/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
ஆண்களுக்கும் மாதந்தோறும் நிதி வேண்டும்!
/
ஆண்களுக்கும் மாதந்தோறும் நிதி வேண்டும்!
PUBLISHED ON : ஜன 19, 2026 12:00 AM

அ.ரவீந்திரன், கன்னியாகுமரி மாவட்டம், குஞ்சன்விளையிலிருந்து அனுப்பிய, இ - மெயில் கடிதம்: தமிழக அரசியலில் பெண்கள் ஓட்டுகளை குறி வைத்து மட்டும், இலவச திட்டங்களை அறிவிக்கின்றனர் தமிழக அரசியல்வாதிகள். தி.மு.க., எட்டு இலவசங்களை அறிவித்தால், அ.தி.மு.க., பதினாறு இலவசங்களை அறிவித்து, இலவச திட்டங்களில் போட்டி போடுகிறது.
அந்த வகையில், மகளிருக்கு மாதம் தோறும் உதவித் தொகையாக, தற்போதைய தி.மு.க., அரசு, 1,000 ரூபாய் தருகிறது. அ.தி.மு.க.,வோ, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 2,000 ரூபாய் தருவோம்' என வாக்குறுதி தந்துள்ளது.
அரசு டவுன் பஸ்களில், மகளிர் இலவசமாக பயணம் செய்ய, இலவச பேருந்துகளை, இந்த அரசு இயக்கி வருகிறது. அ.தி.மு.க.,வோ, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்களுக்கும் இலவச பயண திட்டம் வரும்' என, வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்காக வாக்குறுதி தந்துள்ளது.
வாக்காளர்களை கவர, இலவச திட்டங்களை அள்ளித் தரும் அரசியல் கட்சிகள், ஆண்களை மட்டும் வஞ்சிப்பது என்ன நியாயம்... ஆணும் பெண்ணும் சமம் என பேசும் அரசியல்வாதிகள், மாதந் தோறும் ஆண்களுக்கும், பெண்களை போல் நிதியுதவி தர வேண்டும்.
ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என பிரிவினை வேண்டாம்; அனை வருக்கும் சமநீதி வழங்க வேண்டும்.
ஆண்களை பகைப்பது, அரசியல் வாதிகளுக்கு அழகல்ல! lll
------------------
உத்தானபாதன் நிலைமை தான் தமிழகத்தில்!
எஸ்.சுப்ரமணியன் சென்னையிலிருந்து அனுப்பிய, இ - மெயில் கடிதம்: முன்னொரு காலத்தில் உத்தானபாதன் என்று ஒரு மன்னன் இருந்தான். அந்த மன்னனுக்கு சுநீதி என்று ஒரு மனைவி; சுருசி என்று ஒரு துணைவி இருந்தனர்.
சுநீதியின் மகன் துருவன். எப்போதுமே அரச பதவியில் இருப்பவர்களுக்கு, மனைவியை காட்டிலும், துணைவியிடம் தானே பிரியம் பீறிட்டு கொண்டிருக்கும். அது போல, மன்னன் உத்தானபாதனுக்கும் சுருசியின் மீது தான் அலாதி பிரியம். அதனால், அவளது மகனை, மன்னன் தன் மடியில் அமர்த்தி கொண்டிருந்தான்.
அதைப் பார்த்த துருவன், 'நானும் உத்தானபாதனின் மகன் தானே... மன்னனின் மடியில் அமரும் தகுதியும், உரிமையும் எனக்கும் உண்டல்லவா' என கேட்டபடி, அவனும் மன்னனின் மடியில் அமர்ந்து கொண்டான்.
மன்னனின் மடியில் துருவனைப் பார்த்த சுருசிக்கு, கோபம் கொந்தளித்தது. உடனே ஓடி வந்து, துருவனை, மன்னனின் மடியில் இருந்து கீழே தள்ளி, 'இந்த மடியில் நீ அமர வேண்டுமென்றால், என் வயிற்றில் பிறந்திருக்க வேண்டும். நீ என் வயிற்றில் பிறக்கவில்லை. போ வெளியே' என்று தள்ளி விட்டாள்.
பாலகன் துருவனும், அம்மாவிடம் சென்று நடந்ததை சொல்லி அழுதான். தாயின் கட்டளைக் கேற்ப, துருவன், கானகம் சென்று தவம் இருக்க துவங்கினான்.
அப்போது அங்கு வந்த நாரதர், 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்ற மந்திரத்தை உபதேசித்து, அதை சொல்லிக் கொண்டே தவம் இருக்குமாறு கூறினார்.
துருவனின் பிரார்த்தனை, மஹாவிஷ்ணுவின் பார்வைக்கு சென்றதும், பூவுலகம் வந்து, துருவனுக்கு காட்சி அளித்து, துருவன் 36,000 ஆண்டுகள் ஆட்சி புரியும் வரம் அளித்தார்.
அந்த துருவன் இறந்ததும், துருவ நட்சத்திரமாகி, இன்றைக்கும் வானின் வடக்கு பக்கத்தில் ஒளி வீசி ஜொலித்துக்கொண்டிருக்கிறான்.
தமிழக மக்களின் கனவுகள் நிறைவேற, மக்களாகிய நாம் எந்த கடவுளிடம் மன்றாடி முறையிட்டு விமோசனம் பெறுவதென்று தெரியவில்லை!
----------
கூட்டுறவு சங்கங்களுக்கு மறுவாழ்வு வருமா?
சொ.காளிதாசன், பண்ருட்டி, கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் கூட்டுறவு வீட்டு வசதிச் சங்கங்கள், தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், நிர்வாகத்திலும் இருந்து வருகின்றன. இவற்றில் அடமானம் வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் வீட்டுப் பத்திரங்கள், கடனை முழுமையாகச் செலுத்தி முடித்த பிறகும், திருப்பித் தரப்படவில்லை.
இந்த சங்க அதிகாரிகளின் ஊழல் நடவடிக்கையால், எந்த வேலையும் சரியான முறையில் நடைபெறுவதில்லை.
காமராஜர் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் பல, திராவிட கட்சிகளின் ஆட்சியில் கோமா நிலைக்குச் சென்று விட்டன.
பத்திரங்கள், உரியவர்களிடம் ஒப்படைக்கப்படாததால், பாகப் பிரிவினை செய்ய முடியாமல் அவர்கள் அவதிப்படுகின்றனர். சங்கங்கள் மீது ஏராளமான வழக்குகள் காவல் துறையில் பதிவாகி உள்ளன.
இது ஒருபுறம் என்றால், மறுபுறம், சங்கப் பணியாளர்களுக்கு சம்பளம் சரியாக வழங்கப்படுவதே இல்லை.
அரசு இத்துறைக்கு, ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய் வீதம், 20 ஆண்டுகளாக, 4000 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. ஆயினும், நுாற்றுக்கணக்கான வீட்டு வசதி சங்கங்கள், கோமாவில் உள்ளன.
டில்லி வரை இந்த விவகாரம் சென்றுள்ளது. ஆனால், 'தமிழகத்தை தலைகுனிய விட மாட்டேன்' என்கிறார் தமிழக முதல்வர். இந்த வெட்கக்கேடை என்னவென்று சொல்வது!
பிரிவினையின் பிடியில் தமிழகம்! வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இன, மொழி, மத, பிரிவினைவாத அரசியல் வாயிலாக, 'அனைவரும் இந்தியர்கள்' என்ற உணர்வை கீழே இறக்கி, பிராந்திய உணர்வை கொம்பு சீவி வளர்த்து, அதன் வாயிலாக பலனடைந்து வரும் கட்சி தி.மு.க.,
தி.மு.க.,வின் இத்தகைய குறுகிய சிந்தனையால், இன்று, பிற மாநிலத்தவர்களை ஏற்க மறுக்கும், சகிப்புத் தன்மை இல்லாத, குறுகிய மனப்பான்மையுள்ள மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது.
இதற்கு பிற மாநிலத்தவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டு வருவதே சாட்சி!
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேல், தி.மு.க., செய்து வரும் பிரிவினை அரசியலால், தமிழக மக்கள் எந்த வித பலனையும் அடையவில்லை.
மாறாக, வெறுங்கையோடு அரசியலுக்கு வந்த, தி.மு.க., முக்கியப் புள்ளிகள், இன்று கோடீஸ்வரர்களாக தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொண்டுள்ளனர்.
திராவிடக் கட்சிகளின் வருகைக்கு முன்பிருந்த, தேசம், தேசியம், ஒற்றுமை நிறைந்த நேர் பாதைக்கு தமிழகம் மீண்டும் வர வேண்டும்.
அப்படி ஒரு நிலை வந்தால், இப்போது இருப்பதை விட, தமிழகம் மேலும் வளர்ச்சி அடையும்; தமிழகத்தின் வளம் அரசியல்வாதிகளின் குடும்ப சொத்தாக மாறுவது தடுக்கப்பட்டு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு பயன்படும்!
ஓட்டளிக்கும் மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது!
பெரும்பான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் எனில், கல்வியில் அனைவரும் சமமான உரிமைகளை பெற வேண்டுமெனில், வழிபாட்டு தலங்களின் மரபு காக்கப்பட வேண்டுமாயின், தமிழகத்தில் தேசிய சிந்தனையுள்ள கட்சியின் தலைமை, ஆட்சியில் அமர வேண்டும் !

