PUBLISHED ON : ஜன 21, 2024 12:00 AM

ஜனவரி 21, 2019
கர்நாடக மாநிலம், மாகடிக்கு அருகில் உள்ள வீரபுராவில், 1907ல், ஏப்ரல் 1ல் பிறந்தவர் சிவண்ணா எனும் சிவகுமார சுவாமி. தன் 8வது வயதில் தாயை இழந்தார். துமகூரு மாவட்டம், நாகவல்லி கிராமத்தில் உள்ள
ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளியில் படித்தார். அப்போதே துமகூரு சித்தகங்கா மடத்தில் சேர்ந்து, வீர சைவ மரபுகளை கடைப்பிடித்து, ஆன்மிக பணிகளில் ஈடுபட்டார்.
கடந்த 1930ல், சித்தகங்கா மடத்தின் இளம் தலைவரானார். 'விரக்தாஷ்ரம்' என்ற துறவி அமைப்பு, இவருக்கு, சிவகுமாரசுவாமி என பெயர் சூட்டியது. 1941ல், அந்த மடத்தின் தலைவராகி, ஜாதி, மத, மாநில எல்லைகளை கடந்த ஆன்மிகத்தால் அனைவருக்கும் உதவினார். 132 உண்டு, உறைவிட பள்ளிகளை நிறுவி, ஏழைகளுக்கு இலவச கல்வி அளித்தார்.
இவரது நுாற்றாண்டு விழாவில் அப்துல் கலாம் பங்கேற்று, அவரின் சமூகப் பணிகளை பாராட்டினார். 'பத்மபூஷன், கர்நாடக ரத்னா' உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்ற இவர், தன் 112வது வயதில் 2019ல் இதே நாளில் சித்தியடைந்தார்.
மக்கள் நல்வாழ்வுக்கு யோகாவை பரப்பும்படி பிரதமர் மோடியிடம் பரிந்துரைத்த ஆன்மிகவாதியின் நினைவு தினம் இன்று!

