தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ மம்தாவின் ஆட்டம் குளோஸ்!

 மம்தாவின் ஆட்டம் குளோஸ்!

 மம்தாவின் ஆட்டம் குளோஸ்!

3


PUBLISHED ON : மே 06, 2026 12:44 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 06, 2026 12:44 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என்.கந்தவேல், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ராமாயணம், மஹாபாரதம் போன்ற காவியங்களில், தாடகை, சூர்ப்பனகை, இடும்பி, பூதகி போன்ற கதாபாத்திரங்கள் குறித்து படித்திருப்போம். இவர்கள் அனைவரும் தர்மத்திற்கு எதிரானவர்கள்; சுயநலத்திற்காக அராஜகங்களை அரங்கேற்றியவர்கள்.

இவர்கள் அத்தனை பேரையும் மிஞ்சிய ஒரு கதாபாத்திரம் இருக்கிறது என்றால், அது தான் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி!

அரசியல்வாதிகளின் பதவி வெறி, எந்த அளவுக்கு குற்றச்செயல்களில் ஈடுபடவைக்கும் என்பதற்கு, மம்தா மிகச் சிறந்த எடுத்துக்காட்டு!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் போதே, சட்ட விரோத குடியேறிகளின் ஓட்டு வங்கியை மனதில் வைத்து, எஸ்.ஐ.ஆர்., பணியை நிறைவேற்ற, பல முட்டுக்கட்டைகள் போட்டார். வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக மே.வங்கத்தில் குடியேறியுள்ளவர்களின் பெயர்களை, வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கக் கூடாது என்று முரண்டு பிடித்து, வன்முறையை கட்டவிழ்த்து விட்டார்.

அவற்றை தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளாததால், தேர்தல் கமிஷன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றோர் மீது குற்றஞ்சாட்டி, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என வழக்கு தொடுத்து மூக்கறுபட்டார்.

எஸ்.ஐ.ஆர்., பணி குறித்து மம்தாவின் குற்றச்சாட்டு உண்மையா என்று ஆய்வு செய்ய சென்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளை, அக்கட்சி குண்டர்கள் சிறைபிடித்து, ஓர் அறையில் அடைத்து வைத்து கொடுமை செய்ய, உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு ஆளானார், மம்தா.

தன் திட்டங்கள் எதுவும், போணி ஆகவில்லை என்றதும், 'ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் பா.ஜ.,வின் தாமரை சின்னம் இருந்தால் தானே வாக்காளர்கள் அந்த சின்னத்தை அழுத்துவர்...' என்று நினைத்து, 24 பர்கானா மாவட்டத்திலுள்ள பால்டா தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகள் அனைத்திலும் ஓட்டு பதிவு இயந்திரத்தில் இருந்த தாமரை சின்னத்தின் மீது, 'டேப்' ஒட்டி மறைத்தார்.

இந்த திருட்டுத்தனத்தை கண்டு பிடித்த தேர்தல் கமிஷன், பால்டா தொகுதியில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் மறு தேர்தல் அறிவித்து விட்டது.

இப்படி பல தில்லாலங்கடி வேலைகளை பார்த்தும், மம்தாவின் சதித்திட்டம் நிறைவேற வில்லை; தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவில், பா.ஜ., 20௬ தொகுதிகளில் வெற்றி பெற்று, மம்தாவின், 15 ஆண்டுகால காட்டு தர்பார் ஆட்சிக்கு முடிவுரை எழுதி வீட்டுக்கு அனுப்பி விட்டது.

இனியாவது, மே.வங்கம் வளர்ச்சி பாதையில் செல்லட்டும்!

வெளிப்படையான முதல்வராக இருக்க வேண்டும்!


கோ.ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.,வை துவக்கியபோது, அவருக்கு பல்வேறு இடையூறுகள் கொடுத்தும், அவரது படத்தை வெளியிட தடை விதித்தும் அராஜகங்களை அரங்கேற்றியது, தி.மு.க., அந்த தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து, வெற்றி பெற்றார், எம்.ஜி.ஆர்.,

அதேபோன்று, புதிதாக அரசியல் களத்திற்கு வந்த, தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்க்கு, தி.மு.க., பல்வேறு இடையூறுகளை செய்தது; அத்தனையும் தாண்டி இப்போது அபார வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேல் இரு திராவிட கட்சிகளின் பிடியில் இருந்த தமிழகம், த.வெ.க., எனும் கட்சிக்கு வெற்றி வாய்ப்பை வாரி வழங்கி, கழகத்தின் பிடியில் இருந்து தன்னை விடுவித்து, மாற்றத்திற்கான முன்னுரையை எழுதி விட்டது.

இரு திராவிட கட்சிகளும் சில நல்ல திட்டங்களை கொண்டு வந்திருந்தாலும், வளர்ச்சி அரசியலை முன்னிறுத்தாமல், இலவச திட்டங்களை மட்டுமே நம்பியிருந்தன.

அத்துடன், மதச்சார்பின்மை என்று பேசிக் கொண்டு, சிறுபான்மை ஓட்டுக்காக ஹிந்துக் களின் வழிபாட்டு உரிமைகள் பறிக்கப்பட்டன. பல ஹிந்து கோவில்கள் இடிக்கப்பட்டன; கோவில் சொத்துகள் கழகங்களால் கொள்ளையடிக்கப்பட்டன. அதற்கெல்லாம் இந்த தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுத்து விட்டனர்.

அதேநேரம், இனி தான் உண்மையிலே விஜய்க்கு சவால் காத்திருக்கிறது. தமிழகத்தின் கடன் சுமையை ஏற்றி வைத்துள்ளது, தி.மு.க., அரசு.

கடந்த ஐந்து ஆண்டுகளாக சொல்லிக் கொள்ளும்படி தொழில் வளர்ச்சி இல்லை; அனைத்து அரசு துறைகளிலும் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், அரசு பணிகள் தேக்க நிலையில் உள்ளன.

இவற்றை எல்லாம் சரிசெய்வதுடன், 'விஜய் ஆட்சிக்கு வந்தால், கண்டிப்பாக நமக்கு நன்மை செய்வார்' என்று, படித்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை, ஒரு எதிர்பார்ப்புடனேயே ஓட்டு போட்டுள்ளனர்.

அதை விஜய் நிறைவேற்ற வேண்டும்; வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத பட்சத்தில் அதற்கான உண்மைக் காரணத்தை எந்தவித அரசியல் கலப்பும் இல்லாமல் வெளிப்படையாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அப்போது தான், எம்.ஜி.ஆர்., போன்று விஜயும் தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாக தன்னை உருவாக்கி கொள்ள முடியும்!

பாடம் கற்குமா பா.ஜ., தலைமை!


ஆர்.ராமையா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஆணவத்தில், மிதப்பாக நடந்து கொண்ட தி.மு.க.,விற்கும், தான் முதல்வர் ஆவதற்கு எவரும் இடையூறாக வந்து விடக் கூடாது என்று, குள்ளநரி வேலை செய்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கும் சரியான பதிலடி கொடுத்துள்ளது.

அதுமட்டுமல்ல... அரசனை நம்பி புருஷனை இழந்த கதையாக, பழனிசாமியை நம்பி, முன்னாள் பா.ஜ., தலைவர் அண்ணாமலையை பதவி நீக்கம் செய்த பா.ஜ., டில்லி மேலிட தலைக்கும் நல்ல பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலையை முதல்வராக முன்னிறுத்தி, அ.தி.மு.க.,வோடு கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டிருந்தால், நிச்சயம், 200 தொகுதிகளில் அக்கூட்டணி வெற்றி வாகை சூடி இருக்கும்.

அதை விடுத்து, பழனிசாமியின் ஆலோசனையை கேட்டு, அண்ணாமலையை விலக்கி, நயினார் நாகேந்திரனை தலைவராக்கி தேர்தலை சந்தித்ததன் விளைவு, பா.ஜ.,வின் ஓட்டு 3 சதவீதத்திற்கும் கீழ் சரிந்து, பழைய குருடி கதவை திறடி கதையாகி போனது!

இனியாவது, பா.ஜ., மேலிட தலைமை, தமிழக மக்களின் நாடி துடிப்பை அறிந்து, அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும்!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us