/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
இந்தியாவை எங்கு நிறுத்துமோ தெரியவில்லையே?
/
இந்தியாவை எங்கு நிறுத்துமோ தெரியவில்லையே?
PUBLISHED ON : நவ 13, 2024 12:00 AM

என்.வைகைவளவன்,
மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மஹாராஷ்டிராசட்டசபை
தேர்தலில் போட்டியிடும், பா.ஜ.,கூட்டணியும், காங்., கூட்டணியும்,
இலவசசலுகைகளை மாறி மாறி அறிவிக்கின்றன.
'பெண்களுக்கு மாதா மாதம்,
2,100 ரூபாய்'என்கிறது பா.ஜ., கூட்டணி; இதற்கு போட்டியாக, 'பெண்களுக்கு
மாதா மாதம், 3,000 ரூபாய்' என்கிறது காங்கிரஸ் கூட்டணி.
இதைத் தவிர,
'அரசு பஸ்களில் இலவசப்பயணம்; 500 ரூபாய்க்கு காஸ் சிலிண்டர்கள்; வேலை
இல்லாத இளைஞர்களுக்கு மாதம், 4,000 ரூபாய்' என்று, 'அடித்து விட்டு'
இருக்கிறது காங்., கூட்டணி.
பா.ஜ., கூட்டணியோ, 'முதியோருக்குமாதம்
2,100 ரூபாய்; 25 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, 10 லட்சம்
மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய் கல்விக் கடன்' என்று தாராளமாக சலுகைகளை
வாரி வழங்கியுள்ளது.
இதுவரை, தமிழக கட்சிகள் தான், இலவசங்களை வாரி
வழங்கின; பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய்; பஸ்களில் பெண்களுக்கு இலவச
பயணம் என்றுஎல்லாம் கூறியுள்ளன. இதைப் பார்த்து, தேசிய கட்சிகளும் தடம்
மாறி விட்டன.
இலவசம் என்ற பெயரில் ஜனநாயகத்தைக்கேலிக் கூத்தாக்கும் இத்தகைய போக்கு, இந்தியாவை எங்கு கொண்டு நிறுத்துமோ தெரியவில்லை.
விதிமீறல்களுக்கு வேண்டும் வேகத்தடை!
வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மது போதையில் சைக்கிள் ஓட்டினால், மூன்று ஆண்டுசிறை அல்லது 2.50 லட்சம்ரூபாய் அபராதம். சைக்கிள்ஓட்டும் போது மொபைல் போன் பேசினால், ஆறு மாதம் சிறை அல்லது 50,000 ரூபாய் அபராதம்' என்ற செய்தி வெளியாகிஉள்ளது.
ஆனால், இது நம் நாட்டில்இல்லை, ஜப்பானில்!
கடந்த ஆண்டு ஜப்பானில்,72,000 சைக்கிள் விபத்துகள்பதிவானதால், ஜப்பான் அரசு இந்த முடிவை எடுத்துஉள்ளது. நம் மாநிலத்தில் சாலை விதிகளை மீறுவோர்மீது நடவடிக்கை என்பது பெயரளவில் தான் இருக்கிறது.
சாலை விதிகளை மதிக்காதவர்களுக்கு அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுஉள்ளது என்றாலும், விதிமீறல்கள் கிராமம் முதல், பெருநகரங்கள் வரை அதிகஅளவில் நடக்கவே செய்கின்றன.
பலரும் லைசென்ஸ் இன்றிவாகனம் ஓட்டுகின்றனர். 18 வயதுக்கு குறைவானவர்களும் அதிகளவில் இருசக்கர வாகனங்களை ஓட்டுகின்றனர். கிராமப் பகுதிகளில், மாணவர்கள் தண்ணீர்லாரி ஓட்டுவது, டிராக்டர் ஓட்டுவதை வாடிக்கையாககொண்டுள்ளனர்.
தன் மகள், மகன் லைசென்ஸ் இன்றி வாகனம்ஓட்டுவதை, பெற்றோரும் கைதட்டி ரசித்து ஊக்கப்படுத்துகின்றனர். பின்னாளில்அவர்கள் விபத்தில் சிக்கும்போது, கண்ணீர் விடுவதில்அர்த்தமில்லை.
மேலும், ஒரு டூ - வீலரில்குடும்பத்தினர் நான்கைந்து பேர் பயணிக்கின்றனர். கிராமப் பகுதி பள்ளிகளுக்குமாணவர்கள் டூ - வீலரில் வருகின்றனர்; இவர்களை ஆசிரியர்களால் கண்டிக்க முடிவதில்லை.
இது ஒரு பக்கம்என்றால், அலைபேசியில்பேசியபடி தலைசாய்த்து பயணிப்பவர்கள், இன்னொரு அச்சுறுத்தல்.ஹெல்மெட்டுக்குள் மொபைல் போனை செருகிவைத்து பேசியபடியே பலரும் பயணிக்கின்றனர்.
இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுவோரை கண்டிப்புடன் பிடித்து அபராதம் விதித்தால், அரசுக்குதினமும் பல நுாறு கோடி ரூபாய் வருமானம் வரும்.
எனவே, சாலைவிதிகளை மீறுவோரை பிடித்து அபராதம் விதிப்பதற்கு, பகுதி வாரியாக,முன்னாள் ராணுவவீரர்களை கொண்ட பறக்கும்படை அமைக்க வேண்டும்.
மேலும், சென்னை போன்ற பெருநகரங்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன்,ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவற்றின்வாயிலாக விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களின் எண் கண்டறியப்பட்டு, அபராதம் விதிக்க வேண்டும்.அப்போது தான் சாலை விபத்துகளையும், உயிர் பலிகளையும் தடுக்க முடியும்.
ராணுவ வீ ரர்களை குறை கூறாதீர்கள்!
எம்.நடேசன், முன்னாள் ராணுவ வீரர், கோவையில்இருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: ஒரு முன்னாள் ராணுவ வீரனாக சமீபத்தில், அமரன் படத்தைபார்க்க நேர்ந்தது; நன்றாக இருந்தது.
சினிமாவிற்கும், நிஜ வாழ்க்கைக்கும் வித்தியாசங்கள் உள்ளன; அவை இல்லையென்றால், அது சினிமாவும் அல்ல; முகுந்த் போல ராணுவ வீரர்கள்வாழும் வாழ்க்கை, போலியானதும் அல்ல.
இந்த படத்தின் மீது பல விமர்சனங்கள் வந்துள்ளன.அதில் மிக முக்கியமாக, அவரை பிராமணர் என்று குறிப்பிடாதது.
அதற்கு என்னென்ன காரணங்கள் உள்ளனவோ தெரியாது. ராணுவ வீரர்களுக்கு ஜாதிகள் இல்லை என்பது தான் உண்மை. இந்நிலையில், அவர் மனைவிகிறிஸ்துவர் என்பதை, வெளிப்பூச்சுடன் நிறுத்தியிருந்தால் இவ்வளவு விமர்சனங்கள் இருக்காது.
ஜாதியை மீறி ஒரு ராணுவ வீரரின் பணி எப்படி உள்ளது; நாட்டை காக்க அவர் எவ்வாறு போராடியுள்ளார் என்பதைதான் நாம் உணர வேண்டும். ஏனெனில், என் பார்வையில், நம்மைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும், ஒரு ராணுவ வீரருக்கு உள்ள கடினங்கள் குறித்து, கண்டிப்பாக நன்றாக தெரிந்திருக்கும்.
பல இஸ்லாமிய சகோதரர்கள், அவர்கள் மதத்தினரை மட்டும், இந்தப் படத்தில் குற்றவாளிகளாக காட்டியுள்ளதாக கூறுகின்றனர்.
ஒரு ராணுவ வீரனாக கூறுகிறேன்...
இப்படி நினைக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் காஷ்மீர் சென்று, ஒரே ஒருஆண்டு வாழ்க்கை நடத்திப்பாருங்கள்; நிரபராதி இஸ்லாமிய சகோதரர்களை, ராணுவம் எப்போதும் தாக்கியதே இல்லை.
படத்தில் பார்த்திருக்கலாம்,கல்லால் அடிப்போர் அங்குள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் மட்டுமே; அடி வாங்குவோர், ராணுவத்தில் உள்ள எல்லா மதத்தை சேர்ந்தவர்களும்!
எனவே, இதிலும் ஒரு தாழ்ந்த அரசியல் செய்து, ராணுவத்தின் பணிகளைகொச்சைப்படுத்தவேண்டாம்.
மேலும் சிலர்,'ராணுவமும் நிறைய தவறுகள் செய்துள்ளது; பாலியல்வன்கொடுமை செய்துஉள்ளது' என்றெல்லாம் கூறுகின்றனர்; அதுவும், மிகத் தவறு.
நான், 16 முழு ஆண்டுகள் ராணுவப் பணி செய்துள்ளேன். அதில், 11ஆண்டுகளுக்கும் மேலாக, பஞ்சாப், காஷ்மீர் தீவிரவாத அடக்கு முறைகளில் பங்கேற்றுள்ளேன். ராணுவ வீரர்கள் யாரும் கண்டிப்பாக அவ்வாறு செய்யமாட்டார்கள்.
ராணுவ உடை என்பது,'கம்பாட் டிரெஸ்'என்றழைக்கப்படுகிறது; இன்று அனைத்து நாடுகளிலும் அது பிரபலம்.
ராணுவத்தில் பணிபுரியாதோர் கூட, அதை பேன்ட் ஆக உபயோகிக்கின்றனர். எனவே, இந்த விஷயத்தில் ராணுவத்தைக் குறை கூற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். ராணுவம் எவ்வளவு கட்டுக்கோப்பானது என்பது, எங்களை போன்ற வீரர்களுக்கு மட்டுமே தெரியும்.
கடைசியாக ஒரு வேண்டுகோள்...
இந்த படத்தின் வாயிலாக கிடைக்கும் லாபத்தை, போரில் மரணமடைந்த தமிழகத்தின் முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்திற்கும் உபயோகப்படுத்த வேண்டும்.
படத்தின் வாயிலாக ராணுவத்தின் தியாகம் குறித்து அறிந்து கொண்ட அனைவரும், ஆண்டுதோறும் டிச., 7ல் கொண்டாடப்படும் கொடி நாளில், தங்களால் இயன்ற பொருளுதவியை மாவட்ட கலெக்டரிடம் வழங்கி, ராணுவ வீரர்களின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும்!
ஜெய்ஹிந்த்!