தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ தி.மு.க., வெற்றிக்கு பாடுபடும் பழனிசாமி!

 தி.மு.க., வெற்றிக்கு பாடுபடும் பழனிசாமி!

 தி.மு.க., வெற்றிக்கு பாடுபடும் பழனிசாமி!


PUBLISHED ON : மார் 30, 2026 03:36 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 30, 2026 03:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.வேணுகோபாலன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பா.ஜ., எப்போதோ தமிழகத்திற்குள் நுழைந்து விட்டது; தமிழக சட்டசபையிலும் அக்கட்சிக்கு நான்கு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஆனாலும், பா.ஜ., உள்ளே வந்திடும் என்று உறக்கத்தில் கூட தி.மு.க.,வினர் புலம்பிக் கொண்டுள்ளனர்.

அந்த அளவுக்கு, தி.மு.க.,விற்கு, 'இனிமா' கொடுத்துள்ளது, பா.ஜ.,!

இந்நிலையில், தமிழகத்தில் பா.ஜ., வந்துவிடக் கூடாது என, அ.தி.மு.க.,வும் - தி.மு.க.,வும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், 'அ.தி.மு.க., ஆட்சியில், தி.மு.க.,வினரின் மதுபான ஆலைகளில் இருந்தும், தி.மு.க., ஆட்சியில், அ.தி.மு.க.,வினரின் மதுபான ஆலைகளில் இருந்தும் மது வருகிறது. இருவருக்கும் இடையே கமிஷன், கலெக் ஷன் உள்ளது' என்று கூறியுள்ளார், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

பழனிசாமியின் அங்க அசைவுகள் ஒவ்வொன்றும், சீமானின் குற்றச்சாட்டை உறுதி செய்வது போலவே உள்ளன.

அதற்கு உதாரணம் தான் தொகுதி ஒதுக்கீட்டில் பழனிசாமி நடந்து கொள்ளும், 'ஒன் மேன் ஆர்மி' நடவடிக்கை!

எங்கெல்லாம் தி.மு.க., அமைச்சர்கள் களம் காண இருக்கின்றனரோ, அந்த தொகுதிகளை எல்லாம் பா.ஜ.,விற்கு ஒதுக்கியுள்ளார், பழனிசாமி. மேலும், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட இயலாதவாறு தடைகளையும் ஏற்படுத்தி விட்டார்.

தமிழக மக்களின் எதிர்காலம் இந்த இரண்டு கழகங்களின் காலடியில் தான் புதைந்து கிடக்க வேண்டும் என்ற பேராசை, பதவி மற்றும் பொருளாசையால், தனக்கு தானே சூனியம் வைத்துக் கொள்ளும் பழனிசாமி போன்றோரின் திட்டங்கள் தவிடு பொடி ஆவது நிச்சயம்.

அனைத்து தரப்பு மக்களின் ஏகோபித்த வெறுப்பை ஒட்டுமொத்தமாக சம்பாதித்து வைத்திருக்கும் தி.மு.க., அரசு, பழனிசாமியின் தவறான நடவடிக்கைகளால், மீண்டும் ஆட்சியை பிடித்தாலும் ஆச்சரியம் இல்லை!

அடுப்பறிந்து உலை வைக்க வேண்டாமா?


ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் எடுத்த முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகி விட்டது.

த.வெ.க.,வுடன் இருந்த மறைமுக பேச்சு வார்த்தைகள், பார்லிமென்டில் தி.மு.க., - எம்.பி.,க்களின் ஆதரவு காங்கிரசுக்கு தேவை என்ற அலையால் அடித்து செல்லப்பட்டு விட்டது.

அதுவரை தி.மு.க., விற்கு எதிராக எண்ணெயில் குதிக்கும் அப்பளமாக பொரிந்து கொண்டிருந்த காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர், 'தலைமை எடுக்கும் முடிவை ஏற்கிறோம்; நம் அனைவரையும் விட கட்சியே பெரிது' என்று சொல்லி வாயை இறுக மூடிக் கொண்டார்.

த.வெ.க.,வை காட்டி பயமுறுத்தி, கிடைத்த வரை லாபம் என்ற கணக்கில் கல்லெறிந்து பார்த்தது, காங்கிரஸ். அந்தோ பரிதாபம்... ஆட்சியில் பங்கு கோஷம் அமுக்கப்பட்டதுடன், 39 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் இரண்டு ராஜ்யசபா சீட் கோஷத்தை, 28 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட்டாக சுருக்கி, 'கையை' மடக்கி விட்டது, தி.மு.க.,

அதுமட்டுமா... இதுவரை தேர்தல் செலவுக்கு கைதுாக்கி விட்ட தி.மு.க., காங்கிரஸ் செய்த அலப்பறையில் கடுப்பாகி, 'கடந்த தேர்தல்களைப் போல் தாராள நிதி ஒதுக்க முடியாது. அதனால், நீங்களே பசையுள்ளவரை வேட்பாளர்களாக நிறுத்துங்கள்' என்று கூறி, 'கை' கழுவி விட்டது.

இதற்கு தான் சொல்வது, 'ஆழம் தெரிந்து காலை விட வேண்டும்; அடுப்பு அறிந்து உலை வைக்க வேண்டும்' என்பது!

நயினாரின் அ.தி.மு.க., பாசம்!



கி.பாலசுப்ரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபை தேர்தல் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், தமிழக பா.ஜ.,வில் ஏற்பட்டுள்ள, 'உட்கட்சி போர்' தேர்தல் வெற்றியை பதம் பார்த்து விடும் போல் உள்ளது.

தமிழகத்தில் பா.ஜ., வை வலிமையான சக்தியாக மாற்றியதில், அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணா மலைக்கு முக்கியப் பங்குண்டு.

'ஆடு மேய்த்தவர்' என ஏளனம் செய்தவர்களின் ஊழல் பட்டியல்களை வெளியிட்டு பதிலடி கொடுத்து, இளைஞர் படையை தன் பக்கம் ஈர்த்த அண்ணாமலையின் வளர்ச்சி, ஆளுங்கட்சியை விட, எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வையே அதிகம் அச்சுறுத்தியது என்றால் மிகையில்லை.

விளைவு? கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே, 'அண்ணாமலை இருந்தால் கூட்டணி இல்லை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி போட்ட நிபந்தனைக்கு டில்லி மேலிடம் பணிந்தது.

அண்ணாமலை ஓரங்கட்டப்பட்டு, அ.தி.மு.க.,வின் முன்னாள் விசுவாசி நயினார் நாகேந்திரன் அரியணையில் ஏற்றப் பட்டார்.

அன்றிலிருந்து நயினாரின் ஒவ்வொரு அரசியல் நகர்விலும் அ.தி.மு.க., மீதான பாசம் இலை மறை காயாக வெளிப்பட்டுக் கொண்டு இருந்த நிலையில், தற்போது, சட்டசபை தொகுதி ஒதுக்கீட்டில் அவரின் செயல்பாடுகள் பா.ஜ.,விற்குள் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது .

அவ்வகையில், பா.ஜ., வின் கோட்டையான கோவையில், நயினார் காட்டிய, 'பெருந்தன்மை' தொண்டர்களை ரத்தக்கண்ணீர் வடிக்க வைத்துள்ளது. 10 தொகுதிகள் கொண்ட கோவையில், வெறும் கோவை வடக்கு தொகுதியை மட்டும் பிச்சை எடுப்பது போல வாங்கிக் கொண்டு, மற்ற ஒன்பது தொகுதிகளையும் அ.தி.மு.க.,விடம் தாரை வார்த்துவிட்டார், நயினார்.

அண்ணாமலை குறி வைத்திருந்த சிங்காநல்லுார், கவுண்டம்பாளையம் தொகுதிகளை அ.தி.மு.க., அமுக்கிக் கொண்டது. இதில், வானதி, மத்திய அமைச்சர் முருகன் போன்ற சீனியர்களின் கைவரிசையும் இருப்பதாக கூறுகின்றனர்.

அ.தி.மு.க., ஒதுக்கிய 27 தொகுதிகளும், பா.ஜ.,விற்கு, 'வெற்றி வாய்ப்பு' குறைவான இடங்களே! சிறுபான்மையினர் அதிகம் உள்ள திருப்பூர் தெற்கு தொகுதியை பா.ஜ.,விற்கு தள்ளிவிட்டு, செல்வாக்கான பல்லடத்தை அ.தி.மு.க., வைத்துக் கொண்டுள்ளது.

அதேபோல், எஸ்.ஜி. சூர்யா ரத்தம் சிந்தி வளர்த்த சென்னை வேளச்சேரி மற்றும் தி.நகர் தொகுதிகளைக் கூட அ.தி.மு.க.,விடமிருந்து தட்டிப் பறிக்க நயினாருக்குத் துணிவில்லை.

நயினார் இன்னும் அ.தி.மு.க., பிரமுகராகவே இருக்கிறார்; பா.ஜ.,வை அ.தி.மு.க.,வின் கிளை கட்சியாகவே மாற்றிவிட்டார்.

தாமரை மலர வேண்டுமானால் வேருக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்; ஆனால், நயினாரோ வேரையே அறுத்துக் கொண்டிருக்கிறார். பழனிசாமியின் விருப்பத்தை நிறைவேற்றும் பணியை தான் செய்து வருகிறாரே தவிர, பா.ஜ., தலைவராக செயல்படவில் லை.

இதில், அண்ணாமலை முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டுள்ளார். இது தமிழகத்தில் பா.ஜ.,வை குழிதோண்டிப் புதைப்பதற்குச் சமம்!

எனவே, வரும் தேர்தலில், பா.ஜ.,வின் ஓட்டு வங்கி, 'நோட்டா'வுக்கு போட்டியாக சென்றாலும் ஆச்சரியமில்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us