தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ இடைத்தேர்தலை தடுக்க முடியாது!

 இடைத்தேர்தலை தடுக்க முடியாது!

 இடைத்தேர்தலை தடுக்க முடியாது!


PUBLISHED ON : செப் 22, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 22, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.ராமசாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தேர்தலில் வெற்றி பெற்ற பின், மக்களின் தீர்ப்பை புறக்கணித்து, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வோர், குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது குறித்து தேர்தல் கமிஷன் ஆய்வு செய்ய வேண்டும்.

'இந்த வழக்கு முடியும் வரை, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார், வழக்கறிஞர் ஒருவர்.

தேர்தல் கமிஷனை பொறுத்தவரை எவருக்கு வந்த விருந்தோ என்ற ரீதியில் தான் தேர்தலை நடத்துகிறதே தவிர, வேட்பாளர்களின் வேட்பு மனுவில் பூர்த்தி செய்து கொடுக்கும் விபரங்களில் எத்தனை சதவீதம் உண்மை; பொய் என்பது குறித்து எந்தவித பரிசீலனையும் செய்வதில்லை.

மதம் மாறிய பட்டியலினத்தவர், வேட்பு மனுவில், 'தலித்' என்று குறிப்பிட்டு தனித்தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். அதையும் தேர்தல் கமிஷன் சரிபார்ப்பதில்லை!

தமிழகத்தில் பல முறை ஆண்ட கட்சியின் தலைவரும், மாநிலத்தின் முதல்வராக இருந்தவருமான ஸ்டாலின், சட்டசபை தேர்தலின் போது, வேட்பு மனுவில், தன் கையில், 10 ஆயிரம் ரூபாய் தான் உள்ளது; சொந்தமாக கார் கூட இல்லை என்று குறிப்பிட்டார். அதை அப்படியே ஏற்று, தேர்தலில் போட்டியிட அனுமதி கொடுத்தது தேர்தல் கமிஷன்!

இப்படி ஒவ்வொரு தேர்தலையும், தேர்தல் கமிஷன் அவசர கதியில் நடத்தி முடிக்கிறதே தவிர, வேட்பாளரது மனுவின் உண்மை தன்மை குறித்து சிறிதும் ஆராய்வது இல்லை.

உண்மை இப்படி இருக்கும் போது, 'ராஜினாமா செய்த, எம்.எல்.ஏ.,க்கள் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது, அவர்களுக்கு ஓட்டளித்த வாக்காளர்களை அவமதிக்கும் செயல். இதுபோன்ற சூழலை எதிர்கொள்ள, தேர்தல் கமிஷனிடம் விதிமுறைகள் உள்ளதா?' என்று தேர்தல் கமிஷனுக்கு கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் அறிவிப்பு வெளியாகி விட்டதால், 'இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது' என்று கூறி, வழக்கை வரும், 18ம் தேதிக்கு தள்ளி வைத்து விட்டனர்.

தேர்தல் கமிஷன் வேட்பு மனுவின் உண்மைத் தன்மையை பரிசீலிக்க துணியாது எனும் போது, உச்ச நீதிமன்றத்தால் கூட, இடைதேர்தல்களை தடுக்க முடியாது என்பதே நிதர்சனம்!

-----

உறுதி செய்ய வேண்டும்!


சு.மனோகரன், தலைமை ஆசிரியர் (பணி நிறைவு), கோடேரி, நீலகிரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகள் இருக்கும் போது, தமிழகத்தில் மட்டும் ஹிந்தி கற்பிக்கப்படுவதாக கூறி, அவற்றை எதிர்த்து வருகின்றனர், தமிழக அரசியல்வாதிகள்.

கேணப்பய ஊருல கிறுக்குப் பய நாட்டாமை என்பது போல், ஊர்தோறும் ஆங்கிலப் பள்ளிகளையும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளையும் திறந்து வைத்து கல்லா கட்டும் இந்த அரசியல் கோமான்களுக்கு, ஏழை வீட்டுப் பிள்ளைகள் மட்டும் ஹிந்தி படிப்பது வேப்பங்காயாக கசக்கிறது!

இங்குள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஹிந்தியை புறந்தள்ளி சங்கத் தமிழ் மூன்றும் கற்பிக்கப்படுவது போலவும், அரசியல்வாதிகள் எல்லாம் தமிழை வளர்க்க மாவட்டந்தோறும் நாலு சி.பி.எஸ்.இ., பள்ளிகளை திறந்து வைத்து தமிழ் தொண்டாற்றுவது போலும் என்னவொரு பித்தலாட்டம்?

இவர்களது மொழிக் கொள்கை எல்லாம் பணம் படைத்தவர்கள் முன், வாய் பொத்தி நின்று விடுகிறதா? இல்லை, இல்லாதவர் வீட்டு பிள்ளைக்கு எதற்கு மும்மொழி என்ற உயர்ந்த சிந்தனையின் வெளிப்பாடா?

தமிழக வெற்றிக் கழக அரசாவது, திராவிட கட்சிகளின் போலியான இந்த மொழிக் கொள்கையை பிடித்து தொங்கிக் கொண்டிருக்காமல், தமிழகத்தில், நவோதயா பள்ளிகள் அமைவதை உறுதி செய்ய வேண்டும்!

*------

அரசு மாற்றி யோசிக்குமா?


-அ.முக்தார், கணியூர்-, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: என் வீட்டில் ஒரு மாதத்திற்கு, 1,500 ரூபாய் முதல், 2,000 ரூபாய் வரை மின் கட்டணம் வருகிறது. கோடை காலத்தில் இன்னும் எகிறுகிறது.

அதனால், பணத்தை மிச்சப்படுத்தும் நோக்கில், 'சோலார் சிஸ்டம்' அமைக்க, அது சம்பந்தமான நிறுவனத்திடம் விசாரித்தபோது, 3 கிலோவாட் சோலார் சிஸ்டம் அமைத்தால், ஒரு நாளைக்கு சராசரியாக, 12 முதல், 15 யூனிட்கள் வரை மின் உற்பத்தி செய்யும் என்றும், மாதத்திற்கு 360 முதல், 450 யூனிட்கள் மின்சாரம் கிடைக்கும் என்றனர்.

நாம் உற்பத்தி செய்யும் மின்சாரமும், நாம் பயன்படுத்தும் மின்சாரமும், 'நெட் மீட்டர்' வாயிலாக கணக்கிடப்பட்டு, நாம் பயன்படுத்தியது போக மீதமுள்ள உபரி மின்சாரத்தை, மின்வாரியத்தின் கணக்கில் மின் யூனிட்களாக வரவு வைக்கப் படுகிறது.

இந்த உபரி யூனிட்கள் அடுத்தடுத்த மாதங்களுக்கான, 'பில்லிங்' சுழற்சிக்கு மாற்றப்பட்டு, பயன்படுத்தும் மின்சாரத்திற்கு ஏற்ப கழித்துக் கொள்ளப்படும்.

ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும், மார்ச்- 31ல் நம் கணக்கில் கழிக்காமல் மீதம் இருக்கும் உபரி யூனிட்கள் பூஜ்ஜியம் ஆக்கப் படுகிறது.

சோலார் சிஸ்டத்திற்கான முதலீட்டுச் செலவுகளைக் கணக்கிட்டால், 3 கிலோவாட் அமைக்க,1 லட்சத்து, 80 ஆயிரம் முதல், 2 லட்சத்து, 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்!

இதில், மத்திய அரசின், 78 ஆயிரம் ரூபாய் மானியம் போக நிகரச் செலவு, 1 லட்சம் முதல், 1 லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.

இதன் வாயிலாக ஆண்டிற்கு, 36 ஆயிரம் முதல், 48 ஆயிரம் ரூபாய் வரை மின்சாரக் கட்டணம் சேமிக்கப்படுவதால், நாம் போட்ட முதலீட்டை, ஐந்து ஆண்டுகளில் முழுமையாகத் திரும்ப எடுத்து விடலாம்.

முதலீடு செய்த நான்கு ஆண்டுகளில் அசல் கைக்கு வந்த பின், அடுத்த 20 ஆண்டுகளுக்கு மேல், இலவச மின்சாரமும், சேமிப்பும் மட்டுமே கிடைக்கும்!

ஆனாலும், சோலார் பேனல்களை அமைக்க மக்கள் முன்வராததற்கு காரணம், நாம் பயன்படுத்தியது போக மீதமுள்ள மின்சாரத்தை மின்வாரியத்திற்கு வழங்கும் போது, அவர்கள் அதை கணக்கில் மட்டும் வைத்துக் கொள்கின்றனரே தவிர, பணமாகக் கொடுப்பதில்லை என்பதால் தான்!

வெளிமாநிலங்களில் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்யும் தமிழக மின்வாரியம், இதுபோன்று வீடுகள், நிறுவனங்களில் சோலார் வாயிலாக கிடைக்கும் அதிகப்படியான மின்சாரத்தை குறைந்த விலைக்கு வாங்கினால், சோலார் பேனல் அமைப்போருக்கு மின்கட்டணச் சேமிப்போடு, மாதந்தோறும் ஒரு வருவாய் கிடைக்கும். அரசும் மின்சாரத்திற்காக பல கோடி ரூபாய் செலவு செய்வது மிச்சமாகுமே!

அரசு மாற்றி யோசிக்குமா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us