தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ கடுமையான தண்டனை வழங்க வேண்டும்!

 கடுமையான தண்டனை வழங்க வேண்டும்!

 கடுமையான தண்டனை வழங்க வேண்டும்!


PUBLISHED ON : அக் 01, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 01, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கு.அருண், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த தி.மு.க., ஆட்சியில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில், எதிர்க்கட்சிகளின் பல கட்ட போராட்டத்திற்கு பின்பே, குற்றவாளி ஞானசேகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இத்தனைக்கும் குற்றவாளி ஒரு சாதாரண தி.மு.க., நிர்வாகி. ஆனாலும், அரசியல் அழுத்தங்களுக்கு கட்டுப்பட்டு ஞானசேகரனை கைது செய்ய தயங்கியது, காவல் துறை.

அதேபோன்று தான், தற்போது நடந்து வரும் ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் புகாரும்!

கடந்த தி.மு.க., ஆட்சியில் இதுகுறித்து புகார் தரப்பட்டும், அவ்வழக்கை மூடி மறைக்கும் விதமாக, சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தனர், போலீசார்.

ஆனால், அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளாமல், மீண்டும் புலன் விசாரணை செய்ய உத்தரவிட்டார், நீதிபதி பத்மா.

இந்நிலையில், சட்டசபை தேர்தலில் தி.மு.க ., தோல்வி அடைந்து, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வரவே, தற்போது, இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஜெம் வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வழக்கை, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் திஷா, தேன்மொழி, முத்தரசி, கீதாஞ்சலி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது, தமிழக அரசு.

குற்றத்தை மறைக்க, காவல் துறை உயர் அதிகாரிகளான கண்ணன் ஐ.பி.எஸ்., அருண் ஐ.பி.எஸ்., உதவி கமிஷனர் யாஸ்மின் மற்றும் ஆய்வாளர்கள் ராஜலட்சுமி, மகேஷ் குமார் போன்றோர் உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால், அவர்களை பணி நீக்கம் செய்வதுடன், கடுமையான தண்டனையும் வழங்க வேண்டும்.

கூடவே, 'யார் அந்த பவர் சென்டர்' என்பதை கண்டறிந்து, தமிழக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்.

அப்போது தான், வருங்காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள், வீரமணி போன்ற சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் குற்றவாளிகளுக்கு உதவ யோசிப்பர்!

-------------

ஜமுக்காள போக்கிரி!



வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபை தேர்தல் முடிவுக்கு முன், தி.மு.க., கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்டுகள், தேர்தல் முடிவுக்கு பின், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால், அமைச்சரவையில் சேரவில்லை; இதுவரை நடந்த எல்லா தேர்தல்களிலும் தெளிவான முடிவு எடுத்த கம்யூனிஸ்டுகள், 2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பின் தடுமாற துவங்கினர். 2021 - -26 தி.மு.க., ஆட்சி நடந்தபோது சாம்சங் பிரச்னை, துாய்மை தொழிலாளர்கள் மற்றும் பரந்துார் விவசாயிகள் போராட்டங்களின்போது தங்கள் சித்தாந்தத்தை மறந்து, கோமா நிலையில் இருந்தனர்.

விஜய் ஆட்சியிலும் அப் படியே மந்தமாக இருக்க கூடாது என்று, காம்ரேடு களுக்கு உறைத்து விட்டது போலும்... இடைத்தேர்தலில் களம் புகுந்துள்ளனர்.

ஆட்சி, கூட்டணி, பணபலம் இன்றி கம்யூனிஸ்டுகள் துணிந்து போட் டியிடுவது ஆரோக்கியமான அரசியல் தான்!

கம்யூனிஸ்டுகளின் பலத்தை பரிசோதிக்க, இந்த இடைத்தேர்தல் நல்ல வாய்ப்பு.

எல்லா கட்சிகளும் இப்படி தனித்து போட்டியிட்டால், கட்டில் போக்கிரி யார், ஜமுக்காள போக்கிரி யார் என்பது வெளிச்சம் ஆகிவிடும்!



----------

தவறுகள் களைய கடும் நடவடிக்கை தேவை!



எஸ்.வைத்தியநாதன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபி ேஷகத்தை அடுத்து, மூன்று நாட்களுக்கு சிறப்பு வரிசைகள், கட்டண தரிசனம் என எதுவும் கிடையாது என அறிவிக்கப்பட்டிருந்ததால், சுவாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் மதுரை சென்றிருந்தேன்.

நான்கு கோபுரங்கள் வழியே பக்தர்களை கோவிலுக்குள் அனுமதித்தாலும், அறநிலையத் துறையின் ஏற்பாடுகள் எதுவும் முறையாக இல்லை.

மொபைல் போனை வைக்க அரை மணி நேரம்; வாங்க அரை மணி நேரம் என்று காத்திருக்க வேண்டி இருந்தது. அந்த இடத்தில் ஒரே ஒரு ஊழியர் தான் பணியில் இருந்தார். இதில், சர்வர் பிரச்னை வேறு!

மேலும், கோவிலுக்குள் சென்ற பின் தான் தெரிந்தது, சிறப்பு தரிசனம் என்பது என் போன்ற சாமானியர்களுக்கு கிடையாது; பணம் படைத்தோர், செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டும் தான் என்பது!

ஆயிரக்கணக்கான பக்தர் கள் வரிசையில் காத்திருக்கும் நிலையில், கோவில் ஊழியர்கள் மற்றும் போலீசார் தங்களுக்கு வேண்டியவர்களை தனி வழியில் அழைத்து சென்றனர். அபிேஷக தரிசனம் கிடை யாது என அறிவித்துவிட்டு, அபிேஷக நேரத்தில் அர்த்த மண்டபத்தில், 50க்கும் மேற்பட்டோர் அமர்ந்து தரிசனம் செய்தனர். அவர்களுக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது?

காலை, 6:00 மணிக்கு கோவிலுக்குள் நுழைந்த நாங்கள், 10:30 மணிக்கு தான் வெளியே வந்தோம்; அவ்வளவு கூட்டம்!

கூட்டத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் ஊழியர்களை நியமிக்க முடியாத அளவு, வருமானமே இல்லாத கோவிலா மீனாட்சி அம்மன் கோவில்?

இதில், ஒரே ஓர் ஆறுதல்... காத்திருந்த பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட் பாக்கெட் கொடுத்தது தான்!

மேலும், சன்னிதியில் கருவறைக்குள் அடிக்கடி அர்ச்சகர்கள் சென்று வருவதால், சுவாமி தரிசனம் செய்ய சிரமமாக இருந்தது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள், கோவிலுக்கு வருவது சுவாமியை தரிசனம் செய்யத் தானே தவிர, அர்ச்சகர்களின் முதுகை பார்த்து விட்டு செல்ல அல்லவே!

எனவே, விஜய் தலைமை யிலான அரசு நல்லது செய்ய வேண்டும் என நினைத்தால் மட்டும் போதாது; விதிமுறைகளை மீறும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான், இதுபோன்ற தவறுகள் களையப்படும்!



--------

நடுநிலையாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்!


ஏ.ஸ்ரீவாஸ், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக மின்சார வாரியம் சமீபகாலமாய், குறிப்பாக, 200 யூனிட் இலவச அறிவிப்பிற்குப் பின் , பல தன்னிலை விளக்கங்களை அளித்து வருகிறது.



தவறான ரீடிங்குகளால் கட்டணம் பல மடங்கு அதிகமாவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, மின்வாரியம் ஆய்வுகள் மேற்கொண்டதாகவும், அதில், 3,000 மீ., மட்டுமே தவறாக காட்டியதாகவும் செய்தி வெளியிட்டனர்.

இதற்காக, ஆகஸ்ட், செப்டம்பர் மாத ரீடிங்கை, ஜூன், ஜூலையுடன் ஒப்பிடுகின்றனர். ஜூன் மாதத்துடன் கோடை முடி கிறது; இந்த மாதங்களை விட ஆகஸ்ட், - செப்டம்பர் மாதங்களில், 'ரீடிங்' குறை வாகவே வரும் என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும்.

நியாயமாக கூற வேண்டுமானால், இதே காலகட்டத்தில், கடந்த ஆண்டில் நடந்த ரீடிங்கை தான் தற்போதைய ரீடிங்குடன் ஒப்பிட வேண்டும். ஆனால் இவர்கள், கோடை கால மான ஜூன், ஜூலையுடன் ஒப்பிடுகின்றனர்.

இந்நிலையில், திடீரென்று கடந்த மாதங்களின் ரீடிங்கை விட, 3,000 ரூபாய் கூடுதலாய் வந்தால் மட்டுமே நடவடிக்கை என்கின்றனர்.

ஒரு நடுநிலையான குழு இதை ஆய்வு செய்வதே சரியாக இருக்கும்!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us