தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ விரைவு தீர்ப்புகளால் குற்றங்கள் குறையும்!

 விரைவு தீர்ப்புகளால் குற்றங்கள் குறையும்!

 விரைவு தீர்ப்புகளால் குற்றங்கள் குறையும்!

3


PUBLISHED ON : ஆக 05, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 05, 2026 12:00 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரா.திரிகேஷ், திருப்பத்துார், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாட்டில் குற்றங்கள் குறைய வேண்டும் என்றால், தண்டனை சட்டங்கள் கடுமையாக இருப்பதுடன், விசாரணையை ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்காமல், விரைவில் தண்டனை வழங்கப்பட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும்.

ஆனால், நம் நாட்டிலோ விசாரணையே பல ஆண்டுகளுக்கு ஜவ்வாக இழுத்துக் கொண்டு போகிறது. தீர்ப்பு வழங்கப்பட்டாலும், மேல் முறையீடு என்ற பெயரில், மீண்டும் பல ஆண்டுகளுக்கு வழக்கு இழுத்தடிக்கப்படுகிறது.

இதனாலேயே, குற்றங்களும் குறைவதில்லை; குற்றவாளிகளும் தண்டனை குறித்து அஞ்சுவதில்லை. கடைசியில் பாதிக்கப்பட்டோரின் வாழ்வும், மனமும் தான் நீதி கிடைக்காமல் நொந்து போகின் றன.

இத்தகைய சூழ்நிலையில், தேசிய அளவிலான போட்டி தேர்வுகளில், வினாத்தாள்களை கசிய விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், குற்றவாளிகளுக்கு 10 கோடி ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மூன்று மாதத்திற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று, குற்றத்திற்கான தண்டனையையும், தீர்ப்புக்கான காலத்தையும் நிர்ணயித்து, புதிதாக சட்டம் கொண்டு வந்துள்ளது, மத்திய அரசு.

இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்!

ஏனெனில், அமைச்சர், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க, தனி நீதிமன்றங்கள் உள்ளன. ஆனால், காலநிர்ணயம் இல்லாத காரணத்தால், வழக்குகள் முடிவுக்கும் வருவதில்லை; ஊழல்வாதிகளுக்கு தண்டனையும் கிடைப்பதில்லை. அதனால், அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வென்று அமைச்சராகி, மீண்டும் ஊழல் செய்வதை தடுக்க முடியாமல் போய் விடுகிறது.

அவ்வகையில், வினாத்தாளை கசிய விடும் குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது என்பதற்காக, சரியாக, 'ஆப்பு' அடித்துள்ளது, மத்திய அரசு.

இதேபோன்று, கொடூர குற்றவாளிகள், தேச விரோதிகள், போதைப்பொருள் விற்பனை செய்வோர், பாலியல் குற்றவாளிகள், லஞ்சம் - ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் தொடர்புடைய வழக்குகளையும் விரைவு நீதிமன்றங்கள் அமைத்து, குறிப்பிட்ட காலத்தில் விசாரித்து, தண்டனை வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தால், குற்றங்கள் வெகுவாக குறையும். பாதிக்கப்பட்ட மக்களும் தங்களுக்கான நீதிக்கு ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை வராது!

தாமதமாகும் நீதியும் ஒரு பெருங்குற்றம் தான்!

--------------

நீருக்காக போராட வேண்டி வரும்!


எஸ்.ஏ.ஸ்ரீனிவாச சர்மா, அலெக்ஸாண்ட்ரியா நகரம், வர்ஜீனியா மாகாணம், அமெரிக்காவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகம், கர்நாடகா, ஆந்திரா- மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு இடையிலான நீர் பகிர்வு சிக்கல்களை பார்க்கும் போது, இம்மாநில அரசியல்வாதிகளுக்கு மக்கள் நலனைவிட அதிகாரத்தை கைப்பற்றுவதே பிரதான நோக்கமாக உள்ளது.

நீர் தொடர்பான அரசியல்வாதிகளின் இந்த மோதல்கள், தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான ஒரு காரணியாகவே மாறிவிட்டது.

பருவமழை பொழிந்தாலும், நீரை சேமிக்கவும், அணைகளைக் கட்டவும், ஆறுகளை இணைக்கவும், நீண்டகாலத் திட்டங்கள் எதுவும் இல்லை.

கடந்த 1960ல் மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் அமைச்சரவையில், மத்திய நீர்ப்பாசன மற்றும் எரிசக்தி துறை அமைச்சராக இருந்த, கே.எல்.ராவ், கங்கை நீரை காவிரியுடன் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று, அரசுக்கு பரிந்துரை செய்தார்.

அதை, பிரதமர் நேரு செவிமடுக்கவில்லை. அதன்பின், 1977ல் முன்னாள் விமான கேப்டன் தின்ஷா தஸ்துார், 'கார்லண்ட் கால்வாய்' என்ற பெயரில், நாட்டில் உள்ள முக்கிய நதிகளை இணைக்கும் திட்டத்தை முன் வைத்தார்.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் இத்திட்டத்தை தீவிரமாக ஆதரித்து வந்த நிலையில், 1980-ல் மீண்டும் பிரதமராக பதவியேற்ற இந்திரா, அதை கண்டுகொள்ளாமல் விட்டதால், அத்திட்டம் செயல்பாட்டுக்கு வராமலேயே போனது.

இந்நிலையில், கங்கை - காவிரி இணைப்பு திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள, 90 நதிகளை இணைக்கும் விதமாக, 2019ல் நதிகள் இணைப்பு திட்டத்தை அறிவித்தார், பிரதமர் நரேந்திர மோடி. அத்திட்டம் என்னவானது என்று தெரியவில்லை.

ஆனால், உள்ளூர் நதிகள் தற்போது இணைக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.

அவ்வகையில், இந்திய நதிகள் இணைக்கப்பட்டால், வடகிழக்கு மாநிலங்கள் வெள்ளத்தில் மூழ்குவதில் இருந்தும், தென் மாநிலங்கள் வறட்சியின் பிடியில் இருந்தும் தப்பிக்கும்!

மத்திய - மாநில அரசுகள் இதுகுறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

அத்துடன், இயற்கையின் பஞ்சபூதங்களைப் பாதுகாப்பதிலேயே, இந்நாட்டின் கலாசாரம் வேரூன்றியுள்ளது.

எனவே, மக்களும் நீரை பாதுகாக்க இயற்கையோடு இணைய வேண்டும்; அப் போதுதான் அடுத்த தலைமுறை நீருக்காகப் போராட வேண்டிய நிலை ஏற்படாது!

---------------

நில அபகரிப்பு முதலைகளை அப்புறப்படுத்துங்கள்!


வி.பொன்ராஜ், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: விருதுநகர் மாவட்டம், சாத்துார் வட்டம் கோட்டப்பச்சேரி கிராமத்தில், நான்கு தலைமுறையாக, 1990 வரை நாங்கள் அனுபவித்து வந்த நிலத்தை, சாத்துார் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த ஒருவர், எவ்வித ஆவணமும் இல்லாமல், தன் செல்வாக்கை பயன்படுத்தி, எங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, 1995 ஜூன் 11ல் தன் பெயரில் பத்திரப்பதிவு செய்துவிட்டார்.

இந்த விபரம் தெரிய வந்தது முதல், நிலத்தை மீட்க போராடி வருகிறேன்.

அதன் ஆவண நகல் அல்லது பட்டா பதிவு செய்யப்பட்ட கோப்புகளில் பதிவான ஆவண நகல் கேட்டு, வட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்டால், நில உரிமைப் பதிவுகளை புதுப்பித்தல் திட்டமான யு.டி.ஆர்.,க்கு முன் உள்ள ஆவணம் எதுவும் பராமரிக்கப்படவில்லை என கூறுகின்றனர்.

கலெக்டர் அலுவலகமோ, சம்பந்தப்பட்ட ஆவணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தான் உள்ளது என்கிறது. இதில் யார் சொல்வது உண்மை என்று தெரியவில்லை.

தலைமை செயலர் மற்றும் முதல்வரின் தனிப் பிரிவு - நிலநிர்வாக ஆணையம், வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் என, துறைவாரியாக பல கடிதங்கள் எழுதியும் எவரும் கண்டு கொள்ளவில்லை.

நில மோசடிக்கு முதல் காரணமே, வி.ஏ.ஓ., தாசில்தார் மற்றும் சார் - பதிவாளர்கள் தான்!

பழனி முருகன் கோவில் நிலத்தையே ஆக்கிரமிப்பு செய்யும் அளவு துணிந்தவர்களுக்கு, சாதாரண பொது மக்களின் நிலம் எம்மாத்திரம்!

எனவே, முதல்வர் விஜய், இந்த நில அபகரிப்பு முதலைகளை வலை விரித்து பிடித்து, கூண்டோடு அப்புறப்படுத்த வேண்டும். அப்போது தான், எங்களைப் போன்ற சாதாரண மக்கள், தங்கள் நிலத்தை பாதுகாக்க முடியும்! lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us