PUBLISHED ON : டிச 09, 2024 12:00 AM

கு.அருண்,
கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய அரசிடம், வெள்ள
நிவாரண நிதியாக, 2,000 கோடி ரூபாய் கேட்டுள்ளது, தமிழக அரசு.
மழையால்
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், பல ஆயிரம் பேர், தங்கள் வாழ்வாதாரத்தை
இழந்து, அடுத்த வேலை உணவுக்கு கூட வழியில்லாத நிலையில் உள்ளனர்.
அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டிய ஆளுங்கட்சியினரோ, பாதிக்கப்பட்ட
பகுதிகளுக்கு சென்று, புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக்
கொண்டிருக்கின்றனரே தவிர, உருப்படியாக ஏதும் செய்வதாக தெரியவில்லை.
புதுச்சேரி
அரசு, மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, தலா, 5,000 ரூபாய்
கொடுக்கும் நிலையில், தமிழக அரசோ, வெறும், 2,000 ரூபாய் கொடுக்க
முன்வந்துள்ளது. இப்பணத்தை வைத்து, என்ன செய்து விட முடியும்?
நிலைமை
இப்படி இருக்க, தன் கட்சியினருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய முதல்வர்
ஸ்டாலின், புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, தன் ஒரு மாத ஊதியமான,
80,000 ரூபாயை, வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். ஆக, பெரும் தொகை
தான் முதல்வரே...
'டிவி' நடிகர் பாலா, ஒவ்வொரு இயற்கை பேரிடர்
காலங்களிலும், தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பாதிக்கப்பட்ட
மக்களுக்கு வாரி வழங்குகிறார். ஆனால், ஆளும் கட்சியினருக்கும், ஆண்ட
கட்சியினருக்கும் கிள்ளிக் கொடுக்கக் கூட மனம் வரவில்லை.
ஒரு சாதாரண
நடிகர், தன் சக்திக்கும் மீறி மக்களுக்காக செலவு செய்கிறார் எனும் போது,
ஆட்சி அதிகாரத்தில் உள்ள முதல்வரும், அதிகாரத்தை வைத்து கல்லா கட்டும்
எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களும் எவ்வளவு நிதி கொடுத்திருக்க வேண்டும்...
பாதிக்கப்பட்ட
மக்களின் கஷ்டம் முதல்வருக்கு புரிந்திருந்தால், தன் கட்சி மாவட்ட
செயலர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,கள் என அனைவரையும், பாதிப்பு அடைந்த
கிராமங்களை தத்தெடுத்து, அனைத்து உதவிகளையும் செய்ய வலியுறுத்தி
இருந்திருக்கலாமே!
முதல்வரும், குறைந்த பட்சம், 10 கோடி ரூபாய்
கொடுத்து, தன் கட்சியினர் அனைவரையும் தாராள நிதி கொடுக்க வற்புறுத்தி, அதை
அவர்கள் கையாலேயே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்க செய்திருக்கலாமே!
ஏன் முதல்வர் இதை செய்யவில்லை?
நொண்டி குதிரைக்கு சறுக்கியது சாக்கு!
ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழக அரசின் கொள்கை முடிவு என்பது பூரண மதுவிலக்கு தான்; இருப்பினும், தமிழகத்தில் மட்டும் இது சாத்தியம் கிடையாது. மத்திய அரசு இந்தியா முழுதும் இதை அமல்படுத்த வேண்டும். அப்போது தான், பூரண மதுவிலக்கு என்பது சாத்தியம்' என்று கூறியுள்ளார், தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி.
கனமழையையும் பொருட்படுத்தாமல், டாஸ்மாக்கில், 'குடி' மகன்கள் குவியும்போது, மதுவிலக்கு எப்படி சாத்தியம் ஆகும்?
மத்திய அரசு கொண்டு வந்தாலும், அது தமிழகத்திற்கு மட்டும் என்றுமே சாத்தியம் ஆகாது.
காரணம், மதுக்கடைகளை திறந்து வைத்ததே, தங்கள் தானத் தலைவர், கலைஞர் கருணாநிதி தானே!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 'கழிப்பறை, டாஸ்மாக் கடைகளை தவிர, அனைத்து இடங்களுக்கும், கருணாநிதி பெயர் சூட்டப்பட்டு வருகிறது.
'உண்மையில், டாஸ்மாக் கடைக்கு கருணாநிதி பெயர் வைப்பது தான் பொருத்தமாக இருக்கும்!' என்று கூறியது போல், மதுவிலக்கு மாநிலமாக இருந்த தமிழகத்தை, மதுக் கடைகளை திறந்து வைத்ததன் வாயிலாக, இன்று, மது மிகு மாநிலமாக மாற்றிய பெருமைக்குரியவர்கள், தி.மு.க.,வினர் எனும்போது, கண்டிப்பாக அதற்கு தமிழகத்தில் சாத்தியமே இல்லை!
'மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று கூறியதால் தான், 2016 சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்' என்கிறார், அமைச்சர். அப்படி இருக்கையில், 2021 சட்டசபை தேர்தல் வாக்குறுதியில், 'மதுக்கடைகளை மூடுவோம்' என்று எப்படி வாக்குறுதி கொடுத்தீர்கள்...
குஜராத், பீஹார், மிசோரம், நாகலாந்து போன்ற மாநிலங்கள் எல்லாம் எப்படி மதுவிலக்கை கொண்டு வந்துள்ளன?
மதுவிலக்கை அமல்படுத்தும் மாநில அரசின் கைகளை, மத்திய அரசு கட்டிப் போட்டா வைத்திருக்கிறது?
'மதுவிலக்கை அமல்படுத்தினால், அண்டை மாநிலங்களில் இருந்து கள்ளச்சாராயம், கள்ளச் சந்தையில் விற்பனையாகும்' என்கிறீர்கள்... சில மாதங்களுக்கு முன், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்தனரே... அவர்கள் எல்லாம் அண்டை மாநிலத்தில் இருந்து வாங்கி குடித்து தான் இறந்தனரா அல்லது கள்ளக்குறிச்சி தமிழகத்திற்குள் தான் இல்லையா?
வீதிதோறும் டாஸ்மாக் கடைகள் இருக்கும்போது, கருப்பு, ஆரஞ்சு, வெள்ளை நிறங்களில் குளிர்பானங்களை போல, வாணியம்பாடி பகுதிகளில், பாக்கெட்டுகளில், கள்ளச்சாராயம் டோர் டெலிவரி செய்யப்படுவதாக பத்திரிகை களில் செய்தி வருகிறதே... அது எப்படி?
'நொண்டி குதிரைக்கு சறுக்கியது சாக்கு' என்பது போல், தி.மு.க., அரசுக்கு, மத்திய அரசு ஒரு சாக்கு!
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துமா?
வி.எச்.கே.ஹரிஹரன் திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழ்நாடு என்பதை ஆங்கிலத்தில், 'டமில்நாடு' என்று எழுதி வரும் நிலையில், அதை, சரியாக ஆங்கிலத்தில் எழுதக்கோரி, செல்வகுமார் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், 2021ல் வழக்கு தொடர்ந்து இருந்தார். அரசு பரிசீலிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை அணுகினார்.
மனுவை, விசாரித்த நீதிபதிகள், 'மனுதாரர் கோரிக்கையை பரிசீலிக்கும் படி, நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை, அரசு நிறைவேற்றாதது ஏன்?' என, கேள்வி எழுப்பினர். மேலும், கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.
உயர் நீதிமன்ற உத்தரவுக்கே இந்த நிலையா?
'டமில்நாடு' என்பதை தமிழ்நாடு என்று மாற்ற, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது மகிழ்ச்சிக்குரியதே!
அதேநேரம், சென்னை உயர் நீதிமன்றம், இன்னும் மெட்ராஸ் ஐகோர்ட் என்றே அழைக்கப்படுகிறதே... அதையும், தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று அழைக்க, மத்திய - மாநில அரசுகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
அதற்கு, லோக்சபாவில், மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படுகிறதோ... அல்லது உச்ச நீதிமன்றம் இசைவு தேவையா? ஜனாதிபதியின் ஒரு அறிக்கை போதாதா?
தமிழகத்திலிருந்து, 39 எம்.பி.,க்கள் லோக்சபாவிற்கு சென்றுள்ளனரே... அவர்கள் இதுபற்றி பேசி, தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயரை மாற்றட்டுமே! செய்வரா?