PUBLISHED ON : ஆக 21, 2026 01:25 AM

சி.ஆ.ஸ்ரீனிவாச சர்மா, ைஹதராபாதில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 2025ல், பீஹார் மாநிலம் தர்பங்காவில் நடைபெற்ற காங்., பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடியின் தாய் குறித்து, உ.பி., காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் அவதுாறாக பேச, அதை கண்டிக்காமல் கேட்டு ரசித்தவர், காங்., - எம்.பி., ராகுல். அப்போதே மக்களிடம் தனக்கான மரியாதையை இழந்து விட்டார்.
தற்போது அதற்கும் ஒருபடி மேலே சென்று, இத்தாலிய பெண் பிரதமர் மெலோனி யுடன், பிரதமர் மோடியை இணைத்து, தன் கட்சி நிர்வாகி ஒருவர் அநாகரிகமாக பேசியதை ரசித்து சிரித்து, 'அதுபோன்று கட்டியணைக்கும் நிலை தனக்கு இன்னும் வரவில்லை' என்று அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார், ராகுல்.
இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம், அவரது வளர்ப்பின் லட்சணம் எப்படிப்பட்டது என்பது!
ராகுலின் இத்தகைய அநாகரிக பேச்சை கேட்டபோது, சிலப்பதிகாரத்தில் படித்த ஒரு கதை தான் நினைவுக்கு வந்தது...
கோவலனும், கண்ணகியும், சமண துறவியான கவுந்தியடிகளுடன் ஒரு சோலையில் நடந்து சென்று கொண்டிருந்தனராம். எதிரே ஒரு விலைமகள், ஓர் ஆடவனுடன் வந்து கொண்டிருந்தாள்.
அவர்கள், கோவலன் - கண்ணகியை சுட்டிக்காட்டி, 'காமனும், ரதியும் போல் இருக்கும் இவர்கள் யார்?' என்று கவுந்தியடிகளிடம் கேட்டனர்.
'இவர்கள் என் பிள்ளைகள்; ரொம்ப துாரத்தில் இருந்து வருகின்றனர்...' என்று கூறியுள்ளார் கவுந்தியடிகள். உடனே, 'ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவர் கணவன் - மனைவியாக வாழ்க்கை நடத்துவது தான், நீர் கற்ற நுால்களில் கூறப்பட்டுள்ளதோ?' என்று கேட்டு, சிரித்தனர்.
இதனால் கோபமுற்ற கவுந்தியடிகள், 'மனிதர்களின் தரம் அறியாமல், வரம்பு மீறி பேசிய நீங்கள் நரிகளாக கடவது...' என்று சாபமிடவே, இருவரும் நரிகளாக மாறினர்.
அவர்கள் மீது இரக்கம் கொண்ட கண்ணகி, 'நன்னெறி தவறிய இவர்கள், அறியாமையால், அறிவற்ற சொற்களை பேசி விட்டனர். அவர்களை மன்னித்து சாபவிமோசனம் தர வேண்டும்' என்றாள்.
கண்ணகியின் வேண்டுகோளுக்கு இணங்க, '12 மாதங்கள் நரியாக திரிந்து, அதன்பின் மானிட உருவம் அடைவர்' என்று சாபவிமோசனம் கொடுத்தாராம் கவுந்தியடிகள்.
இக்கதையில் வரும் அறிவற்ற மூன்றாம் தர மனிதர்களின் பேச்சைப் போன்று தான், காங்., -- எம்.பி., ராகுலின் பேச்சும், நடத்தையும் உள்ளது. ஒரு நாட்டின் பிரதமராக வேண்டும் என்று கனவு காணும் ராகுல், இதுபோன்று தொடர்ந்து நடந்து கொண்டால், வருங்காலத்தில், எம்.பி.,யாக கூட முடியாது!
அமெரிக்கா மீதும் ஆய்வு நடத்தலாம்!
ரெ.ஆத்மநாதன், புளோரிடா மாகாணம், அமெரிக்காவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
அமெரிக்காவின், 'பியூ ரிசர்ச்' நிறுவனம், இந்தியாவின் மீதான உலக நாடுகளின் பார்வை குறித்து, 36 நாடுகளிடம், 2026 பிப்ரவரி முதல் மே வரை நடத்திய ஆய்வில், 45 சதவீதத்தினர் இந்தியாவிற்கு ஆதரவாகவும், 41 சதவீதத்தினர் எதிர்மறையாகவும் கருத்து தெரிவித்துள்ளதாக ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கை, பிரிட்டன், கென்யா, ஜெர்மனி, இத்தாலி நாடுகளைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டிற்கு ஆதரவாகவும், பாகிஸ்தான், வங்கதேசம் நாட்டினர் எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் அளித்த காரணத்தாலேயே, அங்குள்ள மக்கள் எதிர்மறையாக ஓட்டளித்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேபோன்று, அமெரிக்காவில், 2023ல், 51 சதவீதத்தினர் ஆதரவு கருத்தை கூறி இருந்த நிலையில், தற்போது அது, 45 சதவீதமாக குறைந்துள்ளது.
எல்லை பாதுகாப்பு, மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமை, அண்டை நாடுகளுடன் போர் தொடுத்து ஆக்கிரமிப்பு செய்யாமை, உலக நாடுகளுடன் சமத்துவம், உலக அமைதிக்கு வழி ஏற்படுத்துதல் என்ற பஞ்சசீலக் கொள்கையின்படி செயல்படும் நம் நாட்டை, பெரும்பாலான உலக நாடுகள் ஆதரிக்கவே வேண்டும்.
அந்த ஆதரவு குறைகிறது என்றால், அதற்கான காரணத்தை ஆராய்ந்து, நியாயமெனப்பட்டால் அதை சரிசெய்ய வேண்டும்.
அதேநேரம், இந்தியா குறித்து மற்ற நாடுகள் என்ன நினைக்கிறது என்று இந்நிறுவனம் ஆய்வு எடுத்துள்ளது போல், அமெரிக்கா குறித்து உலக நாடுகள் எப்படி மதிப்பிடுகின்றன என்று ஆய்வு செய்தால், அந்நாட்டின் அதிபர் டிரம்ப் தன்னை திருத்திக் கொள்ள உதவும்.
அதன் வாயிலாக நிமிடத்திற்கு ஒரு பேச்சு பேசி, நிலையான முடிவு எடுக்காமல், உலக நாடுகளின் எதிர்ப்பை நாளுக்கு நாள் சம்பாதித்து வருவதை அமெரிக்கர்கள் அறிந்து கொண்டு, அடுத்த அதிபர் தேர்தலிலாவது உறுதியான முடிவுகளை எடுக்கும் ஓர் ஆளுமை மிக்க தலைவரை தேர்ந்தெடுப்பர்!
பிளாஸ்டிக் ஒழிப்பில் அரசு கவனம் செலுத்துமா?
எம்.ஆர்.ஜெயச்சந்திரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தமிழகத்தில் லஞ்சம் - ஊழலை ஒழிக்க முதல்வர் விஜய் பெரும் முயற்சி எடுத்து வருகிறார். அதுபோல், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏனெனில், இன்று உணவு விடுதிகளில் கூட, உணவுகளையும், குழம்புகளையும் பிளாஸ்டிக் பைகளில் அடைத்துக் கொடுக்கின்றனர். இதனால், ஒவ்வொரு குப்பை மேட்டிலும் பிளாஸ்டிக் பை கழிவுகள் அதிகம் குவிகின்றன.
பசிக்கு உணவு கிடைக்காமல் மாடுகளும், நாய்களும் அதை சாப்பிடும் அவலம் நேர்கிறது. மேலும், இந்த பிளாஸ்டிக் குப்பைகளால் மண்ணின் வளம் கெடுகிறது.
எனவே, பிளாஸ்டிக் பை ஒழிப்பில் அரசு கவனம் செலுத்தி, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!
நுணலும் தன் வாயால் கெடும்! வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல் தலைவர்கள் பொது நிகழ்ச்சியிலும், கட்சிப் பொதுக்கூட்டங்களிலும் பேசும் வார்த்தைகள் அநாகரிகமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் உள்ளன.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார், தமிழக முதல்வரை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். பா.ஜ., தமிழகதலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் குறித்து அவதுாறாக பேசியுள்ளார்.
அதேபோன்று, காங்கிரஸ் கட்சி எம்.பி., ராகுல், பிரதமர் குறித்து அநாகரிகமாக பேசியுள்ளார்.
தவளை கத்தி கத்தியே பாம்புக்கு இரையாவது போல், மக்கள் வெறுக்கும் விதமான வார்த்தைகளைப் பேசியே, இவர்கள் தங்கள் கட்சியை காவு கொடுத்து விடுவர் போலும்!
நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல், அநாகரிக பேச்சு அரசியல்வாதிகள், தங்கள் வாயாலேயே கெடப் போவது நிச்சயம்!
