித்துள்ளான்; மற்றொரு பெண்ணின் செயினை பறித்து, ரயிலில் இருந்து
கீழே தள்ளிவிட்டுள்ளான். இதற்காக, குண்டர் சட்டத்தில் சிறையில்
அடைக்கப்பட்டு, ஜாமினில் வந்துள்ளான்.
பின், 2023ல் சென்னையைச்
சேர்ந்த இளம் பெண்ணை காட்பாடி அழைத்துச் சென்று, நகையைப் பறித்து கழுத்தை
நெறித்து கொலை செய்துள்ளான். இக்குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டவன்,
மீண்டும் ஜாமினில் வந்துள்ளான்.
குற்றஞ்சாட்டப்பட்டவரை தற்காலிகமாக
விடுவிப்பது தான் ஜாமின்; ஆனால், ஆயுள் தண்டனை, துாக்கு தண்டனை
விதிக்கக்கூடிய வழக்குகளில் கைது செய்யப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு
எதிராக போதுமான ஆதாரம் இருந்தால், ஜாமின் வழங்கக் கூடாது என்கிறது சட்டம்.
இந்த
வழக்கில், போலீசார் வலுவான ஆதாரங்களை சமர்ப்பித்து இருந்தால், ஹேமராஜ்
ஜாமினில் வெளியே வந்திருக்க மாட்டான்; முதல் வழக்கிலேயே
தண்டிக்கப்பட்டிருப்பான்; அடுத்தடுத்து நடந்த இரண்டு சம்பவங்களும்
நடக்காமல் போயிருக்கும்.
கடுமையான குற்றங்கள் செய்தாலும், ஆதாரங்களை
சமர்ப்பிக்க திறனற்ற போலீசார் இருக்கும் வரை, ஜாமினில் வெளியே வருவதும்,
இதுபோன்ற குற்றங்கள் நடப்பதும் தொடர்கதையாகத் தான் இருக்கும்!