PUBLISHED ON : ஏப் 24, 2026 01:01 AM

எஸ்.சுப்பையா, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல், தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ராணிப்பேட்டையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அதை மொழி பெயர்த்த தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, வாய்க்கு வந்ததை எல்லாம் அடித்து விட, அவரது ஆங்கில மொழி புலமை சமூக வலை தளங்களில், 'டிரண்ட்' ஆகி, கலகலத்துப் போனது.
இவ்விஷயம் ராகுல் காதுக்கு செல்ல, கடுப்பானவர், தான் தமிழகத்திலிருந்து செல்லும் வரை, தன் முன்பே வரக் கூடாது என்று, செல்வப்பெருந்தகைக்கு, 'தடா' போட்டு விட்டாராம்!
அதனால், ராகுல் பங்கேற்ற கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் செல்வப்பெருந்தகையால் பங்கேற்க முடியவில்லை.
'ஒரே அவமான போச்சு குமாரு' என்ற சினிமா டயலாக் போல், தனியாக புலம்பிக் கொண்டிருந்த செல்வப்பெருந்தகை, இவ்விஷயம் வெளியில் தெரிந்தால் அவமானமாக போகுமே என்று நினைத்தவர், தன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகளால், தான் சிறைபிடிக்கப்பட்டு இருப்பதாக ஒரு பொய்யை சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.
பொய் பேசுவதில், ஹிட்லரின் உளவாளியான கோயபல்சிற்கே, 'டப்' கொடுக்கும், தி.மு.க., முதல்வர் ஸ்டாலின், இப்பதிவைப் பார்த்ததும், அரசியல், 'அவியல்' செய்யும் விதமாக, 'பிரசாரம் முடிய, 48 மணி நேரம் கூட இல்லாத நிலையில், எதிர்க்கட்சியினரை முடக்க, மத்திய பா.ஜ., அரசு செய்யும் அட்டூழியத்திற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பர்' என்று கட்டண அறிக்கையை பறக்க விட்டுள்ளார்.
உண்மையில், வருமான வரித்துறையினர் அப்படி எந்த சோதனையும் நடத்தவில்லையாம்; தன் மொழிப் புலமையால் நேர்ந்துள்ள அவமானத்தை தடுக்க செல்வப்பெருந்தகை போட்ட நாடகமாம் இது!
இந்த உண்மையை அறியாமல், கட்டண அறிக்கை வெளியிட்டு, இப்போது கேலிக்கு ஆளாகி வருகிறார், ஸ்டாலின்.
தன் குட்டு வெளிப்பட்டவுடன், அதை சமாளிக்கும் விதமாக, 'சீருடை அணியாத, தமிழ் பேச தெரியாத சிலர் தங்களை வருமான வரித்துறையினர் என்று கூறி, நான் வசிக்கும் பகுதியை முற்றுகையிட்டனர். காலையில் நான் செல்லும் விமானம் புறப்பட்ட பின்னர் தான், அவர்கள் கலைந்து சென்றனர்' என்று, இப்போது, 'அடித்து' விட்டுள்ளார், செல்வப்பெருந்தகை.
ஒரு பொய்யைக் கூறி, அதை மறைக்க ஒன்பது பொய் கூறிய கதையாகி விட்டது, செல்வப்பெருந்தகையின் நிலை!
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா? ஆர்.ஹரிகோபி, புதுடில்லியில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இனம் இனத்தோடு சேரும் என்பது
போல், தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தி.மு.க., முதல்வர் ஸ்டாலினுக்கு
ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்த ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டில்லி முன்னாள்
முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஸ்டாலினுக்கு இணையாக பல கட்டுக்கதைகளை
தமிழக மக்களிடம் அவிழ்த்து விட்டுள்ளார்.
டில்லியில், தற்போதைய
பா.ஜ., ஆட்சியில், 200 யூனிட் வரை இலவச மின்சாரமும், 20,000 லிட்டர் வரை
இலவச தண்ணீர் வினியோகமும், மகளிருக்கான இலவச பேருந்து பயணம், மருத்துவம்,
மாதிரி பள்ளிகள் உள்ளிட்ட அனைத்தும், நன்றாக முறைப்படுத்தப்பட்டு, ஒரு
குறைவும் இல்லாமல் வழங்கப்பட்டுவரும் நிலையில், தன் ஆட்சியில் கொண்டு வந்த
இலவச மின்சாரம், மருத்துவம், மாதிரி பள்ளி உள்ளிட்ட அனைத்து
நலத்திட்டங்களையும் பா.ஜ., அரசு நிறுத்திவிட்டது என்று, அபாண்டமான பொய்யை
கூறியுள்ளார், கெஜ்ரிவால்!
தன் ஆட்சி காலம் முழுதும், ஆளும்
மத்திய அரசை எதிர்த்து, போர்க்கொடி உயர்த்தி போராட்டம் செய்வதிலேயே காலத்தை
கழித்தவர், கெஜ்ரிவால்.
அதனால், பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த
நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, தெருக்கள் விரிவுபடுத்தப்பட்டு உள்ளதும்,
டில்லி மாநகர பேருந்துகள் செல்ல முடியாத, மக்கள் தொகை அடர்ந்துள்ள
பகுதிகளுக்கு, புதிதாக, 280 மினி மின்சார பேருந்துகள் இயக்கப்படுவதும்,
1,000 மின்சார பேருந்துகளை புதிதாக கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதும், 2026
ஆண்டுக்குள், 6,000 மின்சார பேருந்துகள் என்ற இலக்கு நிர்ணயித்துள்ளதும்,
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரில், மலிவு விலை உணவகங்கள் பல இடங்களில்
துவங்கியுள்ளதால், ஏழை தொழிலாளர்கள் பயனடைந்து வருவதையும் அறியாமல், கண்
இருந்தும் காணும் திறனற்று, காதிருந்தும் கேட்கும் மனமற்று இருக்கிறார்,
கெஜ்ரிவால்.
அரசின் மக்கள் நல திட்டங்களால், டில்லி மக்களின் மனதில் இருந்து கெஜ்ரிவால் சிறிது சிறிதாக மறைந்து வருகிறார் என்பதே உண்மை.
இதை மறைத்து, அரசியல் லாபத்திற்காக அபாண்டமான பொய்களை அவிழ்த்து விட்டுள்ளார்.
ஆனால், முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா என்ன?
தோல்வியும் வெற்றியே! வீ.ராஜகோபால், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா லோக்சபா சிறப்புக்
கூட்டத் தொடரில் நிறைவேற்ற முடியாமல் போனதில், பா.ஜ.,விற்கு சற்று
பின்னடைவு தான் என்றாலும், தங்கள் உரிமையை பறிப்பது யார் என்ற தெளிவு
மகளிருக்கு இப்போது ஏற்பட்டு இருக்கும்.
கடந்த 2023ல் கொண்டு
வரப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை, 2026 மக்கள் தொகை கணக்கீடு
செய்யப்பட்டால் தான் அமல்படுத்த முடியும் என்பதால், அதன் அவசியத்தை
உணர்ந்து, தற்போது மகளிர் மசோதாவை மத்திய அரசு கையில் எடுத்தது.
அத்துடன், தற்போதைய மக்கள் தொகை, 140 கோடியை கடந்து விட்டது என்பதாலும்,
அதற்கேற்ப, லோக்சபா தொகுதியை அதிகப்படுத்துவதால், 2029 பார்லிமென்ட்
தேர்தலின் போது, அதை எளிதில் நடைமுறைக்கு கொண்டு வரலாம் என்ற
அடிப்படையிலேயே, இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த மகளிர்
இட ஒதுக்கீடு மற்றும் லோக்சபா தொகுதி எண்ணிக்கையை பழைய விகிதாசாரம்
மாறாமல், அதே நடைமுறையில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்டால்,
2029 பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பாகவே, ஒரே கல்லில் இரு மாங்காய்
அடிக்கலாம் என்று பா.ஜ., நினைத்ததில், சற்று ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது
என்றே கூறலாம்.
அதேநேரம், இதனால் பா.ஜ.,வுக்கு ஒன்றும் பெரிதாக
பாதிப்பு இல்லை; மாறாக, அடுத்து வரும் மாநிலங்களுக்கான சட்டசபை
தேர்தல்களில், இதையே பிரசார உத்தியாக எடுத்துக்கொண்டு, மகளிர் ஓட்டுகளை
பெறலாம்!
எனவே, மசோதா தோல்வி அடைந்தாலும், பா.ஜ.,விற்கு வெற்றியே!
