தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ ஆலோசனை கூட்டத்தில் காதை மூடிக் கொள்வதா?

 ஆலோசனை கூட்டத்தில் காதை மூடிக் கொள்வதா?

 ஆலோசனை கூட்டத்தில் காதை மூடிக் கொள்வதா?

1


PUBLISHED ON : ஜூன் 15, 2026 12:16 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 15, 2026 12:16 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெ.நாராயணன், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து ஆராய, சமீபத்தில் கள ஆய்வுக்குழு ஒன்றை நியமித்தார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின்.

இக்குழு தமிழகம் முழுதும் தொகுதி வாரியாக சென்று, நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதில், உள்கட்சி பஞ்சாயத்துகள், தகுதியற்ற வேட்பாளர்கள், மாவட்ட செயலர் மற்றும் அமைச்சர்களின் உள்குத்து என்று தோல்விக்கு பல காரணங்கள் இருந்ததுடன், தேர்தல் நேரத்தில் மக்கள் பணத்தை கட்சியினரே சுருட்டிக் கொண்டதும் அம்பலமாகியுள்ளன.

உடனே, தேர்தல் களத்தில் கட்சியின் முகமாகத் திகழ்ந்த, 23 செய்தி தொடர்பாளர்களை அழைத்து, அறிவாலயத்தில் ஸ்டாலினும், உதயநிதியும் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர்.

அவர்களும், தங்கள் குமுறல்களை தலைவரிடம் மனம் விட்டுப் பேசலாம் என்று காத்திருக்க, ஸ்டாலினோ எழுதிக் கொடுத்த அறிக்கையை சம்பிரதாயமாக வாசித்துவிட்டு அமர்ந்து விட்டார்.

செய்தி தொடர்பாளர்கள் தங்கள் தரப்பு நியாயங்களையும், களத்தில் சந்தித்த அவமானங்களையும் பேசத் துவங்கியபோது, அதை, ஸ்டாலின் காது கொடுத்து கேட்கவில்லை!

அதேபோன்று, சமீபத்தில் நடந்த உள்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில், நிர்வாகிகள் தங்கள் ஆதங்கங்களை கொட்டி, 'தி.மு.க.,வின் உண்மையான பலமே, கள அரசியல் தான்; அதனால், சமூகவலைதள பந்தாக்களை விடுத்து, களத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' என்று கூறிய போது, 'விஜய் என்ன கள அரசியல் செய்தா முதல்வரானார்... பிரச்னைகள் சார்ந்து அரசியல் செய்தால் போதும்' என்று, உதயநிதி அலட்சியமாக கூற, நிர்வாகிகள் நொந்து போயினராம்!

ஆட்சியில் இருந்த போது, மக்கள் பிரச்னைகளைத் தான் காது கொடுத்து கேட்கவில்லை என்றால், ஆலோசனைக் கூட்டத்திலும் காதுகளை இறுக மூடிக் கொண்டால், தேர்தல் தோல்வியில் இருந்து ஸ்டாலின் எப்படி பாடம் கற்பார்?

எண்ணம் போல் வாழ்வு!


ஆர்.ராமசாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

மத்திய பிரதேசத்தில், ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட இருந்த முன்னாள் எம்.பி., மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, டில்லியில், தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்து பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர்கள், இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும், முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனராம்.

சாமானிய குடிமகனான நமக்கு, அரசியல்வாதிகளின் செயல்பாட்டை பார்த்து, ஜனநாயகம் என்றால் என்னவென்றே புரியவில்லை.

ஏனெனில், காங்., கட்சியின் பார்லிமென்ட் எதிர்க்கட்சி தலைவர் ராகுல், தேர்தல்களில் காங்., வெற்றி பெற்றால், ஜனநாயகம் காப்பாற்றப்பட்டது என்று துள்ளிக் குதிப்பதும், தோல்வியடைந்தால், 'ஓட்டு திருட்டு' என்று குற்றஞ்சாட்டுவதை வாடிக்கையாக வைத்திருப்பவர்.

ராஜ்யசபா சீட்டை குறிவைத்து காங்., மூத்த தலைவர்கள் பலர் காய் நகர்த்திய நிலையில், அத்தனை பேர்களுக்கும், 'கடுக்காய்' கொடுத்து, மீனாட்சி நடராஜனுக்கு வாய்ப்பு கொடுத்ததால், அக்கட்சியினரே மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவில் தவறுகளை செய்து, வேட்புமனுவை நிராகரிக்கும்படி செய்து விட்டனர்!

பத்துக்கும் மேற்பட்ட தேர்தல்களில் போட்டியிட்ட அனுபவம் வாய்ந்த மீனாட்சி நடராஜன், தன் வேட்புமனுவை தானே பூர்த்தி செய்யாமல், அடுத்தவரை நம்பி கொடுத்ததால் வந்த விளைவு இது!

பட்டினத்தார் என்ற துறவியை, அவருடைய சகோதரி விருந்துக்கு அழைத்து, நஞ்சு கலந்த அப்பத்தை உண்ண கொடுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதை, தன் யோக சக்தியால் அறிந்த பட்டினத்தார், 'தன் வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்' என்று கூறி, அந்த அப்பத்தை வீட்டின் கூரை மீது வீசியெறிய, அவரது சகோதரி வீடு எறிந்து போனதாம்!

இக்கதையைப் போல் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி காணும் போதெல்லாம், ஓட்டுப்பதிவு இயந்திரத்தையும், தேர்தல் கமிஷனையும், பா.ஜ., அரசையும் சகட்டு மேனிக்கு குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்த ராகுலுக்கு, மீனாட்சி நடராஜனின் வேட்பு மனு தள்ளுபடியாகும்படி செய்த அக்கட்சியினரின் உள்ளடி வேலை சரியான பாடத்தை புகட்டியுள்ளது!

இதைத்தான் எண்ணம் போல் வாழ்வு என்பரோ!

நுழைவு வரி ரத்து செய்யப்படுமா?


ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

ராமநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ள ராமேஸ்வரத்திற்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும், தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், சாலை மார்க்கமாக வாகனங்களில் ராமேஸ்வரம் வருவோருக்கு, வாகனம் ஒன்றுக்கு குறைந்த பட்சம், 100 ரூபாய் வீதம் நுழைவு வரி வசூலிக்கின்றனர், நகராட்சியினர்.

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, சாலை மார்க்கமாக வரும் வாகனங்களுக்கு இதுபோன்று நுழைவுவரி விதிப்பதில்லை.

அதேபோன்று, மதுரை அழகர் கோவில், பழனி, திருச்செந்துார், திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை, தேவிபட்டினம் போன்ற பல ஆன்மிக தலங்களை உள்ளடக்கிய எந்த நகராட்சியும் நுழைவு வரி விதிக்கவில்லை.

நாகப்பட்டினம் நாகூர் காதர் ஆண்டவர் தர்கா மற்றும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள, ஜாம்புவானோடை ஷேக் தாவூது வலியுல்லா தர்கா போன்ற ஆன்மிக தலங்களுக்கு இதுபோன்று முன்பு நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது; பின், தி.மு.க., ஆட்சியில் அது ரத்து செய்யப்பட்டது.

அதேபோன்று, தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர், ராமேஸ்வரத்திற்கு வரும் வாகனங்களுக்கும் நுழைவு வரி ரத்து செய்து, பக்தர்களுக்கு நிம்மதி அளிக்க வேண்டும்!

முடிவுக்கு வருமா பேனர் கலாசாரம்?


வி.அனன்யா, பொள்ளாச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாளை, பேனர்கள் வைத்து கொண்டாடாமல், நலத்திட்ட உதவிகள் செய்து கொண்டாட வேண்டும் என்று கூறியுள்ளார், அமைச்சர் ஆனந்த்.

இது, வரவேற்கத்தகுந்தது. ஏனெனில், முந்தைய தி.மு.க., ஆட்சியில் ஸ்டாலின் பிறந்த நாளை பேனர் வைத்தும், வீதிகள்தோறும் மேடை அமைத்தும், மாதக்கணக்கில் பிறந்த நாள் விழா கொண்டாடி, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.

தி.மு.க.,வினரின் இந்த பேனர் கலாசாரத்தால், ஒரு சில அப்பாவி உயிர்கள் பறிபோனதும் உண்டு.

எனவே, பிறந்த நாள் கொண்டாட்டம், அது இது என்று தெருவுக்கு தெரு பேனர் ஒட்டும் விளம்பர அரசியல் இந்த ஆட்சியிலாவது மறையட்டும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us