/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
தமிழக நலனில் அக்கறை காட்டுங்கள்!
/
தமிழக நலனில் அக்கறை காட்டுங்கள்!
PUBLISHED ON : ஏப் 22, 2025 12:00 AM

ஆர்.சுப்பிரமணியன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'எந்த தனி நபரும், எத்தகைய உயர் பொறுப்பில் இருப்பவரானாலும், அவர் சட்டத்திற்கு கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும்' என, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கருக்கு அறிவுரை வழங்கியுள்ளார், திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின்.
அடுத்தவருக்கு அறிவுரை வழங்க, தான் தகுதியுடையவர் தானா என்று முதலில் சிந்தித்து பார்க்க வேண்டும்!
பிளக்ஸ் போர்டுகளுக்கு தடை விதித்தும், சாலைகளில் நிறுவப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்ற வலியுறுத்தியும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு, பல மாதங்கள் ஆகின்றன. ஒரு மாநில முதல்வர், நீதிமன்ற உத்தரவை கடைப்பிடிக்க வேண்டாமா?
தன் கட்சியினரே சாலை நடுவில் கொடி கம்பங்களை நடுவதையும், போக்குவரத்து மிகுந்த சாலைகளில் பிளக்ஸ் போர்டுகள் வைப்பதையும் தடுக்க முடியாதவர், அடுத்தவரை சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்க அறிவுறுத்துவது நகைப்பு உரிய செயல்!
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் நடந்த அரசு விழாவில், 'அமித் ஷாவிடம் கேட்கிறேன்... 'நீட்' தேர்வில் விலக்கு தருவோம் என்று உங்களால் சொல்ல முடியுமா?
'தமிழகத்துக்கு இவ்வளவு சிறப்பு நிதியை கொடுத்திருக்கிறோம் என்று பட்டியலிட முடியுமா? தொகுதி சீரமைப்பால் தமிழகத்தின் பிரதிநித்துவம் குறையாது என்று வாக்குறுதி கொடுக்க முடியுமா?' என்று, ஏகப்பட்ட முடியுமாக்களை கேட்டுள்ளார், முதல்வர் ஸ்டாலின்.
'நீட் தேர்வில் விலக்கு தருவோம்' என்று எங்காவது, எப்போதாவது, மத்திய அரசு சொல்லி இருக்கிறதா... சொல்லாத ஒரு விஷயத்தை சொல்லி, 'முடியுமா, முடியுமா' என்று கேட்க, திராவிட மாடல் முதல்வரால் மட்டுமே முடியும்!
தமிழகத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு வழங்கியுள்ள நிதிகளை பட்டியலிட்டு பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் விபரமாக எடுத்துரைத்து விட்டனர். அதை ஒழுங்காக படித்து, புரிந்துகொள்ளும் தெளிவின்றி, 'பட்டியலிட முடியுமா' என்று கேட்கிறார் என்றால், முதல்வரின் அறிவாற்றலை என்னவென்று மெச்சுவது?
தொகுதி மறுசீரமைப்பு என்ற பேச்சே எழாதபோது, பிரதிநிதித்துவம் குறையாது என்று எப்படி வாக்குறுதி அளிக்க முடியும்?
இப்படி மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுபோட்டு வீர உரை ஆற்றும் முதல்வர், பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்தும், மாதாந்திர மின்கட்டணம் மற்றும் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம் தருவதாக கூறியது குறித்து மறந்தும் பேசுவதில்லையே ஏன்?
உங்கள் சொந்த நிதியை உயர்த்தவும், கழக கண்மணிகள் நடத்தும் மருத்துவ கல்லுாரிகள் போணி செய்யவும், எம்.பி.,க்கள் எண்ணிக்கை குறைந்துவிடுமோ என்பதில் காட்டும் அக்கறையை கொஞ்சம் தமிழக மக்களின் நலனில் காட்டுங்கள் முதல்வரே!
மெ கா கூட்டணி அமைக்க முடியாது!
என்.மல்லிகை
மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பா.ஜ.,வுடன்
நாங்கள் வைத்திருப்பது வெறும் தேர்தல் கூட்டணி; மற்றபடி ஆட்சியில் பங்கு தர
மாட்டோம்' என்கிறார், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி.
என்னமோ
அ.தி.மு.க., கூட்டணி, 2026 சட்டசபை தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்று,
ஆட்சிக்கு வந்து விடும் என்பது போல, பா.ஜ.,வுக்கு ஆட்சியில் பங்கு தர
மாட்டோம் என்று பந்தா செய்கிறார், பழனிசாமி.
அ.தி.மு.க.,வுடன்
எத்தனை கட்சிகள் தேர்தல் கூட்டணி வைக்க முன் வரும் என்பதே தெரியாது.
தற்போது, தே.மு.தி.க., பிரேமலதா, த.மா.கா., தலைவர் வாசன் மட்டுமே கூட்டணி
வைத்துள்ளனர்.
பா.ம.க.,வில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே நடக்கும் அதிகார சண்டை ஓய்ந்ததாக தெரியவில்லை.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 'என் வழி தனி வழி' என்று கூறிவிட்டார்.
நடிகர் விஜய் கூட்டணிக்கு உடன்படாததால் தான், பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்ததே!
காரணம்,
'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், எங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும்
கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு தருவோம்' என்று உறுதியாக கூறி விட்டார்,
விஜய்.
எனவே, வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, பலம்
வாய்ந்த தி.மு.க., கூட்டணியைத் தோற்கடித்து ஆட்சிக்கு வருமா என்பதே
சந்தேகம் தான்!
இதில், ஆட்சியில் பங்கு கொடுக்க மாட்டோம் என்று பழனிசாமி கூறுவது வேடிக்கையாக உள்ளது.
ஜெயலலிதாவுடன், அ.தி.மு.க., ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது என்பதுதான் நிதர்சனம்!
எனவே, ஆட்சியில் பங்கு தர மாட்டோம் என்று கூறுவதன் வாயிலாக, பழனிசாமியால் ஒரு மெகா கூட்டணியை நிச்சயமாக அமைக்க முடியாது!
அதிகாரத்திற்கு மல்லுக்கட்டும் கட்சிகள்!
ப.ராஜேந்திரன்,
சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வரும் சட்டசபை
தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., என, எந்தக் கூட்டணி வெற்றி பெற்றாலும்,
ஆட்சியிலும், அதிகாரத்திலும் கூட்டணி கட்சிகள் தங்கள் பங்கை
எதிர்பார்த்துள்ளன என்பதே நிதர்சனமான உண்மை.
தி.மு.க.,வுடன்
கூட்டணி வைத்து, 2021 தேர்தலில் போட்டியிட்ட வி.சி., - காங்கிரஸ் கட்சிகள்
இதுவரை மவுனமாக இருந்துவிட்டு, இப்போது ஆட்சியில் பங்கு பெறத் துடிப்பதே
அதற்கு சாட்சி!
கரூர் அருகே திருமாநிலையூர் எனும் ஊரில்,
'ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும்' என்று போஸ்டர் அடித்து
ஒட்டியுள்ளனர், வி.சி., கட்சியினர்.
அதேபோன்று, பாளையங்கோட்டையில்
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஒட்டப்பட்ட போஸ்டரில்,
'வருங்கால முதல்வரே' என்று கூறியிருப்பது, அ.தி.மு.க., வினரை எரிச்சலடைய
வைத்துள்ளது.
'யாரோ ஒருவரை முதல்வராக்க நாங்கள் ஏன் பாடுபட
வேண்டும்? ஆட்சியில் பங்கு என்பதை அடிப்படையாக வைத்தே இனி கூட்டணி
அமைப்போம்' என்று கூறியுள்ளார், இதுவரை அ.தி.மு.க.,விற்கு ஆதரவு கொடுத்து
வந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி.
இன்னும் அடுப்பில் பானையையே ஏற்றவில்லை; அதற்குள் சோறு வெந்து விட்டதா என்று ஒவ்வொரு கட்சியினரும் ஆலாய் பறக்கின்றனர்.
இந்நிலையில்,
'அ.தி.மு.க., கூட்டணி ஜெயித்தாலும், ஆட்சியில் எவருக்கும் பங்கு கிடையாது;
அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி அரசு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்
ஷா கூறவில்லை. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்
என்றுதான் சொன்னார்' என்று குழப்பியுள்ளார், அக்கட்சி பொதுச்செயலர்
பழனிசாமி.
இன்றைய அரசியல் சூழ்நிலையில், கூட்டணி கட்சியினரை
ஊக்கப்படுத்த, வெற்றி பெற்றால் இரண்டு அல்லது மூன்று அமைச்சர் பதவிகளை
ஒதுக்குவதாக அறிவிப்பதுதான் புத்திசாலித்தனமான செயலாக இருக்குமே தவிர,
கூட்டாக மரம் ஏறி பழம் பறித்துவிட்டு, 'பழம் எனக்கு; கொட்டை உனக்கு' என்று
சொல்வதில், எந்த பயனும் விளையப்போவதில்லை!