/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
வாகா எல்லைக்கு அனுப்பி விடுங்கள்!
/
வாகா எல்லைக்கு அனுப்பி விடுங்கள்!
PUBLISHED ON : மார் 06, 2024 12:00 AM
எஸ். சுப்பிரமணியம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கர்நாடக சட்டசபை வளாகமான விதான் சவுதாவில், சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் ஜெயித்த காங்., வேட்பாளர் சையத் நாசிர் உசேன், ஊடகங்களுக்கு பேட்டி அளித்து கொண்டிருந்தார். அப்போது, அவர் பின் நின்றிருந்த கூட்டத்தில் ஒருவர், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என, இரண்டு முறை முழங்கியுள்ளார்.
அவர் காங்., பிரமுகரா அல்லது வெளி நபரா என்ற விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. 'இது குறித்து, என்.ஐ.ஏ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, அம்மாநிலத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சரான, பா.ஜ.,வை சேர்ந்த ஷோபா கூறியுள்ளார்.
'சோறு ஓரிடத்திலே; கூறு - பாசம் - ஓரிடத்திலே' என்று மலையாள மொழியில் ஒரு அருமையான பழமொழி உண்டு.
பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியவர்கள் வாழ்வது இந்தியாவில். அவர்கள் சோறோ அல்லது பிரியாணியோ உண்பது, இந்த நாட்டில் விளைந்த அரிசியால் ஆனது. உறங்கும் உறைவிடமும் இந்தியாவில். ஆனால் பந்தமும், பாசமும் மட்டும் பாகிஸ்தான் மீது.
வைரத்தை வைரத்தால் அறுப்பது போல, முள்ளை முள்ளால் எடுப்பது மாதிரி, பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியவர்களுக்கு, அவர்களது பாணியிலேயே பதிலடி கொடுத்தால் தான், இனி எவரும் இதுபோன்ற அநாகரிகமானசெயல்களில் ஈடுபடத் துணிய மாட்டார்கள்.
இவர்களை பிடித்து வழக்கு நடத்தி, விசாரித்து தண்டனை கொடுத்தாலும் அந்த தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த பிறகும் இதே காரியத்தைத் தான் செய்வர். ஆகவே, அவர்களை பிடித்து, பஞ்சாப் மாநிலம், வாகாவில் உள்ள இந்திய - பாக்., எல்லைக்கு அழைத்து சென்று, எதிர்பக்கம் உள்ள பாக்., ராணுவ வீரர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும்.
'உங்கள் நாட்டுக்கு விசுவாசமாக இருக்கும் இவர்களை, நீங்களே வைத்து கொள்ளுங்கள்... உங்களுக்கு நல்ல அடிமைகளாக இருப்பர்' எனக் கூறி, திரும்பி வந்துவிட வேண்டும்.
அங்கு சென்று சில மாதங்கள் அவர்கள் வாழ்ந்து பார்த்தால் தான், இந்தியா எவ்வளவு பெரிய சொர்க்கபூமி என்பதும், நம் மக்கள் எவ்வளவு சகிப்புத்தன்மை உள்ளவர்கள் என்பதும் புரியும்.
எங்கள் ஓட்டுகள் தேவையில்லையா?
ஆர்.பிரேம்
சுதாகர், பெரிய குளம், தேனி மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: வருமான வரி
கட்டும் அளவுக்கு சம்பாதிப்பவர்களும், அவர்களது ஓட்டுகளை குறி வைக்கும்
அரசியல்வாதிகளும், வருமான வரி சலுகையை ஒவ்வொரு பட்ஜெட்டிலும் எதிர்
பார்க்கின்றனர்.
ஆனால், வருமான வரி கட்டும் அளவுக்கு கூட மாத
சம்பளம் பெற இயலாத, தனியார் துறையில் உழைத்து வாழ்க்கையை தொலைத்த
கோடிக்கணக்கான தொழிலாளர்கள்,பணியாளர்கள் நிலை பற்றி பேச, எந்த
அரசியல்வாதியும் முன்வருவதில்லை. இவர்கள் ஓட்டு, அவர்களுக்கு தேவையில்லையா?
பல
தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளமும், நல்ல போனசும் இல்லாமல் உழைத்து
விட்டு, இறுதிக்காலத்தில் பென்ஷன் கிடைக்காமல், நாடு முழுக்க பல கோடி பேர்
வறுமையில் வாடுவது, நம் அரசியல்வாதிகளுக்கு தெரியுமா?
தொழிலாளர்கள்
வருங்கால வைப்பு நிதி கழகத்தில், தொழிலாளி சம்பளத்தில் பிடித்தம்
செய்யப்படும், 12 சதவீதம் மற்றும் வேலை அளிக்கும் நிறுவனம் செலுத்தும் 12
சதவீதத்தில், 8.33 சதவீதம் பென்ஷனுக்காக ஒதுக்கப்படும்.
இவ்வாறாக பிடித்தம்செய்யப்பட்ட பி.எப்., தொகையில் இருந்தே, 58 வயதை நிறைவு செய்த தொழிலாளிக்கு பென்ஷன் வழங்கப்படுகிறது.
இன்றும்,
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில்இருந்து, 1,000 ரூபாய்க்கு குறைவாக
பென்ஷன் பெறுபவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அதிகபட்சமாக 4,000 ரூபாய்
தான் பென்ஷனாகவழங்கப்படுகிறது.
இப்படி, 1,000 ரூபாய் பென்ஷன்
வாங்குபவர்களுக்கு, 3,000 ரூபாய் வழங்கவும் மற்றவர்களுக்கு, 9,000 ரூபாய்
வழங்கவும் வருங்கால வைப்பு நிதி ஆர்கனைசேஷன் டிரஸ்ட் பரிந்துரை வழங்கியும்,
இன்று வரை அமல்படுத்தப்படவில்லை.
அதிக சம்பளம் பெறும் ஆசிரியர்,
அரசு ஊழியர்களுக்கு வருமான வரி சலுகை, பழைய பென்ஷன் முறையை அமல்படுத்த
குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளே... எங்களை போன்றவர்களின் நிலையையும்
கவனத்தில் கொள்ளுங்கள்.
'பாரத்' பொருட்கள் விற்பனை கண்காணிப்பு!
சுருதி
ஷிவானி, செங்கோட்டை, தென்காசி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: விலைவாசி உயர்வால், மக்கள் பாதிக்கப்படக் கூடாது
என்பதற்காக, சந்தை விலையை விட மிகவும் குறைந்த விலையில், 'பாரத்' என்ற
பெயரில் அரிசி, கோதுமை மாவு, கடலை பருப்பு போன்றவற்றை, மத்திய அரசு விற்பனை
செய்து வருகிறது.
தற்போது, 1 கிலோ அரிசியின் விலை 60 முதல் 70
ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஏழை, எளிய நடுத்தர மக்கள் இதனால் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளனர். நெல் விளைச்சல் நாளுக்கு நாள் குறைவதால், அரிசி விலை
இன்னும் உயரும் என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
இந்த சூழலில்,
பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில், நாடு முழுதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள,
'பாரத் பிராண்ட்' அரிசி விற்பனை திட்டம் மக்களுக்கு மிகவும் பயன்
தரக்கூடியது என்பதில் சந்தேகம் இல்லை.
அதேபோல், மத்திய அரசுக்கும் நல்ல பெயர் கிடைக்கும் என்பதிலும் மாற்று கருத்து இல்லை.
ஆனால், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ரேஷன் பொருட்களே, அதிக அளவில் கள்ளச் சந்தையில் விற்கப் படுகின்றன.
அப்படி
இருக்கும் போது, ரேஷன் கார்டு எதுவும் இல்லாமல், யார் வேண்டுமானாலும்
வாங்கலாம் என்று கூறப்படும், 'பாரத் பிராண்ட்' பொருட்கள் கள்ள சந்தையில்
விற்பனை செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.
அப்படி கள்ளச் சந்தையில்
விற்கப்பட்டால், மத்திய அரசு எதிர்பார்ப்பது போல் விலைவாசியும் குறையப்
போவதில்லை; மக்களுக்கு நன்மையும் கிடைக்கப் போவதில்லை. மாறாக, கள்ளச் சந்தை
வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம் கிடைக்கும்.
நெல்லுக்கு பாயும்
நீரில் சிறிதளவு புல்லுக்கும் பாயலாம். ஆனால், புல்லுக்கு பாய்ந்தது போக
எஞ்சியது தான் நெல்லுக்கு பாயும் என்ற நிலை வந்தால் பயிர்கள்
பாதிக்கப்பட்டு, நாம் எதிர்பார்க்கும் விளைச்சல் கிடைக்காமல் போய் விடும்.
எனவே, பாரத் பொருட்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதையும் மத்திய அரசு உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

