PUBLISHED ON : ஆக 29, 2025 12:00 AM

ரா.கந்தசாமி, புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பிரதமரே ஆனாலும், கிரிமினல் வழக்கில் கைதானால், பதவி பறி போகும் வகையிலான புதிய மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்த இம்மசோதாவுக்கு, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதன் நகலை கிழித்தெறிந்து ரகளையில் ஈடுபட்டனர்.
இதுவரை, ஒருவர் மீது குற்றச்சாட்டு இருப்பதாலேயே அவர் குற்றவாளி ஆகி விட மாட்டார் என்ற, 'கான்செப்டை' வைத்து , முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் உட்பட தமிழகத்தை சேர்ந்த பலர் எம்.பி.,யா கவும், அமைச்சர்களாகவும் கோலோச்சியவாறு, மக்களின் வயிற்றெரிச்சலை கொட்டி கொண்டுள்ளனர்.
இதுபோன்ற உப்புச்சப்பற்ற சட்டங்களுக்கு கடிவாளம் போடும் விதத்தில் தான், மத்திய பா.ஜ., அரசு தைரியமாக இம்மசோதாவை தாக்கல் செய்துள்ளது.
நேர்மை, உண்மை, ஊழலற்ற தன்மை, ஒப்பற்ற தேசப்பற்று மற்றும் மக்கள் மீது அக்கறை கொண்டவர்களால் மட்டுமே இப்படிப்பட்ட சட்டத்தை கொண்டுவர இயலும்!
ஆனால், 'லோக்சபாவில் தாக்கல் செய்த, 130வது அரசியலமைப்பு திருத்த சட்டம் சீர்திருத்தம் அல்ல; இது ஒரு கருப்பு மசோதா . இந்நாள் ஒரு கருப்பு நாள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் பதவி நீக்கம், விசாரணை இல்லை போன்ற அம்சங்கள் எல்லாம், பா.ஜ.,வின் சர்வாதிகாரப் போக்கு' என்றும், 'ஜனநாயகத்தின் ஆணிவேரையே அசைத்துப் பார்க்கும் இம்மசோதா கொண்டுவரப்படுவதை கண்டிக்கிறேன்' என்றும், பதற்றத்தில் பிதற்றியுள்ளார், தமிழக முதல்வர் ஸ்டாலின்.
அமித் ஷா தாக்கல் செய்துள்ள மசோதாவில், 'பிரதமரே ஆனாலும்' என்று தான் ஆரம்பித்துள்ளார்.
ஆ னால், ஸ்டாலின், 'பிரதமரே ஆனாலும்' என்ற வார்த்தையை வசதியாக மறைத்து விட்டு, 'மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல்வர் பதவி நீக்கம்' என்று தான் ஆரம்பிக்கிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால், நாட்டையே கொள்ளை அடிக்கலாமா?
மடியில் கனம் இல்லையென்றால், வழியில் பயம் எதற்கு?
இந்த அற்புதமான மசோதாவை விழுந்தடித்து எதிர்ப்பதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது...
ஆட்சியாளர்கள் என்னதான் ஊழல் குற்றங்கள் செய்தாலும், மக்களும், சட்டமும், நீதிமன்றமும் கண்டு கொள்ளக் கூடாது; தண்டிக்கவும் கூடாது என்பது தானே இதன் பொருள்!
'ஆப்பரேஷன் சிந்துார்' விவாதம், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டின என்றால், இம்மசோதாவை எதிர்ப்பதன் வாயிலாக, 'நாங்கள் பெரும் ஊழல் பெருச் சாளிகள், நாட்டை கூறு போட்டு கொள்ளை அடிப்பவர்கள்' என்பதை, எதிர்க்கட்சிகள் தெளிவாக உணர்த்தி விட்டன!
எவருக்கு ஓட்டளிப்பர்? சி.எம்.கார்த்திக், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ
- மெயில்' கடிதம்: தி.மு.க., தலைமையை பொறுத்தவரை தமிழ், தமிழர் நலன்
என்பதெல்லாம், அரசியல் பிழைப்புக்காக சொல்லப்படும் வெற்று வார்த்தைகள்.
உண்மையில், 'தமிழர் எவரும் தமக்கும் மேல் உயரிய பதவிக்கு வந்து விடக்
கூடாது' என்பதில் கண்ணும் கருத்துமாக காய் நகர்த்துவர்.
இப்படித்தான், 1996ல் வாஜ்பாய் அரசு கவிழ்ந்த பின், காங்கிரஸ் கட்சியைத்
தவிர்த்து, எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று கூடி, பிரதமரை தேர்வு செய்ய
டில்லியில், கருணாநிதி தலைமையில் கூட்டம் போட்டது.
அக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலர் ஹர்கிஷன் சிங்
சுர்ஜித், 'ஏன் மூப்பனார் பிரதமர் ஆகக்கூடாது? இவர் அந்தப் பதவிக்கு
மிகவும் தகுதியானவர்' என்று தன் கருத்தைச் சொன்னபோது, அதற்கு எதிர்ப்பு
தெரிவித்தவர் கருணாநிதி.
அப்போது மூப்பனாரின், தமிழ்நாடு
காங்கிரஸ் கட்சி, தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்திருந்தது. அதனால், 'நம்
கூட்டணியில் இருக்கும் ஒருவர் பிரதமர் ஆவார்; அவருக்கு நாம் சல்யூட் செய்ய
வேண் டுமா ?' என்ற ஆணவத்தில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் கருணாநிதி.
பின், அன்றைய கர்நாடக முதல்வராக இருந்த தேவகவுடா பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
அதேபோன்று, 2012ல் ஜனாதிபதி தேர்வுக்கு அப்துல் கலாம் பெயரை பா.ஜ.,
முன்னிறுத்தியபோது, 'கலாம் என்றால் கலகம் என்று பொருள்; அதனால் தான்
ஜனாதிபதி தேர்வில் கலகம் உண்டாகியுள்ளது...' எனக்கூறி, அந்த உயர்ந்த மனிதரை
இழிவுபடுத்திய துடன், ஒரு தமிழர் ஜனாதி பதி ஆவதை வெறுத்தவர் கருணாநிதி.
இப்போதும், மத்திய பா.ஜ., அரசு, தமிழரான, மஹாராஷ்டிரா கவர்னர்
ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளது. 'இண்டியா'
கூட்டணியினர் தெலுங்கானாவை சேர்ந்த முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டியை
வேட்பாளராக அறிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், தம்மை
அரியணையில் ஏற்றி அழகு பார்க்கும் தமிழகத்தை சேர்ந்தவரை ஆதரிப்பாரா இல்லை
சுதர்ஷன் ரெட்டியை ஆதரிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
இந்தியா - சீனா உறவு நிலைக்குமா? சு.செல்வராஜன், கோவையில் இருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சீனாவின் அரசியல் என்றுமே
சந்தேகத்துக்குரியதாகத் தான் இருந்துள்ளது. அன்று, தமிழ் ஈழத்துக்கு
எதிராக, இலங்கைக்கு உதவிகளைச் செய்தது என்றால், இன்று பாகிஸ்தானில்
விடுதலை கேட்டுப் போராடும் பலுசிஸ்தானை நசுக்க, அனைத்து உதவிகளையும்
அந்நாட்டிற்கு செய்து வருகிறது, சீனா.
தற்போது, இந்தியா மீது
அமெரிக்கா, 50 சதவீதம் வரிவிதித்துள்ள நிலையில், சீனா - இந்தியா உறவு
சீரடைவது போல் தோன்றினாலும், அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது மிகப்
பெரிய கேள்விக்குறியே!
காரணம், மோடி அரசு அமைந்த பின்,
அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியா இருப்பதை சீனா விரும்பவில்லை.
எங்கே, இந்தியா புதிய வல்லரசாக உருவாகி விடுமோ என்ற அச்சமே இதற்கு
காரணம்.
அமெரிக்காவுக்கும் அந்த எண்ணம் வர ஆரம்பித்ததன் விளைவு தான், இந்தியா மீது அமெரிக்கா தொடுத்துள்ள வர்த்தக போருக்கு காரணம்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடின் - டிரம்ப் பேச்சு வார்த்தை அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்தது.
ரஷ்ய அதிபரை வசியம் செய்யப் போன டிரம்ப்பை, வசியம் செய்து அனுப்பி
விட்டார், புடின். இனி, தன் கோபத்தை இந்தியாவின் மீது தான் காட்டுவார்,
டிரம்ப்.
அது, இன்னும் இந்தியா - சீனா இடையே நெருக்கத்தை
ஏற்படுத்தலாம். ஆனாலும் சீனாவின் நட்பு என்பது பூனையை மடியில் கட்டிக்
கொண்டு சகுனம் பார்க்க புறப்பட்ட கதையாகத்தான் இருக்கும்!
பார்போம்... சீனா முதுகில் குத்துமா இல்லை உண்மையான நட்புடன் திகழுமா என்பதை!