PUBLISHED ON : அக் 16, 2025 12:00 AM

பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கொள்கையற்ற ஓர் இளைஞர் கூட்டம் தற்போது உருவாகியுள்ளது; அவர்களை கொள்கையாளர்களாக மாற்றும் பொறுப்பு எல்லாரையும் விட நமக்கு உள்ளது' என்று கூறியுள்ளார், துணை முதல்வர் உதயநிதி.
தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகள், தங்களின் பொதுக்கூட்டங்களுக்கு பணம், குவார்ட்டர், கோழி பிரியாணி கொடுத்து தான் கூட்டம் சேர்க்கின்றன. ஆனால், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஒரு நிகழ்வில் பங்கேற்கிறார் என்று தெரிந்தாலே பிரமாண்டமான கூட்டம் கூடி விடுகிறது.
அன்பால் கூடும் இக்கூட்டத்தை தான் கொள்கையற்ற கூட்டம் என்கிறார், உதயநிதி.
சரி... த.வெ.க.,வினர் கொள்கை இல்லாதவர்களாகவே இருந்துவிட்டு போகட்டும்... தி.மு.க.,விற்கென கொள்கைகளை வகுத்துள்ள அக்கட்சி, அதன்படி தான் செயல்படுகிறதா?
பகுத்தறிவு சிந்தாந்தம் பேசும் தி.மு.க., ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி, ஓட்டுக்காக சிறுபான்மை மதங்களை போற்றுகிறது.
'ஜாதி பாகுபாட்டை ஒழிப்போம்; சமூகநீதியை காப்போம்' என்று கூறியபடி, ஜாதி கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து, ஜாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்துகிறது.
இத்தகைய இரட்டை நிலைப்பாட்டுக்கு பெயர் தான் கொள்கையா?
காமராஜர் இறக்கும் போது அவரிடம் இருந்தது வெறும், 200 ரூபாய். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜீவா, உடுத்த மாற்றுத்துணி கூட இல்லாமல் வாழ்ந்தார். தன் சொத்துக்களை எல்லாம் ஏழை மக்களுக்கு கொடுத்தார் முத்துராமலிங்கத் தேவர். அமைச்சராக இருந்த கக்கன், மதுரை அரசு மருத்துவமனையில் வராண்டாவில் படுத்து சிகிச்சை பெற்றார்.
இவர்களை போன்ற கொள்கைவாதிகளா தி.மு.க.,வினர்?
மக்களுக்கான சேவை அரசியலை, பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாற்றியது தானே கழகத்தின் கொள்கை.
எனவே, இன்றைய நிலையில், தமிழகத்திற்கு தேவை நல்ல தலைமை தானே தவிர, கொள்கை என்று கூறி மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்கள் அல்ல.
'நமக்கான தலைவனை திரையில் தேடக்கூடாது' என்கின்றனர். அரசியல் தலைவர்கள் நேர்மையாளர்களாக, ஊழல்வாதிகளாக இல்லாமல் இருந்தால், மக்கள் தங்களுக்கான தலைவனை திரையில் தேட மாட்டார்கள்.
அரசியலுக்கு வருபவர் எந்த துறையில் இருந்து வருகிறார் என்பது முக்கியமல்ல. எப்படிப்பட்டவர் என்பதே முக்கியம்.
எனவே, த.வெ.க.,விற்காக கூடும் கூட்டம், கொள்கையற்ற கூட்டமல்ல; மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிப்போரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதை கொள்கையாக கொண்ட கூட்டம்!
lll
விளையாட்டு எனும் சூதாட்டம்! எஸ்.சுந்தாஸா, கும்பகோணத் தில் இருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த பார்லிமென்ட் கூட்டத்தொடரில்,
'ஆன்லைன்' விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை மசோதாவை மத்திய
அரசு நிறைவேற்றியது. 'ரியல் மணி கேம்ஸ்' காரணமாக இந்தியர்கள்
ஆண்டுதோறும், 15,000 கோடி ருபாய் இழந்து வருவதாக அரசு அறிக்கைகள்
தெரிவிக்கின்றன.
உலக சுகாதார அமைப்பு மற்றும் பல்வேறு ஆய்வுகளின்
அடிப்படையில், கடந்த சில ஆண்டுகளாக, இந்த விளையாட்டுகள், பல நடுத்தர
மற்றும் ஏழை குடும்பங்களின் அனைத்து விதமான சேமிப்பையும் இழக்க வைத்து,
கடனாளியாக மாற்றியுள்ளன.
மேலும், நிதிநெருக்கடி காரணமாக
தற்கொலைகள் அதிகரிக்கின்றன. சில வெளிநாட்டு விளையாட்டு நிறுவனங்கள் பண
மோசடி, வரி ஏய்ப்பு, பயங்கரவாத நிதி பரிவர்த்தனை என்று நாட்டின்
பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
'விர்ச்சுவல் பிரைவேட்
நெட்வொர்க்' எனும் பொது இணையத்தை பயன்படுத்தி, தங்கள் அடையாளத்தை மறைத்து
செயல்படுவதால், இதுபோன்ற நிறுவனங்களின் நதிமூலம், ரிஷிமூலம் கண்டுபிடிக்க
முடிவதில்லை.
லாட்டரி, சூதாட்டம், மது மற்றும் போதை பழங்கங்களின் மற்றொரு பரிணாமம் தான், இந்த ஆன்லைன் விளையாட்டுகள்!
முதலில், ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு இலவசமாக, 'கேம்' என்று
ஆரம்பிப்பர். பின், '100 ரூபாய் கட்டினால் போதும்; வெற்றி நிச்சயம்' என்று
கூறி அவர்களை மோசடி வலையில் விழ வைப்பர். தங்களின் நம்பகத்தன்மையை
அதிகரிக்க, பிரபல நடிகர்கள், விளையாட்டு வீரர்களை வைத்து விளம்பரப்
படுத்துவர்.
'இவ்விளையாட்டுகளில் அதிர்ஷ்டம் இல்லை; மனித மூளை
கொண்டே வெற்றியாளர்கள் நிர்ணயிக்கப்படுகின்றனர். இத்துறையில், இரண்டு
லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர்' என்பது போன்ற வாதங்களை முன்வைத்து,
இந்நிறுவனங்கள், இந்த விளையாட்டுகளுக்கு எதிரான வழக்குகளில் தடை பெற்று
வந்து உள்ளன.
மேலும், 'பான்டஸி' எனும் கற்பனை விளையாட்டாக
புதுவடிவம் பெற்று, இச்சட்டத்தை மென்மையாக்க சில நிறுவனங்கள் வழிபார்த்து
வந்த நிலையில், இவ்விளையாட்டு குறித்த வரைமுறைகள், பார்லிமென்ட்டில் சட்ட
வடிவம் பெற்று, இவ்விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இச்சட்டத்தை அமல் செய்து, ஆன்லைன் விளை யாட்டுகளை தொடர்ந்து கண்காணிப்பது
காலத் தின் கட்டாயம்! காரணம், இதன்வாயிலாக பல லட்சம் ஏழை மற்றும் நடுத்தர
குடும்பங்களின் வாழ்வு காப்பாற்றப்படும்!
lll
ஒருதலைபட்சமான நடவடிக்கை ஏன்? அ.யாழினி பர்வதம், சென்னையிலிருந்து அனுப்பிய
இ - மெயில் கடிதம்: தீபாவளி வந்துவிட்டால் போதும்; உணவு பாதுகாப்புத் துறை
அதிகாரிகள் பொங்கியெழுந்து விடுகின்றனர். 'பயன்படுத்திய எண்ணெயை மீண்டும்
பயன்படுத்தக் கூடாது.
இனிப்பு, காரங்களை திறந்து வைக்கக் கூடாது.
உரிமம் பெறாமல் எவரும் இனிப்பு விற்கக்கூடாது. மீறினால், 10 லட்சம் ரூபாய்
அபராதம், ஆறு மாதம் சிறை' என்று ஆயிரத்தெட்டு விதிமுறைகளை
அறிவிக்கின்றனர்.
போதாதற்கு, சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், மாசு
கட்டுப்பாடு என்ற பெயரில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கின்றனர். தினசரி
ஆயிரக்கணக்கான வாகனங்கள் சாலையில் புகையை கக்கிக்கொண்டு செல்கிறதே...
அதனால், காற்று மாசு அடையாதா? பட்டாசு வெடிப்பதால் மட்டும் தான் காற்று
மாசு அடையுமா?
ரம்ஜான், பக்ரீத் பண்டிகையின் போது பிரியாணி
விற்பனை சூடு பிடிக்கிறதே! அப்போது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்
இறைச்சி விற்பனை குறித்து கட்டுப்பாடுகள் விதிக்கின்றனரா? கிறிஸ்துமஸ்
பண்டிகையின் போது கேக் வியாபாரம் செய்யும் பேக்கரிகளுக்கு விதிமுறைகள்,
கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறதா?
ஹிந்து பண்டிகைகளின் போது மட்டும் ஏன் இத்தனை கெடுபிடிகள், ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள்?
lll