PUBLISHED ON : பிப் 15, 2024 12:00 AM
சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை, நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், தமிழக கவர்னர் ரவி, சுதந்திரப் போரில் நேதாஜியின் பங்கு பற்றி குறிப்பிட்ட விஷயம் பேசு பொருளாகி விட்டது. அவர் குறிப்பிட வந்த விஷயத்தின் சுருக்கம்... 'காந்திஜி போலவே சுதந்திரப் போரில் நேதாஜிக்கும் மிகப் பெரிய பங்கு உண்டு' என்பது தான்.
அன்றைய ஐ.சி.எஸ்., படிப்பில் முதல் மாணவராக தேர்வாகியும், சுகபோக வாழ்க்கையை துறந்து, நாட்டின் சுதந்திரத்திற்காக போராட்ட வாழ்க்கையை மேற்கொண்டவர் நேதாஜி.
'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இரண்டாம் உலகப் போர் நடந்த சமயம் ஹிட்லர், முசோலினி மற்றும் ஜப்பானின் டோஜோவோடு இணைந்து, இந்திய தேசிய ராணுவமான, ஐ.என்.ஏ.,வை கட்டமைத்து, பிரிட்டிஷாரை ராணுவ ரீதியாக எதிர் கொண்டவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
காந்திஜி, பிர்லா மாளிகையில் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த போது, பர்மா காடுகளில் மழைக்குள்ளும், பனிக்குள்ளும் கஷ்டப்பட்டு, ஒரு நாளைக்கு ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு, சுதேசி ராணுவத்தினரின் தோளோடு தோள் நின்று, தாய் நாட்டிற்காக, நேச நாடுகளின் படையை எதிர்த்து போராடி கொண்டிருந்தார் நேதாஜி.
அந்தமான் தீவை பிரிட்டிஷ் துருப்புகளிடமிருந்து மீட்டு, வெளி உலகிற்கு சுதந்திர இந்தியாவை நிறுவி காண்பித்தார். அந்த சுதந்திர இந்தியாவை, 10க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரிக்க காரணமாக இருந்தவர்.
காந்திஜியின் வரவுக்கு பின்தான், இந்திய சுதந்திர போராட்டம், மக்கள் இயக்கமாக மலர்ந்தது என்பதில், நேதாஜி உட்பட யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது.
ஆனால், 'பிரிட்டிஷாரை கவலை கொள்ள செய்தது, காந்திஜியின் ராட்டை அல்ல, நேதாஜியின் ராணுவம் தான்' என்பதை அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் அட்லியே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
எங்களது ஆதங்கம், சுக வாழ்வை துறந்து, சுதந்திரத்திற்காக, சுயநலமில்லாமல் பாடுபட்ட ஒரு மாபெரும் தலைவனின் உழைப்பு சரியான முறையில், சொந்த நாட்டிலேயே கவுரவிக்கப்படவில்லையே என்பது தான்.
எங்களது ஏக்கத்தையும், ஆதங்கத்தையும் சரியான முறையில் பிரதிபலித்த தமிழக கவர்னருக்கு ஒரு ராயல் சல்யூட்!
ஜனநாயகம் செழித்தோங்க என்ன வழி?
ந.உறந்தை
மைந்தன், சென்னையில் இருந்து எழுதுகிறார்: இன்று ஆளுங்கட்சி தலைவர்களும்,
எதிர்க்கட்சி தலைவர்களும், ஒருவர் மீது ஒருவர் வசைமாரி பொழிவது
வாடிக்கையாகி விட்டது. ஆனால், அன்று மாநில முதல்வருக்கும், எதிர்க்கட்சி
தலைவருக்குமான உறவு எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை சற்று பின்னோக்கி
பார்ப்போம்...
அன்று, கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவின் வீட்டருகே உள்ள
பள்ளி ஒன்றில் நடந்த விழாவிற்கு, காங்., கட்சியை சேர்ந்த முதல்வர்
காமராஜரும், அன்றைய செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் திரவியமும் போகும்
வழியில், ஜீவாவையும் அழைத்துச் செல்ல எண்ணி, அவரது குடிசை வீட்டிற்கு
காரில் சென்று இறங்கினர்.
'ஜீவா அருகில் உள்ள பள்ளி ஆண்டு
விழாவிற்கு வருகிறீர்களா?' என்றபடி உள்ளே நுழைந்தார் காமராஜர். 'நான் வர
வேண்டுமெனில் கால் மணி நேரம் நீங்கள் காத்திருக்க வேண்டும்' என்று
உள்ளிருந்து குரல் கேட்டது.
உள்ளே எட்டிப் பார்த்தபோது, ஈர வேட்டியை
உலர்த்தியபடி நின்று கொண்டிருந்தார் ஜீவா. மாற்று வேட்டி கூட இல்லாமல்,
துவைத்த கதர் ஆடை காயும் வரை, இடுப்பில் துண்டு கட்டிய நிலையில் நின்ற
ஜீவாவை பார்த்து, காமராஜர் திகைத்து போனார்.
தன் இறுதிக்காலம் வரை மக்களுடனே வாழ்ந்த ஜீவா, வறுமையிலேயே காலத்தை கழித்தார்; அவரது இறுதி காலமும் வறுமையிலயே கழிந்தது.
ஜீவா
குடிசை வீட்டில் வசிப்பது கண்டு அதிர்ந்து போன காமராஜர், உடனடியாக
அவருக்கு விடுதலை போராட்ட வீரர் ஒதுக்கீட்டில், அரசு வீட்டை ஒதுக்கும்படி
கூறினார். அதை ஏற்க மறுத்த ஜீவா, 'என் வாழ்நாள் முழுதும் இந்த பாட்டாளி
மக்களுக்காகவேஉழைத்தேன்.
'என் இறுதி காலமும், அத்தகைய மனநிலையிலேயே
கழிய வேண்டும்.அவர்களிடமிருந்து என்னை தனித்து காட்டும் எந்த விஷயமும்
எனக்கு தேவையில்லை' என, திட்டவட்டமாக மறுத்து விட்டார்.
அன்று ஆளுங்கட்சி தலைவரும், எதிர்க்கட்சி தலைவரும் எவ்வளவு இணக்கமாக இருந்தனர் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
'மக்களாட்சி
என்பது, அரசை ஆள்வோரும், எதிர்ப்போரும் இணைந்து இழுத்து செல்லும் வண்டியை
போன்றது' என்பது அயர்லாந்து நாட்டு பழமொழி. இதை நம்மூர் அரசியல்வாதிகள்
பின்பற்றி நடந்தால், ஜனநாயகம் செழித்தோங்கும்.
இறைவன் மனிதர்களை பிரிப்பது இல்லை!
ஏ.எம்.ஏ.ராஜேந்திரன்,
காளையார்கோவில், சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: மதுரை உயர்
நீதிமன்றத்தில், 'ஹிந்து மதத்தை சாராதவர்கள், கோவிலுக்குள் நுழைய அனுமதி
இல்லை' என்று, 1948ல் இருந்த சட்டத்தை சுட்டி காட்டி, தீர்ப்பு
அளித்துள்ளார் நீதிபதி.
அன்றைய கால சூழ்நிலையில் அந்த சட்டம் சரியாக
இருக்கலாம். நம் நாடு மதசார்ப்பற்றது. 'எம்மதமும் சம்மதம்' என்ற உயரிய
கோட்பாடை ஏற்றுள்ளது. மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலன் கருதி,
ஆயிரக்கணக்கான புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளன. இது போல், 1948ல் கொண்டு
வரப்பட்ட சட்டத்தை மாற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் எல்லா மதத்தை சார்ந்தவர்களும் கூடி தான் வாழ்கின்றனர். சில சமயம் சில கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும்.
வெளிநாட்டைச்
சேர்ந்தோர், நம் கலாசாரத்தை, ஆன்மிக தன்மையை, தெய்வீக பக்தியை அறிய,
கோவிலுக்கு உள்ளே செல்லும் போது, நமக்கு அந்த உரிமை இல்லையா?
சட்டம்,
மக்களுக்கு தான்; ஆலயத்துக்கு அல்ல. ஹிந்து மதம் அல்லா தோரிடம் கூட, நட்பு
அடிப்படையில் தான் பழகுகிறோம். அவர்களின் எல்லா நிகழ்ச்சிகளிலும், மதம்
என்று பாராமல், மனிதநேயத்தோடு தான் இருக்கிறோம்.
சமீபத்தில்
சிவகங்கை மாவட்டம் சாலைகிராமம் என்ற ஊரில் புதிதாக திறக்கப்பட்ட
பள்ளிவாசலுக்கு ஹிந்து மதத்தை சார்ந்தோர், சீர்வரிசைளுடன் பங்கேற்றனர்;
கிறிஸ்துவ நண்பர்களும் பங்கேற்றனர்.
அதே போல், எங்கள் பகுதியில் உள்ள முக்கிய ஹிந்து கோவிலுக்கு முஸ்லிம் பெண்கள் பர்தா வுடன் வந்து, ஆலய வழிபாட்டில், பங்கேற்கின்றனர்.
கோடிக்கணக்கான
அய்யப்பப் பக்தர்கள் கோவிலுக்கு செல்லும்போது, எரிமேரியில் உள்ள பாபர்
மசூதிக்கு சென்று விட்டு தான், அய்யப்பனைதரிசிக்க செல்கிறோம். எனவே, இறைவன்
மனிதர்களை பிரிப்பது இல்லை.

