PUBLISHED ON : ஏப் 29, 2026 12:00 AM

ப.ராஜேந்திரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சென்னையில் வாழும் வெளியூர் மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டளிக்க வசதியாக, 10,000க்கும் மேற்பட்ட பஸ்கள் விடப்படும்' என்று, அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், போதிய பஸ்கள் இயக்கப்படாததால், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் சென்ற மக்கள், பெரும் அவதிப்பட்டனர்.
'ஒரே நேரத்தில், போக்குவரத்து ஊழியர்கள் அதிகம் பேர் விடுப்பில் சென்றுள்ளதால், போதிய பஸ்கள் இயக்க முடியாமல் போனது' என்ற காரணத்தை ஏற்க முடியாது.
வழக்கமாக பண்டிகை காலங்களில் பொதுமக்கள் இது போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர் என்றால், தேர்தல் சமயத்தில் இது போன்று நடந்திருப்பது, தி.மு.க., ஆட்சி மீது அக்கறை கொண்டவர்களைக் கூட வெறுப்படையச் செய்து விட்டது.
போக்குவரத்து அதிகாரிகள், ஜி.எஸ்.டி., சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், பல பஸ்கள் கிளாம்பாக்கம் வர முடியவில்லை என்று கூறியது, ஏற்கக்கூடியதாக இல்லை.
இப்படி மக்களை ஓட்டு போட விடாமல் தெரிந்தோ, தெரியாமலோ தடுப்பது கொடுங்குற்றச் செயல். மக்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் செயல்.
இதற்கு தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். உச்சநீதிமன்றமும் இத்தகைய தவறுகள் நடக்கும் பட்சத்தில், தண்டிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.
lll
வங்கிகளே... ஜாக்கிரதை! ரேணுகா நாராயணன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ
- மெயில்' கடிதம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிக்
கிளைகளின் சைபர் பாதுகாப்பு குறித்து விடுத்திருக்கும் எச்சரிக்கை, வெறும்
தொழில்நுட்பச் செய்தி மட்டுமல்ல; அது ஒவ்வொரு சாமானியனின் சேமிப்புக்கும்
விடுக்கப்பட்ட அபாயச் சங்கு.
'ஆந்த்ரோபிக்' நிறுவனம்
உருவாக்கியுள்ள, 'கிளாட் மித்தோஸ்' எனும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு,
மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத பாதுகாப்பு குறைபாடுகளை மிக எளிதாகக்
கண்டறியும் திறன் கொண்டது என்பது பேரதிர்ச்சியாக உள்ளது.
கிட்டத்தட்ட, 27 ஆண்டுகளாக மறைந்திருந்த பாதுகாப்பு குறைபாடுகளைக்கூட, இந்த
ஏ.ஐ., கண்டறிந்து விடுகிறது என்றால், நம்முடைய டிஜிட்டல் வங்கி முறைகள்
எவ்வளவு பலவீனமாக இருக்கின்றன என்பது புரிகிறது.
திருடர்கள்
இப்போதெல்லாம் கடப்பாரையோடும், துப்பாக்கியோடும் வருவதில்லை; மாறாக,
கண்ணுக்குத்தெரியாத, 'அல்காரிதம்' மற்றும் ஏ.ஐ., தொழில்நுட்பத்தோடு
வருகின்றனர்.
அவர்கள் ஒருமுறை ஒரு வங்கியின் தகவல் தொழில்நுட்ப
அமைப்பிற்குள் நுழைந்துவிட்டால், வாடிக்கையாளர்களின் தரவுகள் மற்றும் பணம்
எங்கே இருக்கிறது என்பதை, ஒரு நொடியில் கண்டறிந்து விடுவர்.
வங்கி
தலைவர்களுடன், நிதியமைச்சர் நடத்திய ஆய்வுக் கூட்டம், காலத்தின் கட்டாயம்.
வங்கிகள் தங்கள் ஐ.டி., கட்டமைப்பை, வெறும் கணக்கு வழக்குகளுக்காக மட்டும்
பயன்படுத்தாமல், அறிவார்ந்த கேடயமாக மாற்ற வேண்டியது அவசியம்.
'ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள்' சொல்லும் அரசியல்வாதிகளை விட, ஒரு
சிறிய தொழில்நுட்ப பிழையை பயன்படுத்தி, ஒட்டுமொத்தப் பணத்தையும் சுருட்டும்
இந்த ஏ.ஐ., அச் சுறுத்தல் ஆபத்தானது.
வாடிக்கையாளர்களின் தரவுகளைப் பாதுகாக்க வங்கிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இந்திய வங்கிகள் சங்கம், ஒரு வலுவான சைபர் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க
வேண்டும். அதே சமயம், வாடிக்கையாளர்களும் தங்கள் ஓ.டி.பி., மற்றும் ரகசிய
குறியீடுகளைப் பாதுகாப்பதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
தொழில்நுட்பம் வளர வளர, அதைத் தவறாகப் பயன்படுத்து வோரின் வேகமும்
கூடுகிறது. அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க நம் வங்கித் துறையும் நவீனப்பட
வேண்டும்.
நிதி நிறுவனங்கள் இடையே அதிகப்படியான விழிப்புணர்வும்,
தயார்நிலையும் இல்லையென்றால், எதிர்காலத்தில், 'டிஜிட்டல் கொள்ளை' என்பது
தவிர்க்க முடியாததாகிவிடும்.
'வேலியே பயிரை மேய்ந்தால்' என்பது
பழமொழி; ஆனால் இங்கு வேலிக்கு தெரியாமல் பயிரைத் தின்ன நவீன நுண்ணறிவு
இயந்திரங்கள் வந்துவிட்டன. ஜாக்கிர தை!
lll
மன்னிக்கவே
கூடாது; தண்டித்தாக வேண்டும்! எஸ்.ராம், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: கிட்டத்தட்ட, 83 வயதான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன
கார்கே, சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, பிரதமர்
மோடியை, 'பயங்கரவாதி' என்று குறிப்பிட்டார்.
இது குறித்து
பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பவே, 'நான் மோடியை தனிப்பட்ட முறையில்
விமர்சிக்கவில்லை. எதிர்க்கட்சியினர் விஷயத்தில் சர்வாதிகாரமாக
செயல்படுவதால், அப்படி குறிப்பிட்டேன்' என்று, முழுப் பூசணிக்காயை சோற்றில்
மறைப்பது போல சமாளிக்க முயன்று, தோல்வியை ஆலிங்கனம் செய்து கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சியினர் விஷயத்தில், பிரதமர் மோடி சர்வாதிகாரியாக நடந்து
கொண்டிருந்தால், காங்கிரஸ் எம்.பி., ராகுல், பார்லி.,யில், மோடிக்கு
முத்தம் கொடுத்து கட்டித் தழுவ முயன்ற போதே, கன்னம் பழுக்கப் பழுக்க ஓங்கி
நான்கு சாத்து சாத்தி இருப்பார்.
அப்படி சாத்தாமல் விட்டவரா, எதிர்க்கட்சிகள் விஷயத்தில் சர்வாதிகாரியாக நடந்து கொண்டிருக்கிறார்?
இடுப்பில் நான்கு காசு இருந்தால், நாவசைப்பில் நுாறு வார்த்தை வரும் என்று, ஒரு மலையாள சொலவடை உண்டு.
ஒன்றல்ல, பத்தல்ல... நுாறு தலைமுறைகளுக்கு தேவையான சொத்துகளை இந்த கார்கே
குவித்து வைத்துள்ளதால் தான், நரம்பில்லாத நாக்கிலிருந்து இப்படிப்பட்ட
வார்த்தைகள், விஷம் தோய்ந்து வெளியே வந்து விழுந்து கொண்டிருக்கின்றன.
கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒரு பக்கம் பஞ்சாயத்து நடந்து
கொண்டிருக்கிறது. 83 வயதாகி விட்டதால், செய்த தவறு, தண்டனைக்கு
அப்பாற்பட்டதாகி விடாது; தவறு தவறு தான்.
'பயங்கரவாதி' என்று
ஒருவரை குறிப்பிட்டுச் சொன்னால், அதற்கான ஆதாரங்களை நிரூபித்தே தீர
வேண்டும்; ஆதாரம் இல்லையெனில், பெயருக்கு களங்கம் விளைவித்தவரை, சிறையில்
அடைக்க வேண்டும்; கடும் அபராதம் விதிக்க வேண்டும்.
lll
