PUBLISHED ON : பிப் 04, 2024 12:00 AM

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீப காலமாக, மாநில அரசுக்கும், -கவர்னருக்குமான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. முன்பு கவர்னர்கள் ரப்பர் ஸ்டாம்ப் போல் செயல்பட்டு, மாநில அரசு நீட்டிய கோப்புகளில் எல்லாம் கையெழுத்து போட்டு வந்ததால், சண்டைகள் எழ வாய்ப்பில்லாமல் இருந்தது.
ஆனால், தற்போது பணி நிறைவு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், மத்திய அரசின் முன்னாள் செயலர்கள், நன்கு சட்டம் அறிந்த வழக்கறிஞர்கள், மருத்துவ நிபுணர்கள் போன்றோரே கவர்னராக நியமனம் செய்யப்படுகின்றனர்.
இவர்கள், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, தங்களுக்கு தவறாக பட்டால், கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கின்றனர்; மேலும், அரசியல் சாசன நிபுணர்களின் ஆலோசனை கேட்டு அதன்படி நடக்கின்றனர். எனவே, கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் கால தாமதங்கள் ஏற்படலாம்.
அவர் ஒப்புதல் அளிக்க தாமதம் செய்தாலோ அல்லது ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தாலோ உடனே, 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத கவர்னர் தடையாக இருக்கிறார்' என்று ஆளுங்கட்சியினர் குற்றம் சாட்ட தொடங்கி விடுகின்றனர்.
கவர்னர்கள், சர்ச்சைகள்இல்லாத எத்தனையோ மசோதாக்களுக்கு, உடனே ஒப்புதல் அளிக்கின்றனர்; ஆனால், அதற்கு ஆளுங்கட்சியினர் நன்றி கூறுவதில்லை; பாராட்டுவதில்லை.
அரசியல் ஆதாயம் பெற, சர்ச்சைக்குரிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னர்களுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்க முயற்சிக்கும் ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கு முரண்பாடானவை.
இத்தகைய செயல்பாடுகள் பிரச்னையை தீர்ப்பதற்கு பதிலாக மோதலையும், கருத்து வேறுபாடுகளையும் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.
எனவே மக்கள் நலன், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை மனதில் கொண்டு மோதல் போக்கை தவிர்த்து, சம்பந்தப்பட்டோர் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவது நல்லது.
ஹிந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்பாரா?
பொ.ஜெயராஜ், பாம்பனார்,
இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: திருச்சி மாவட்டம், சிறுகனுாரில் சமீபத்தில் நடந்த விடுதலை
சிறுத்தைகள் கட்சியின், 'வெல்லும் ஜனநாயகம்' மாநாட்டில், 'பெரும்பான்மைவாத
அரசியலை புறக்கணிப்பது' என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
சிறுபான்மையினராக
இருந்தாலும், அவர்களும் நம் உடன்பிறப்புகள் தான். அவர்கள், பாகிஸ்தான்,
ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் வாழ்பவர்களை விட, நம் நாட்டில் சகல
உரிமைகளுடனும், நிம்மதியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதை எவரும்
மறுக்க மாட்டர். அவர்களை அரவணைப்பதில் தவறில்லை.
நம் நாட்டில் உள்ள
பெரும்பாலான கட்சிகள் மதச்சார்பின்மை பேசுகின்றன. ஆனால்,
சிறுபான்மையினருக்கு மட்டுமே பகிரங்கமாக ஆதரவு கொடுக்கின்றன. இந்தியா வின்
சொந்த மதமான ஹிந்து மதத்தை எந்த கட்சியும் ஆதரிப்பதே கிடையாது.
அது
மட்டுமா...? ஹிந்துக்களை திருடர்கள் என்றும், சனாதனத்தை ஒழிப்போம்
என்றெல்லாம் வேறு சீண்டி பார்க்கின்றனர். இதை எல்லாம் கண்டிக்க, பா.ஜ.,
கட்சியை தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் முன்வருவதில்லை.
இதுவரை
ஹிந்துக்கள் ஒற்றுமையில்லாமல் இருந்ததால், ஜாதிக் கட்சிகள் உட்பட பல
அரசியல் கட்சிகளும் பலன் பெற்று வந்தன. ஆனால், இப்போது அரசியல் கட்சிகளின்
போலி மதச்சார்பின்மையை ஹிந்துக்கள் நன்றாக உணர்ந்து விட்டதால், இப்போது
ஒன்றுபட்டு வருகின்றனர்.
வி.சி.,க்கள் மாநாட்டில், 'பெரும்பான்மைவாத
அரசியலை புறக்கணிக்க வேண்டும்' என்று, பலருக்கும் தெளிவாக புரியாத
விதத்தில் கூறப்பட்டுள்ள தீர்மானத்தை, 'பெரும்பான்மையினராக உள்ள
ஹிந்துக்களின் ஓட்டுகள் எங்களுக்கும், எங்கள் கூட்டணி கட்சிகளுக்கும்
தேவையில்லை' என்று தெளிவாக அறிவிக்க திருமாவளவன் முன்வருவாரா?
அதிகாரிகள் மட்டத்தில் மாற்றம் வேண்டும்!
க.சோணையா, திருமங்கலம், மதுரை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'உங்களை தேடி; உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தை நவம்பர் 23ல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்தத் திட்டம், ஜனவரி 30ல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன்படி, மக்களுக்கு பல்வேறு அரசுத் துறைகள் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் சேவைகள் போன்றவற்றின் செயல்பாடுகள் குறித்து, அதிகாரிகள் கள ஆய்வு செய்கின்றனர்.
இதற்காக, மாதந்தோறும்நான்காவது புதன் கிழமைகளில், குறிப்பிட்ட தாலுகாக்களில் கலெக்டர் தலைமையில், குறைதீர் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இவர்கள் செயல்படுத்தும் திட்டங்களை நினைத்தால், சிரிப்பு தான் வருகிறது. மக்கள் நலன் கருதி, அரசு புதிதாக எத்தனை திட்டங்கள் அறிவித்தாலும், அவை மக்களுக்கு முழுமையான பலன் தருகின்றனவா என்பது தான் கேள்விக்குறி.
ஏனெனில் பெரும்பாலான அதிகாரிகள், முகாம்களில் மனுக்கள் வாங்குவதோடு சரி. திட்டத்தின் பலன்கள் என்ன என்று பார்த்தால், 'இலவு காத்த கிளி' கதை தான்.
கடந்த டிச., 27ல், மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, வடகரை பஞ்சாயத்தில் நடந்த மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாமில், என் வீட்டுமனைக்கு பட்டா மாறுதல் வேண்டி, மனு கொடுக்க சென்றிருந்தேன்.
அங்கு என் மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், அதற்கான ஒப்புகைச் சீட்டில், இலவச வீட்டுமனை பட்டா நான் கேட்டிருப்பதாக பதிவிட்டிருந்தனர்.
இப்படி கொடுத்த மனுவையே ஒழுங்காக படித்துப் பார்த்து வாங்கத் தெரியாத அதிகாரிகளை வைத்து தான், கலெக்டர்கள் மக்கள் நல திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றால், அது வெறும் கானல் நீர் தான்.
சரி, நான் கொடுத்த மனுவாவது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து விசாரணைக்கு வருமா என்றால், இன்று வரை என் மனு குறித்து எந்த தகவலும் இல்லை.
இதற்கு முன்பு, என்னைப் போல் குறைதீர் முகாம்களில் மனு கொடுத்த சிலரிடம் விசாரித்ததில், 'இந்தக் காலத்தில் மனுவெல்லாம் வேலைக்கு ஆவாதுங்க. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரிலோ, புரோக்கர் வாயிலாகவோ தொடர்பு கொண்டு, கொடுக்க வேண்டியதை கொடுத்தால், அடுத்த சில நாட்களில் காரியம் முடிந்து விடும்' என்றனர்.
ஆகவே, அரசும், முதல்வரும் என்ன தான் மக்கள் நலனுக்காக புது புது திட்டங்களை அறிவித்தாலும், அதிகாரிகள் மட்டத்தில் மாற்றம் வராத வரை, மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்பது தான் உண்மை.