PUBLISHED ON : அக் 05, 2018 12:00 AM

சுபஸ்ரீ, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மிருகங்கள் கூட இணையுடன் கூடுவதில், சில வரைமுறைகள் வைத்துள்ளன. பிறர் பார்க்க, தன் துணையுடன் காகம் சேராது. ஆனால், தட்டுக்கெட்ட மனிதனுக்கு தான் மானமும் இல்லை; வெட்கமுமில்லை. இங்கிலாந்தில், இரண்டாம் சார்லஸ் மன்னன் ஆட்சிக் காலத்தில், ஒழுக்கமும், நெறிமுறையும் இல்லாமல் போனது. அதனால், நாடே குட்டிச்சுவரானது. அது போல், இப்போது வழங்கப்படும் நீதிமன்ற தீர்ப்புகளால், உலக அளவில் இந்தியா தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
திருமண வாழ்க்கையை மீறி, மற்றொருவருடன் தகாத உறவு வைத்து கொள்வதை, குற்றமாக பார்க்கும் பழமையான, இந்திய தண்டனை சட்டத்தின், 497-வது பிரிவை நீக்கி, உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. இந்த சட்டம், ஆண்களுக்கு கட்டுப்பட்டவர்களாக பெண்களை சித்தரிக்கிறதாம்; அதனால், அவர்களின் தனித்துவம், பாலின சம உரிமை, தனக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் பறிபோகிறதாம்; அதற்காகவே, இந்த சட்டத்தை நீக்கி விட்டார்களாம்!
சமீபத்தில், என் உறவினரின் மகன் கூறிய செய்தி அதிர்ச்சியாய் இருந்தது. அவர், பொறியியல் பட்டதாரி; நல்ல ஊதியம் பெறுகிறார்; அவருக்கு திருமணம் நிச்சயமானது. நிச்சயிக்கப்பட்ட அந்தப் பெண், 'மாப்பிள்ளையிடம் தனியே பேச வேண்டும்' என்றாள். பையன் வீட்டு பெரியவர்களும் சம்மதித்தனர். பையனிடம், 'உன்னை மணக்கிறேன்; ஆனால், நான், வேறு ஒருவரை விரும்புகிறேன். அவனோடும் தொடர்பில் இருப்பேன். உனக்கு சம்மதமா?' என, கேட்டு இருக்கிறாள். அன்று, பிடரியில் கால் பட ஓடி வந்த பையன், இன்று வரை, 'திருமணமே வேண்டாம்' என்கிறார்.
உயிரினும் ஓம்பப்பட வேண்டிய, ஒழுக்கம், பெண்களின் சுதந்திரத்திற்காக, களபலி கொடுக்கப்பட்டுள்ளது. சட்டப்படி வேண்டுமானால், தகாத உறவு சமாசாரம், நியாயமாய் இருக்கலாம்; ஆனால், தர்மத்திற்கு புறம்பானது. தமிழகத்திற்கு, 'எய்ம்ஸ்' வருகிறதோ இல்லையோ, தகாத உறவுகளால், 'எய்ட்ஸ்' வரப்போவது உறுதி!
---
'ஸ்மார்ட்' போனை தவிர்த்து கொஞ்சம் 'ரிலாக்ஸ்' ஆகுங்கள்!
எஸ்.ராமையா, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: உலகளவிலான, 'ஸ்மார்ட் போன்' வளர்ச்சி, இந்தியாவில், 36 சதவீதமாக உள்ளது. நாட்டில், 67 சதவீத இந்தியர்கள், 'ஸ்மார்ட்' போன்களை பயன்படுத்துகின்றனர். 20 - 25 வயது வரை, 63 சதவீதமும், டீன் - ஏஜ் பருவத்தினர், 27 சதவீதமும், ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
புதுபுது மாடல் மொபைல் போன்கள் அறிமுகமாகின்றன. கட்டணம் மலிவாகவும், இணைய வசதியும் கிடைக்கின்றன. போன் வாங்க, உடனே கடன் வசதியும் கிடைக்கிறது. இதனால், கருவிகள், இன்று மனிதனை கையாள துவங்கி விட்டன. சராசரியாக, நாள் ஒன்றுக்கு, நான்கு மணி நேரம், ஸ்மார்ட் போனில் செலவிடுகின்றனர், இந்தியர். துாங்கி எழுந்த உடன், 26 சதவீதம் பேர், 'ஸ்மார்ட்' போன் பார்க்கின்றனர்.
துாங்குவதற்கு முன், 80 சதவீதம் பேர் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட் போன்கள், குடும்ப உறுப்பினர்களை, வீட்டுக்குள்ளேயே பிரித்து வைக்கிறது. இதன் பயன்பாடு விஷயத்தில், பெற்றோர் மிகச் சரியாகப் பயணிக்க வேண்டும்; இல்லையேல் பிள்ளைகள் தவறான பாதையில் பயணித்து விடுவர். ஸ்மார்ட் போன், உறவுகளை உடைத்து விடக் கூடாது; நட்பில் விரிசலை ஏற்படுத்தி விடக் கூடாது. புத்தக வாசிப்பை வெறுக்க வைத்து விடக் கூடாது.
பல மணி நேரம் போனுடன் செலவிடுவதால், பல்வேறு நோய் பாதிப்புக்கு மனிதன் உள்ளாக வாய்ப்புகள் உண்டு. அறிவை விரிவு செய்ய, உலகை அறிய, வழி தேட, விழிப்பு பெற, வாசிக்க 'ஸ்மார்ட்' போனை பயன்படுத்தலாம்; வக்கிரப் பாதையில் பயணிக்க பயன்படுத்தக் கூடாது. ஸ்மார்ட் போன் மோகத்தை கண்டித்து, ஜெர்மனியில், ஏழு வயது சிறுவன் ஒருவன் தலைமையில், 400 சிறுவர் - சிறுமியர் இணைந்து, ஒரு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர் என்ற செய்தி வெளியாகி உள்ளது; இது, உலகைத் திரும்பி பார்க்க வைத்துள்ளது. 'ஸ்மார்ட்' போன் போதையிலிருந்து விடுபட்டு, நல்ல பல சிறப்பான அம்சங்களுடன், மன உளைச்சல் இன்றி பயணிப்போம்!
---
வங்கிகளை இரவில் இயக்குவது சாத்தியம் ஆகாது!
பா.சேகர், முதுநிலை மேலாளர், கனரா வங்கி, ஐ.ஐ.டி., கிளை, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வங்கி பணி நேரத்தை, காலை, 10:00 மணி முதல், இரவு 8:30 மணி வரை மாற்ற வேண்டும்' என, இதே பகுதியில் வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். அரசு, தனியார், வங்கி உள்ளிட்ட, இதர வகையான, மக்கள் சேவைகள் அனைத்தும், இணையம் வழியாக வழங்குவது, அதிகரித்து வருகிறது. இன்னும் பல சேவைகள், மொபைல் போன் மற்றும் இணையம் வழியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
அதிக பணிச் சுமையுடனும், மத்திய அரசு ஊழியர்களை விட குறைவான ஊதியத்திலும், வங்கி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இரவு, 8:00 மணி வரை, பொதுத் துறை வங்கிகள் தினமும் இயங்குகின்றன. வாடிக்கையாளர்கள் சேவை, 5:30 மணிக்கே நிறைவு பெற்றாலும், அன்றாட பணிகளை முடிக்கவே, இரவு, 9:00 மணி ஆகிறது. அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களுக்கு, சனி, ஞாயிறு விடுமுறை அளிக்கப்படுகிறது. அவர்களின் பணி நேரங்களும், காலை, 10:00 மணி முதல், மாலை, 5:30 மணி வரை மட்டுமே!
வங்கி சேவைகளை, மின்னணு முறையில், வாடிக்கையாளர்கள் மொபைலில் பெறும் காலம் இது. இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் நீங்கலாக, அனைத்து சனிக் கிழமைகளிலும், முழு நாள் சேவையை, 10:00 மணி முதல், 3:30 மணி வரை வங்கிகள் வழங்குகின்றன. எனவே, வாசகர் கூறியது போல், காலை 10:00 மணி முதல், இரவு 8:30 வரை, வங்கி பணியாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சாத்தியமில்லாதது.
அதிக பொறுப்பு களுடனும், மிக அதிக பணிச்சுமையுடனும், மிகக் குறைவான ஊழியர்களுடன் பணியாற்றி வருகிறோம். அரசு அலுவலர்களுக்கு இணையான சம்பளத்தை, எங்களுக்கு அளிக்க வேண்டும். அது தான், ஆறுதலாக இருக்கும்!
