PUBLISHED ON : டிச 27, 2024 12:00 AM

ஆர்.ரமேஷ்வர்த்தன், கன்னியாகுமரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருநெல்வேலியில், மாவட்ட நீதிமன்றத்தின் நுழைவாயில் அருகே நடந்த படுகொலை சம்பவத்தில், கடமை தவறிய போலீசாருக்கு எதிராக, உரிய நடவடிக்கை எடுக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த படுகொலை சம்பந்தமாக நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு தானாக முன்வந்து இவ்வழக்கை விசாரிக்கையில், 'பணியில் இருக்கும் போலீசார் பலர், மொபைல் போனில் மூழ்கிக் கிடக்கின்றனர். இப்படி இருந்தால், எப்படி பாதுகாப்பு பணி நடக்கும்?' என, கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதற்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, 'ஒருவரைத் தவிர மற்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்த போது ஒருகுற்றவாளியை விரட்டி பிடித்ததும் போலீஸ் தான்; பெரும்பாலும் அவர்கள் அர்ப்பணிப்புடன் தான் பணியாற்றுகின்றனர்' என, நீதிபதிகளின் எலும்பு முறிவு வினாவுக்கு, மாவுக்கட்டு போட்டுள்ளார்.
போலீசார் மட்டுமல்ல; இன்று, கழகத்தினருக்கு இடுப்பு வேட்டியை காட்டிலும், பதவி எப்படி முக்கியமானதோ அதுபோல, பச்சிளம் குழந்தைகள் முதல், பல் போன முதியோர் வரை மொபைல் போனில் மூழ்கி கிடக்கின்றனர்.
உறங்கும் நேரம் தவிர்த்து, கழிப்பறைக்கு கூட போன் இல்லாமல் செல்வதில்லை.
போனில் பேசிக் கொண்டே தண்டவாளங்களை கடக்கும் போது ஏற்படும் ரயில் விபத்துகளிலிருந்து, பெரும்பாலான சாலை விபத்துகளுக்கும் மொபைல் போனே மூலக் காரணம்!
பணிபுரியும் இடங்களில் கூட, இடது காதில் போனை வைத்து, அதை தோளில் முட்டுக் கொடுத்தபடி பணிபுரிவதை சர்வ சாதாரணமாக காணலாம்.
இதைத் தவிர்க்க, அரசு மற்றும் தனியார்நிறுவனங்கள், தங்கள் பணியாளர்கள்அலுவலகம் வந்ததும், அவர்கள் மொபைல் போன்களை வாங்கி, ஒரு லாக்கரில் பூட்டி வைத்து விட வேண்டும்.பணி முடிந்து, வீட்டிற்கு செல்லும்போது தான், அதை கொடுக்க வேண்டும். பணி நேரத்தில், அவசர தகவல் வந்தால் மட்டுமே, மொபைலை தொட அனுமதிக்க வேண்டும்.
மற்றபடி, பணி நேரத்தில் போனை கண்ணால் கூட பார்க்கக் கூடாது என, கடுமையான உத்தரவு பிறப்பித்து, அதை முழுமையாக பின்பற்றினால் அன்றி, பணிபுரிவோரிடம் முழுமையான கடமை உணர்ச்சியை எதிர்பார்க்க முடியாது!
lll
மக்களே சிந்தியுங்கள்!
அ.குணா,
கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகம், அனைத்து
துறைகளிலும் முதலிடத்தில் உள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது
பெருமைப்பட்டு கொள்கிறார். அப்படியே, கடன் வாங்குவதிலும், தமிழகம் முதல்
மாநிலமாக இருப்பதையும் சொல்லி இருக்கலாம்!
தாங்கள் ஆட்சிக்கு வர
வேண்டும் எனும் சுயநலத்திற்காக, இலவசங்களை வாரி வழங்குகின்றனர்,
அரசியல்வாதிகள். அப்படி, கடந்த சட்டசபைத் தேர்தலில், அள்ளிவீசப்பட்ட
இலவசங்களால் இன்று, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும், 2
லட்சத்து, 63,000 ரூபாய்க்கும் மேல் கடன் உள்ளது.
இன்று, நாம் அனைவருமே, கடனாளிகள் தான்!
ஆட்சியாளர்கள்
இதற்கு எல்லாம் கவலைப்பட போகின்றனரா என்ன... வரும் 2026 சட்டசபைத்
தேர்தலில் வெற்றி பெற, என்னென்ன இலவசங்களை அறிவிக்கலாம், வாக்காளர்களை
எப்படி கவர் பண்ணலாம் என்பதுகுறித்து, இப்போதே, 'ரூம்' போட்டு யோசித்துக்
கொண்டிருப்பர்.
அதிலும், தற்போது, மகளிருக்கான உரிமைத் தொகை மாதம்,
1,000 ரூபாய் கொடுத்து வரும் நிலையில், சட்டசபை தேர்தலின் போது, அது,
2,000 ரூபாயாக உயரவும், தேர்தல் நெருங்கும் சமயத்தில், உரிமைத் தொகை
வாங்கும் பெண்களின் எண்ணிக்கை பல மடங்காக உயரவும் செய்யலாம்!
இதேபோன்று,
மற்ற அரசியல் கட்சிகளும், உரிமைத் தொகையை கண்டபடி உயர்த்தி, வாக்குறுதி
கொடுக்கலாம். மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்தால் என்ன, நாடு நாசமானால்
தான் என்ன... தாங்கள் அதிகாரத்திற்கு வந்து விட வேண்டும்!
ஒரு
நல்லாட்சி என்பது மக்களை கையேந்த வைப்பது அல்ல; அவர்கள் தேவையை, அவர்களது
உழைப்பில் நிறைவேற்றிக்கொள்ளும் விதமாக வேலைவாய்ப்பை உருவாக்கி, அவர்கள்
வாழ்வாதாரத்தை உயர்த்துவது தான், சிறந்த நிர்வாகத்திற்கு அழகு.
ஆனால்,
இங்கு நடப்பது என்ன... சுதந்திரம் அடைந்த, 78 ஆண்டுகளில், இன்னும் நம்மை
ரேஷன் கடைகளிலும், இலவசங்களுக்காகவும் கையேந்த வைத்து விட்டு, தாங்கள்
மட்டும் கோடீஸ்வரர்களாக உலா வந்து கொண்டிருக்கின்றனர். நாமோ, இன்னும்
கடன்காரர்களாக இருக்கிறோம்!
இப்படியே, இலவசங்களுக்கும்,
பணத்துக்கும் விலைபோய் கொண்டே இருந்தால், நாம் மட்டுமல்ல... நம்
தலைமுறையினரும், கடன்காரர்களாகவே வாழ்வர்.
ஓட்டுப்போடும் மக்களே... சிந்தியுங்கள்!
lll
விளக்கம் அளிப்பரா?
ஆர்.பாலமுருகன்,
மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஒரே நாடு ஒரே தேர்தல்'
மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது மத்திய
அரசு. ஆனால், எதிர்க்கட்சிகள் இதை முடக்குவதில் குறியாக இருக்கின்றன.
'மாநில சுயாட்சி பறிக்கப்படும்' என்று இவர்கள் கூச்சலிடுவது, எந்த
அடிப்படையில் என்று புரியவில்லை. இதுகுறித்து, எதிர்க்கட்சியினர் விளக்கம்
அளித்தால், அனைவரும் புரிந்து கொள்வரே... அதை செய்ய ஏன் தயங்குகின்றனர்?
கடந்த
50 ஆண்டுகளுக்கு முன் இருந்த திட்டம் தானே இது... அறிவியல் வளர்ச்சி
இல்லாத அந்த காலகட்டத்திலேயே, ஒரே தேர்தல் வெற்றிகரமாகவே நடத்தப்பட்டுள்ளது
என்றால், இப்போது அதை நடைமுறைப்படுத்த முடியாதா?
சட்டசபை தேர்தல்,
பார்லிமென்ட் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்... இதில், யாராவது இறந்து
விட்டால் இடைத்தேர்தல் என்று ஆண்டு முழுதும் தேர்தல் நடந்து
கொண்டிருந்தால், நாட்டு முன்னேற்றத்திற்கு எங்ஙனம் நேரம் ஒதுக்குவர்?
இதில், காலம், பொருள் விரயத்தை தவிர, என்ன லாபம்?
இத்திட்டத்தால்,
பா.ஜ., கட்சிக்கு மட்டுமே வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று கூற முடியுமா?
அனைவருக்கும் பொதுவான தேர்தலாக தானே இருக்கப்போகிறது எனும் போது,
எதற்காக எதிர்க்கட்சிகள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்கின்றன?
ஒன்று,
இத்திட்டத்தின் சாதக - பாதகங்களை அறிக்கையாக வெளியிட வேண்டும் இல்லை
தேர்தல் வேண்டுமா, வேண்டாமா என்று கருத்துக் கணிப்பாவது நடத்த வேண்டும்.
எதுவுமே செய்யாமல், 'எங்களுக்கு இது வேண்டாம்' என கூப்பாடு போடுவது எந்த விதத்தில் சரி?
மாற்றுக்கருத்து இருந்தால், அதை மக்களுக்கு விளக்குங்கள் இல்லை என்றால், வாய்மூடி மவுனமாக ஒரே தேர்தலை ஏற்றுக் கொள்ளுங்கள்!
lll