/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
அரசியல்வாதிகளின் சதுரங்க வேட்டை
/
அரசியல்வாதிகளின் சதுரங்க வேட்டை
PUBLISHED ON : நவ 24, 2025 12:20 AM

அ.அண்ணா
அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: நடிகர் விஜய காந்த், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை
துவங்கி முதன்முதலாக தேர்தலை சந்தித்தபோது, தி.மு.க.,வும்,
அ.தி.மு.க.,வும் மெஜாரிட்டியை இழந்தன. அதுபோல் இன்று நடிகர் விஜயின்
அரசியல் வருகையால், வரும் சட்டசபை தேர்தலில் நான்குமுனை போட்டி
உருவானால், கண்டிப்பாக தமிழகத்தில் தொங்கு சட்டசபை தான்!
கடந்த
58 ஆண்டுகால திராவிட ஆட்சி களால் அலுத்து சலித்த வாக்காளர்கள், மாற்றத்தை
நிஜமாகவே விரும்பினால் விஜய்க்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம். ஒருவேளை,
அரசியலுக்கு புதுமுகமான விஜய் மீது நம்பிக்கை இல்லாமல் ஓட்டுகள் சிதறினால்
திராவிட இயக்கங்களுக்கு திண்டாட்டம் தான்!
அப்படியொரு நிலைமை ஏற்பட்டால், அ.தி.மு.க., கூட்டணிக்கு கொண்டாட்டம்; தி.மு.க.,வுக்கோ திக்கற்ற தேக்கம் ஏற்படும்.
ஏனெனில், தேர்தல் முடிவுக்கு பின், நடிகர் விஜயுடனோ, சீமானுடனோ கூட்டணி
அமைக்கவோ அல்லது அவர்களது ஆதரவையாவது பெற்றோ அ.தி.மு.க., ஆட்சி அமைக்க
முடியும்.
அதேநேரம், தி.மு.க., இவர்கள் எவருடனும் கூட்டணி அமைக்க முடியாது!
இதையெல்லாம் கணக்கு போட்டு, அ.தி.மு.க., - தி.மு.க., என இரண்டு கட்சிகளும் ஓட்டுக்காக இலவசங்களை அள்ளி வீசப்போவது உறுதி.
அரசியல்வாதிகள் நடத்தப் போகும் இந்த சதுரங்க வேட்டையால், பல கட்சிகள் தங்கள் எதிர்காலத்தை இழக்கவும் வாய்ப்புள்ளது!
பார்ப்போம்... என்ன நடக்கிறது என்று!
டிஜிட்டல் முறைக்கு மாறுங்கள்!
கே.சுந்தர்பாபு, சாத்துார், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி, பழைய கையெழுத்து முறை போன்ற சில காரணங்களால் பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
அத்துடன், எஸ்.ஐ.ஆர்., திருத்தப் பணியில், தேர்தல் அலுவலர்கள் குறைவாக இருப்பதால், காலை முதல் மாலை வரை நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதில் கையெழுத்து பிழைகள், தவறான ஓட்டு பதிவுகள் போன்ற காரணங்களால், முதியோர் பெரும் அவதி அடைகின்றனர்.
இதை தவிர்க்க, கைரேகை, கண் பதிவு வாயிலாக சரிபார்க்கும் பணியை மேற்கொண்டால், போலி வாக்காளர்களை எளிதாக நீக்கலாம். மேலும், மொபைல் ஓ.டி.பி., எண்ணை வைத்தும், வாக்காளர்களை உறுதிப்படுத்தலாம்.
இந்த அளவுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், தமிழகத்தில், 100 சதவீதம் போலி வாக்காளர்கள் நீக்கப்படுவரா என்று கேட்டால், 90 சதவீதமாவது தடுக்கப்படும்.
எனவே, எஸ்.ஐ.ஆர்., பணிகளை முழுதும் டிஜிட்டல் முறைக்கு மாற்றி, கைரேகை, கண் பதிவு, மொபைல் ஓ.டி.பி., முறையை தேர்தல் ஆணையம் கட்டாயப் படுத்த வேண்டும்.
மேலும், ஆன்லைனில் பதிவு செய்ய, மொபைல் ஆப் தொடங்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும், மின்னணு வாக்காளர் அடையாள அட்டைகளுக்கான மையத்தையும் அமைக்க வேண்டும்.
நடைமுறைப்படுத்துமா தேர்தல் ஆணையம்!
வரவு எட்டணா செலவு பத்தணா!
த.யாபேத்தாசன், பேய்க் குளம், துாத்துக்குடி மாவட் டத்தில் இருந்து எழுதுகிறார்: உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவின் தேசிய கடன், நடப்பாண்டில், 38 டிரில்லியன் டாலர். இந்திய மதிப்பில் ௩,௩௮௨ லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு அமெரிக்கரின் தலையிலும், ஒரு கோடி ரூபாய் கடன் உள்ளதாக, அந்நாட்டு நிதியமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கை சுட்டி காட்டுகி றது.
இந்தாண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின், 2 டிரில்லியன் டாலர், அதாவது, ௧௭௬ லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் உயர்ந்துள்ளது.
பொதுவாக, பட்ஜெட்டில் வரவை விட செலவு அதிகமாகி பற்றாக்குறை ஏற்பட்டால், கடன் வாயிலாகத் தான் பற்றாக்குறை சரிக்கட்டப்படும். இதுதான், பொதுவான பொருளாதார விதி!
அப்படியென்றால், வரவை விட அதிகமாக அமெரிக்கா செலவு செய்கிறது என்று தானே அர்த்தம்!
இந்த கடன் சுமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகத் தான், டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்றுதான் பிற நாடுகள் மீது தொடுக்கப்படும் வரி பயங்கரவாதம்!
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள், அமெரிக்க டாலர் மீது நடத்தும் மறைமுக தாக்குதலுக்கான எச்சரிக்கை என்றே இதை சொல்லலாம்!
இதனாலேயே, பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள ஏதாவது ஒரு நாடு, அமெரிக்காவுடன் விளையாட நினைத்தால், அந்நாட்டில் இருந்து அமெரிக்க வரும் பொருட்கள் மீதும் கடும் வரி விதிக்கப்படுகிறது.
இதுகுறித்து, 'ஜோ பைடன் அல்லது கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக தேர்வாகி இருந்தால், இந்நேரத்தில் உலகின் பணமாக டாலர் இருந்திருக்காது; நான் அதிபரானதன் வாயிலாக அமெரிக்க டாலரை உலகின் பணமாக தொடர்ந்து தக்கவைத்துள்ளேன்' என்று கூறியுள்ளார், டிரம்ப்.
இப்படி, அமெரிக்கா போன்ற சக்தி வாய்ந்த நாடுகளே, தன் பணத்தின் மதிப்பை தக்க வைக்க, கடுமையாக போராட வேண்டியுள்ளது.
காரணம், கடன் சுமை அதிகரித்தால், பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு, பண மதிப்பும் வீழ்ச்சியடையும் என்பதால்!
அதேவேளை, புள்ளி விவரங்களின் படி நம் நாட்டின் மொத்த கடன், 1௮௧.௭௪ லட்சம் கோடி ரூபாய்!
நம் நாடும் வரவுக்கு அதிகமாக செலவு செய்து கொண்டிருப்பதால் தான், நம் ஒவ்வொருவர் மீதான கடன், ௧.8௩ லட்சம் ரூபாயாக உள்ளது.
இதில், தமிழகத்தின் கடன் தொகையோ, நான்கரை ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்து விட்டது. இது குறித்து சட்ட சபையில் விவாதம் நடந்தபோது, ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகின்றனரே தவிர, இலவச திட்டங்களால் அதிகரிக்கும் செலவுகள் குறித்து கவலைப்படுவதாக தெரியவில்லை.
அரசின் கஜானா என்பது ஆளுங்கட்சிகளின் சொத்து அல்ல; அது மக்கள் சொத்து. அதன் காவலாளிகள்தான் ஆட்சியாளர்கள் என்பதை மறந்து, அரசின் நிதியை கட்சி நிதி போல் பாவித்து, பணத்தை விரயம் செய்து, கடன் சுமையை அதிகரிக்கின்றனர்.
எனவே, நிதி நெருக்கடியையும், கடன் சுமையையும் உருவாக்கும் உற்பத்தி சாராத அனைத்து திட்டங் களையும் முடிவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் முயல வேண்டும்.
அனைத்தும் அனைவருக்கும் இலவசம் என்பதெல்லாம் கேட்பதற்கு தான் இனிமையாக இருக்கும்; நடைமுறையில் சாத்தியப்படுத்த முனைந்தால், நாடு மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை தான் சந்திக்க வேண்டும்.
எனவே, வீடு மட்டுமல்ல, ஒரு நாடும் தன் வரவுக்கு மீறி செலவு செய்தால், பொருளாதார வீழ்ச்சியில் சிக்கி, 'வரவு எட்டணா, செலவு பத்தணா, அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தனா துந்தனான்'னு பாட்டுப் பாட வேண்டியது தான்!

