PUBLISHED ON : மே 15, 2025 12:00 AM

பி.என்.கபாலி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசை, 'ஸ்டிக்கர் ஒட்டும் அரசு' என்று பலரும் கிண்டல் செய்து வரும் நிலையில், அக்கலையை அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் பின்பற்ற துவங்கி விட்டார்.
நம் ராணுவத்தின் அடி தாங்காமல், இரண்டு நாட்கள் கூட போர் நடத்தும் திறனின்றி, நேரடியாக சமாதானம் கோரியவர், பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரி.
நாம் எப்போதுமே ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல; அறமும், வாய்மையும் நம் உதிரத்தில் கலந்திருப்பதால், அடுத்தவரை இம்சிப்பதை விரும்புவதில்லை.
தேவையில்லாமல் போர் நடத்தும் எண்ணம் நமக்கு இருந்ததில்லை. எனவே, சமாதான முன்னெடுப்பை வரவேற்றோம்.
ராமாயணத்தில், விபீஷணன் சரணாகதி கேட்டு வரும்போது, அதை ஏற்பதா, மறுப்பதா என்று அனைவரிடமும் கருத்து கேட்டார், ராமர். ஹனுமனை தவிர, அனைவருமே ஏற்பது நல்லதல்ல என்றனர்.
இறுதியாக ராமர், 'விபீஷணன் என்ன, ராவணனே சரணாகதி கேட்டு வந்தாலும், அதை ஏற்பதே என் தர்மம்' என்றார்.
இது தான் பாரதத்தின் கலாசாரம்!
'இந்தியா - பாகிஸ்தான் பிரச்னையில், அமெரிக்கா எவ்விதத்திலும் தலையிடாது' என்று அந்நாட்டின் துணை அதிபரான ஜே.டி.வான்ஸ் ஏற்கனவே கூறியுள்ளார்.
அப்படி இருக்கும்போது, பாகிஸ்தான் நம் காலில் விழுந்து, நாமும் அபயம் அளித்து விட்ட நிலையில், முந்தைய இரவு முழுதும் இரு நாட்டுடன் பேசி, இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக டிரம்ப் கூறியது, வெறும் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையே!
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூட, 'நம் வெளியுறவு துறையின் அறிக்கையில், டிரம்ப் குறித்து எந்தவித குறிப்பும் இல்லையே...' என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
'போர் நிறுத்தத்திற்கு நானே காரணம்' என்று பாகிஸ்தானுக்கு உணர்த்த நினைக்கிறார், டிரம்ப். அதை, அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு நாம் பணிந்து விட்டோம் என்று, இங்கு எவராவது நினைத்தால், அது அறிவீனம்.
பிரதமர் மோடி நல்லவர் மட்டுமல்ல; வல்லவரும் கூட. அமைதியை விரும்புபவர்; ஆனால், அசடு அல்ல!
அமெரிக்காவின் அடியாள் தான் பாகிஸ்தான். 'பாஸ்' தன் அடியாளை கைவிடுவாரா?
அடியாளின் விசுவாசத்தை தக்க வைத்துக்கொள்ள, டிரம்ப் முயற்சிக்கிறார் என்பதே உண்மை!
அமெரிக்க உறவு விஷயத்தில் இந்திராவுக்கே நல்ல தெளிவு இருந்தது. இந்திரா பெயரை சொன்னாலே, அன்றைய அதிபர்களான நிக்ஸன், ஹென்றி கிஸ்ஸிங்கர் போன்றோருக்கு எரிச்சல் வரும்.
இந்திரா, அமெரிக்காவை மதித்ததே இல்லை. மோடி மதிக்கிறார்; ஆனால், மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன்!
இந்த உண்மை புரியாமல், இங்கு சிலர் ஓட்டு அரசியல் செய்கின்றனர்.
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தால், 'போரை ஆர்.எஸ்.எஸ்.,சும், பா.ஜ.,வும் தான் விரும்புகிறது; இந்தியர்கள் எவரும் விரும்பவில்லை' என்பதும், சரணாகதி அடைந்த நாட்டை தண்டிப்பது தர்மம் அல்ல என்று போர் நிறுத்தம் செய்தால், 'மத்திய அரசு, அமெரிக்காவுக்கு மண்டியிட்டு விட்டது' என்று கூறுவதும், தமிழக அரசியல்வாதிகளின் கேவலமான அரசியலையே காட்டுகிறது.
இந்த இரட்டை வேடதாரிகளை என்று மக்கள் புறம் தள்ளுகின்றனரோ, அன்றே தமிழகத்திற்கு விடிவு பிறக்கும்!
மதுரையில் இரண்டாவது ரயில் முனையம் எப்போது?
ஜெ.மனோகரன்,
மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் மதுரையில்
நடந்த, ரயில்வே ஆலோசனை கூட்டத்தில், கூடல் நகர் ரயில் நிலையம், இரண்டாவது
ரயில் முனையமாக மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார், கம்யூனிஸ்ட்
கட்சியை சேர்ந்த எம்.பி., வெங்கடேசன்.
மதுரை மக்களின், 20 ஆண்டு
கோரிக்கை இது! மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து, விரைவில் இத்திட்டத்தை
செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். காரணம், மதுரைக்கு என அறிவிக்கும்
திட்டங்கள், அப்படியே கிடப்பில் போடப்படுவது தான், இம்மண்ணின் பரிதாப
நிலையாக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், மதுரை கூடல்நகர்
ரயில் நிலையம், 'ஆதர்ஷ்' என்ற மாதிரி ரயில் நிலையமாக மாற்றம் செய்ய,
ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டும், அத்திட்டம் அறிவிப்போடு நின்று
விட்டது.
சென்னையில், நான்கு ரயில் முனையங்கள் செயல்பாட்டுக்கு
வந்து விட்டன. ஆனால், வரலாற்று சிறப்பு மிக்க தமிழகத்தின், இரண்டாவது
பெரிய நகரமான மதுரையோ, வேலை வாய்ப்பு, போக்குவரத்து வசதி, தொழில்
வளர்ச்சியில் சிறிதும் முன்னேற்றம் இல்லாமல் உள்ளது.
இம்மண்ணிலிருந்து எத்தனையோ அரசியல்வாதிகள் சட்டசபை மற்றும் பார்லிமென்டை
அலங்கரிக்கின்றனர்; ஆனால், எவரும் மதுரையின் வளர்ச்சி குறித்து அக்கறை
காட்டுவதில்லை.
மக்களும் தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி ஓட்டு
போடாமல், ஜாதி மற்றும் கட்சி சார்ந்து ஓட்டளிப்பதால், வெற்றி பெறுவோர்,
தங்கள் சொந்த வளர்ச்சியில் அக்கறை காட்டுகின்றனரே தவிர, ஊரின் வளர்ச்சியில்
அக்கறை காட்டுவதில்லை!
எனவே, மக்கள்தொகை பெருக்கம், போக்குவரத்து
நெரிசலை கவனத்தில் கொண்டு, இரண்டாவது ரயில் முனையம் அமைக்க, ரயில்வே துறை
நடவடிக்கை எடுக்க வேண்டும்!
ஓட்டுகளால்
விரட்டுவரா?
எஸ்.ராமாநுஜதாஸன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பஹல்காம் பயங்கரவாத
படுகொலைக்கு பதிலடியாக, நம் ராணுவம் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை
பயன்படுத்தி, பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டின் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
பகுதிகளில் இயங்கி வந்த, பயங்கரவாதிகளின் ஒன்பது முகாம்களை தகர்த்து
அழித்துள்ளது.
திருமணமான ஹிந்து பெண்கள் நெற்றி வகிட்டில் வைக்கும்
குங்குமத்தின் பெயரால், 'ஆப்பரேஷன் சிந்துார்' எனும் இந்த அதிரடி
தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
கண்ணெதிரே நம் பெண்களின் கணவர்களை
சுட்டுக் கொன்று, அவர்களது குங்குமத்தை அழித்தவர்களை தேடிச் சென்று
வேட்டையாடி உள்ளது, நம் ராணுவம்.
அதேநேரம், இங்கு தமிழகத்தில்
திராவிட மாடல் ஆட்சியில், டாஸ்மாக் எனும் அரக்கன் வாயிலாக, தினமும் பல
நுாறு பெண்கள் குங்குமத்தை இழக்கின்றனர்.
இக்கொடுமை, 1967ல் கருணாநிதி ஆட்சி காலத்தில் இருந்து, இன்று வரை தொடர்கிறது.
கழக கண்மணிகளின் மதுபான தொழிற்சாலைகள் மதுவை, 'சப்ளை' செய்ய, டாஸ்மாக் மதுபானக் கடைகள் வாயிலாக, இக்கொடுமை அரங்கேறுகிறது.
தமிழ் பெண்களை விதவைகளாக்கி வரும் டாஸ்மாக் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, இதற்கும் ஓர், 'ஆப்பரேஷன் சிந்துார்' தேவை!
இந்த ஆப்பரேஷன் வெற்றி பெற ராணுவம் தேவையில்லை; நோட்டுக்கு மயங்காதோர், தங்கள் ஓட்டுகளால் மட்டுமே இதை விரட்ட முடியும்!
செய்வரா பெண்கள்?