PUBLISHED ON : செப் 20, 2026 01:04 AM

எம்.முருகையா, புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'ரோமாபுரியில் இருந்தால், ரோமானியாக இரு' என்பது பழமொழி. ஒரு நாட்டிற்கு சென்றால், அந்நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்பதே இதன் பொருள்!
ஆனால், சொந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்கத் தெரியாதவர்களாக இருக்கின்றனர், காங்கிரசார்.
அரசு விழாக்களில் வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாட வேண்டும் என்று, பார்லிமென்ட்டில் சட்டம் இயற்றி, அது நடைமுறையிலும் உள்ள நிலையில், 'நாங்கள் வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட மாட்டோம்; முதல் இரண்டு பத்திகளை தான் பாடுவோம்!' என்று கூறுவதுடன், தங்கள் கூட்டணி கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களிலும் அதை நடைமுறைப்படுத்த வலியுறுத்துகின்றனர்.
சமீபத்தில், ஜம்மு - காஷ்மீரின் கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில், சர்வதேச திரைப்பட விழா நடந்தது.
இவ்விழாவில் வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்பட்டதற்கு காங்., பொதுச்செயலர் வேணுகோபாலும், ஜம்மு - காஷ்மீர் காங்., தலைவர் தாரிக் ஹமீத் கர்ராவும் எதிர்ப்பு தெரிவித்து, '1937-ல் காங்கிரஸ் செயற்குழு தீர்மானத்தின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட வந்தே மாதரத்தின் சுருக்கப்பட்ட முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாட வேண்டும்' என்று வற்புறுத்தியுள்ளனர்.
அதற்கு, 'வந்தே மாதரம் பாடலுக்கு சட்டபூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது; அப்பாடலை அவமதிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். பாடலின் அனைத்து பத்திகளையும் பாட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது, ஜம்மு- - காஷ்மீருக்கு மட்டும் அல்ல; ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொருந்தும். இதை மீறினால், தண்டனைக்கு ஆளாவது உறுதி. அப்படி இருக்கையில், காங்கிரஸ் அவமதித்ததை போலவே காஷ்மீரிகள் அவமதித்து, சிறை செல்ல வேண்டும் என, காங்கிரஸ் கட்சி விரும்புகிறதா?' என வினவியுள்ளார், ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா.
ஓர் இஸ்லாமியரான ஒமர் அப்துல்லாவுக்கும், காஷ்மீர் இஸ்லாமியர்களுக்கும் இருக்கும் தேசப்பற்றில், ஒரு விழுக்காடு கூட காங்கிரசாருக்கு இல்லை.
சட்டத்தை மதிக்க தெரியாத இவர்கள் தான், அம்பேத்கரின் அரசியல் அமைப்பை காப்பாற்ற பிறந்தவர்கள் போன்று, கடந்த ஆண்டு சட்டப் புத்தகத்தை துாக்கியபடி, பார்லிமென்டில் போஸ் கொடுத்தவர்கள்!
ஒரு விருந்து என்றால் இலையில் சோற்றுடன், இனிப்பு, பச்சடி, கூட்டு, கறி, சாம்பார், ரசம், அப்பளம், வடை, பாயசம் மற்றும் மோர் என முழுமையாக பரிமாறினால் தான் அதற்கு பெயர் விருந்து. இலையில் வெறும் சோற்றை மட்டும் போட்டு, 'இதை சாப்பிட்டு விட்டு எழுந்திருங்கள்' என்று சொல்வது பெயர் விருந்து அல்ல.
அதேபோன்று தான், 'வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை மாத்திரம் தான் பாடுவோம்; மற்ற பத்திகளை பாட மாட்டோம்' என்று காங்கிரசார் முரண்டு பிடிப்பதும்!
அவ்வகையில், இந்நாட்டின் சட்டத்தை மதித்து நடக்கும் ஒமர் அப்துல்லாவுக்கு சபாஷ் போடலாம்!
தொலைநோக்கு பார்வை வேண்டும்!
வி.ஆர்.நாராயணன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
பரந்துார் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்ததன் வாயிலாக, தொழில் வளர்ச்சியில், தமிழகம் 10 ஆண்டுகள் பின்தங்கிவிடும் என்று, பல்வேறு அரசியல் கட்சிகள் கூறுகின்றன.
பெரிய விமான நிலையம் இருந்தால் மட்டுமே தொழில் வளர்ச்சி அடையும் என்று கூறுவது தவறு. அமெரிக்காவில் பல மாநிலங்களிலும், நகரங்களிலும் உலகின் பல்வேறு நாடுகளுக்கு நேரடி இணைப்பு கொண்ட பெரிய விமான நிலையங்கள் இல்லை.
தொழிலதிபர்கள் தங்கள் நாட்டிற்குள்ளேயே இணைப்பு விமானங்களில் பயணம் செய்து, உலக நாடுகளுடன் இணைப்பு உள்ள நகரத்திற்கு செல்கின்றனர். ஆனாலும், அவர்களின் வணிக நடவடிக்கைகளும், தொழில்துறையும் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சி கோவை, திருச்சி, மதுரை, துாத்துக்குடி மற்றும் ஓசூர் போன்ற நகரங்களிலும் பரவியுள்ளது.
இவற்றில், முதல் நான்கு நகரங்களில் விமான நிலையங்கள் உள்ளன; இந்த நான்கு விமான நிலையங்களிலும் சரியான உள்கட்டமைப்பை அமைப்பதன் வாயிலாக, சர்வதேச விமான நிறுவனங்களை நேரடியாக இந்நகரங்களுக்குத் திருப்பி விடலாம்.
கேரளாவில், கொச்சி சர்வதேச விமான நிலையமாக இருக்கிறது; இது அளவில் மிகச் சிறியது. ஆனாலும், வளைகுடா நாடுகளிலிருந்து வரும் பெரும்பாலான விமானங்கள் நேரடியாக இந்த விமான நிலையத்தில் தரையிறங்குகின்றன.
அதைப்போன்று, கோவை விமான நிலையத்தில், வளைகுடா விமான நிறுவனங்கள் சிலவற்றின் பராமரிப்பு ஹேங்கர்களை நிறுவி, சர்வதேச போக்குவரத்திற்காக மேம்படுத்தலாம்; இதனால், சென்னை விமான நிலையத்தின் நெருக்கடி குறையும்.
மேலும், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிற கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்வோரின் தேவையை பூர்த்தி செய்ய, மதுரை விமான நிலையத்தை மற்றொரு சர்வதேச விமான நிலையமாக மாற்றலாம்.
கூடவே, திருச்சி மற்றும் துாத்துக்குடி விமான நிலையங்களை சர்வதேச வரைபடத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும்.
இந்நகரங்களிலிருந்து சர்வதேச விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடுகளை இணைக்கும் கூடுதல் உள்நாட்டு விமானங்களைச் சேர்ப்பதன் வாயிலாக, சென்னையிலிருந்து இந்த நகரங்களுடனான இணைப்பை மேம்படுத்த வேண்டும்.
இது செயல்படுத்தப்பட்டால், தமிழகம் முழுதும் தொழில் வளர்ச்சி மற்றும் வணிக நடவடிக்கைகள் மேம்படும்; சென்னையின் நெருக்கடியும் குறையும்.
நாம் நீண்ட காலமாகவே சிறு நகரங்களை புறக்கணித்து வருகிறோம். இந்நான்கு நகரங்கள் சர்வதேச இணைப்பைப் பெற்றால், பயணம், சுற்றுலா, ஹோட்டல் துறைகளில் கூடுதல் வேலை வாய்ப்புகள் உருவாகும்; உள்ளூர் வணிகர்கள் தாங்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு சென்னைக்கு வருவதற்குப் பதிலாக, தங்கள் சொந்த இடத்திலிருந்து நேரடியாகச் செல்ல முடியும்!
சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்குத் தேவைப்படும் முதலீட்டை, இந்த நான்கு நகரங்களின் விமான மேம்பாட்டிற்கு செலவு செய்தால், தமிழகம் முழுதும் வளர்ச்சி அடையும்.
எனவே, தமிழக அரசு இவ்விஷயத்தில் தொலைநோக்கு பார்வையுடன் செயல் பட வேண்டும்!
