PUBLISHED ON : நவ 27, 2026 12:00 AM

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: இலங்கை தமிழர்கள், விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாடுகளாலும், தன் அடுக்குமொழி பேச்சுகளாலும் பிரபலமானவர், மறு மலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தலைவர் வைகோ.
கடந்த 1990களில் தென் மாவட்டங்களில், தி.மு.க.,வின் முகமாக இருந்த வைகோ, உட்கட்சி பிரச்னைகளால், தி.மு.க.,வில் இருந்து வெளியேற்றப்பட்டு, ம.தி.மு.க.,வை துவக்கினார்.
இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி, மக்கள் நல கூட்டணி, தி.மு.க.,வுடன் கூட்டணி என, தேர்தலுக்கு ஒரு கூட்டணி வைத்தும், வைகோவால் அரசியலில் பெரிதாக சோபிக்க முடியவில்லை.
கடைசியில், எந்த தி.மு.க., அவரை வெளியேற்றியதோ, அதே தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்த போது, ‘ஸ்டாலினை முதல்வராக்குவதாக கருணாநிதிக்கு வாக்கு அளித்துள்ளேன். எனவே, தி.மு.க.,வுடன் தான் கூட்டணி’ என்று கூறி, தன் செயலை நியாயப்படுத்தி, ஸ்டாலினை பலவாறாக துதிபாடினார்.
தி.மு.க., கொடுத்த தொகுதிகளில், அக்கட்சியின் சின்னத்திலேயே போட்டியிட வேண்டிய நிலைக்கு இறங்கிப் போனார். அப்போதும் கூட, தனக்கு ஏற்பட்ட அவமானத்தை சட்டையில் ஒட்டிய துாசாக தட்டி விட்டு, ராஜ்யசபா பதவிக்காக காத்திருந்தார். கடைசியில், ராஜ்யசபா பதவி கிடைக்காது என்று தெரிந்ததும், தி.மு.க., கூடாரத்தை காலி செய்து, த.வெ.க.,விற்கு தாவி விட்டார்.
இதில் என்ன கொடுமை என்றால், வைகோ கேட்டுக் கொண்டும் அக்கட்சியின் இரண்டு எம்.எல்.ஏ.,க்களும், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய மறுத்து விட்டது தான்!
இதை விட ஒரு கட்சித் தலைவருக்கு வேறு என்ன அவமானம் இருக்க முடியும்?
சரி... த.வெ.க.,வில் இணைந்த பின்பாவது, தன் வயது, அரசியல் அனுபவத்திற்கு ஏற்ப நடந்து கொள்கிறாரா என்றால், இல்லை; தன் வழக்கமான பிதற்றல்களை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் முதல்வருடன் செல்கையில், பின்னால் வந்த அமைச்சர் ஒருவரின் கையைத் தள்ளி விட்டார். இது அப்படியே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதற்கு, ‘நான் விஜயின் பாதுகாவலன்; நான் கொடுக்கும் பாதுகாப்பை, 100 காவலர்களால் கூட கொடுக்க முடியாது’ என்று விளக்கம் கொடுத்து, நகைப்புக்கு ஆளாகி, ‘அரசியல் வடிவேலு’ என்ற பெயரை சம்பாதித்து விட்டார்.
வைகோ பேசாமல், இளைய தலைமுறையினரிடம் கட்சியை ஒப்படைத்து விட்டு, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதே அவருக்கு மரியாதை!
lll
