PUBLISHED ON : நவ 17, 2025 12:00 AM

குரு பங்கஜி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: -'திறமையானவர்களை முதல்வர் ஸ்டாலின் மதிப்பதால்தான், அ.தி.மு.க.,விலிருந்து வந்தவர்களுக்கு தி.மு.க.,வில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார், நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு.
சத்திய வாக்கை உதிர்த்த அமைச்சரின் வாய்க்கு சர்க்கரை தான் போட வேண்டும்.
ஏனென்றால், அ.தி.மு.க.,விலிருந்து தி.மு.க.,விற்கு தாவிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக்கில் பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக, 10 ரூபாய் வாங்குவது, ஆற்று மணலை ஆட்டைய போடுவது போன்ற அசாத்திய திறமை களுக்கு சொந்தக்காரர்!
அதேபோன்று, அ.தி.மு.க.,விலிருந்து தி.மு.க.,விற்கு குடிபுகுந்த அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, கோவில் நிதியை கட்சி நிதியாகவும், அறநிலையத்துறை அலுவலகங்களை கட்சி அலுவலகமாகவும் பயன்படுத்தி, கோவில்களை உயிர்ப்புடன் இருக்கவிட மாட்டேன் என கங்கணம் கட்டி செயல்படும் அசாத்திய திறமைசாலி!
முன்னாள் அ.தி.மு.க.,காரரும், தற்போதைய டாஸ்மாக் அமைச்சருமான முத்துசாமியோ, 'தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்' என்று பாடிய எம்.ஜி.ஆர்., வாக்கை சற்றே மாற்றி, 'வீதியெங்கும் டாஸ்மாக் கடைகள் அமைப்போம்' என புயல் வேகத்தில் செயல்படும் புத்திசாலி!
புதுக்கோட்டை சமஸ்தானத்திலிருந்து வந்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதியோ, தமிழகத்தில் உள்ள காடு, மலை போன்ற இயற்கை வளங்களை கட்டிக்காத்து, பூமாதேவியின் பாராட்டை பெற்ற மாமனிதர்!
அ.தி.மு.க.,விலிருந்து அம்பென பாய்ந்து வந்து, தி.மு.க.,வின் கஜானாவாக திகழும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலுவோ, பஸ் கண்டக்டராக பணியாற்றி, பல்லாயிரம் கோடி ரூபாயை வேர்வை சிந்தி சம்பாதித்த உழைக்கும் கரங்களுக்கு உதாரணமானவர்!
எனவே, அ.தி.மு.க.,வில் இருந்து நாலு கால் பாய்ச்சலில் தி.மு.க.,விற்கு ஓடோடி வந்த நேர்மைமிகு அமைச்சர் பெருமக்கள் அசாத்திய திறமைசாலிகள் தான்!
இந்த அரிய பெரிய உண்மையை எடுத்துரைத்த சத்தியசீலர் வேலுவை உண்மையிலேயே பாராட்டலாம்!
சமூக பொறுப்பு வேண்டும்!
கோ.பாண்டியன், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: செங்கல் பட்டை சேர்ந்த பிரபல அரசியல் கட்சி வழக்கறிஞர் ஒருவர், செங்கல்பட்டு, பரனுார் சுங்கச்சாவடியில் முக்கிய பிரமுகர்கள் செல்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த வழியில் காரில் சென்றபோது, அவரின் வாகனத்தை சுங்கச்சாவடி ஊழியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால், வழக்கறிஞருக்கும், ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது.
இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, இரு தரப்பினர் மீதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இரு தரப்பினரையும், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சுங்கச்சாவடி தரப்பில் கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது, அமைதி காத்து, நீதிபதியின் உத்தரவை ஏற்று, வெளியே வந்தனர்.
அதேநேரம், சட்டம் அறிந்த வழக்கறிஞர்களோ, நீதிமன்ற வளாகத்தின் உள்ளேயும், வெளியேயும் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கறிஞருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், காவல் துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கறிஞர் மீது, நீதிமன்றம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளது. அதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதன் வாயிலாக சட்டத்தை வளைத்து விடலாம் என்று நினைக்கின்றனரா வழக்கறிஞர்கள்?
இதேபோன்று தான் அரசியல்வாதிகளிடம் காவல் துறையோ, சி.பி.ஐ.,யோ, அல்லது அமலாக்கத் துறையோ விசாரணைக்கு சென்றால், கட்சிக்காரர்கள் தங்கள் ஆதரவாளர்களை வரவழைத்து ஆர்ப்பாட்டம் நடத்தச் செய்து, ரெய்டில் என்ன நடந்தது என்பதை வெளியே தெரியவிடாமல் செய்து விடுகின்றனர்.
படித்தவர்களுக்கு, சாமானியர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு என்று தனித் தனியாக சட்டம் இயற்றப்படவில்லை.
சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை சட்டம் படித்தவர்களும், அரசியல்வாதிகளும் நினைவில் கொள்ள வேண்டும். அதைவிடுத்து, சட்டத்தை காக்க வேண்டியவர்களே சட்டத்தை வளைக்க முயற்சிக்க கூடாது.
வழக்கறிஞர்களை பின்பற்றி பொதுமக்களும், தங்களுக்கு வேண்டிய குற்றவாளிகளுக்கு ஆதரவாக, இதுபோன்று நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தால், இங்கு அமைதியான வாழ்க்கை என்பதே கேள்விக்குறியாகி விடும்.
இதை வழக்கறிஞர்கள் புரிந்து, சட்டத்தின் வழியில், சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்!
திருநங்கையர் சிந்திப்பரா?
ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: என் நண்பர் புதிதாக கார் வாங்கி இருந்தார். அதை சென்னை அம்பத்துாரில் உள்ள கார் ேஷாரூமில் இருந்து டெலிவரி எடுக்கச் சென்றார். கார் சாவி ஒப்படைக்கப்பட்டவுடன் கற்பூரம் ஏற்றி, பூசணிக்காய் உடைத்து காரை ஸ்டார்ட் செய்யப் போனார்.
அப்போது எங்கிருந்தோ வந்த ஐந்து திருநங்கையர், காரின் முன் நின்று, காரை ஸ்டார்ட் செய்ய விடாமல் தடுத்து, பணம் கேட்டு அடாவடி செய்தனர். ஆளுக்கு, 1,000 ரூபாய் வீதம், 5,000 ரூபாயை வலுக்கட்டாயமாக பிடுங்கி சென்றனர். இதனால், நண்பர் மிகவும் மனம் நொந்து போனார்.
இதுபோன்று தான், சென்னை கபாலீஸ்வரர் கோவில் மாடவீதியில், வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்களை குறிவைத்து பணம் பறிக்கும் நோக்கில், திருநங்கையர் கும்பல் ஒன்று சுற்றி வருகிறது.
அதுமட்டுமல்ல... கடற்கரை, பூங்காக்கள், பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் திருஷ்டி கழிப்பதாகவும், ஆசி வழங்குவதாகவும் கூறி பணம் கேட்டு அடாவடி செய்கின்றனர். கொடுக்க மறுத்தால் ஆபாசமாக திட்டுகின்றனர். இதை போலீசாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
திருநங்கையர் சமூகத்தின் ஓர் அங்கமாக மதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு சம வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அவர்களின் நலம், உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
அதேநேரம், இதுபோன்ற அத்துமீறல்களும், தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதும், அடாவடிகளையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இதனால், திருநங்கையர் மீது பொதுமக்களுக்கு வெறுப்பு ஏற்படுமே தவிர, அவர்கள் நலனில் அக்கறை கொள்ளவோ, அவர்களை நம்மில் ஒருவராக பார்க்கும் மனநிலையோ வராது.
இதை திருநங்கையர் புரிந்து கொள்ள வேண்டும். காவல் துறையும் திருநங்கையர் செய்யும் இதுபோன்ற அடாவடிகளை கண்டும் காணாமல் இருக்காமல், தங்கள் கடமையை செய்ய வேண்டும்!

