/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
தேர்தல் முடிவுகள் சொல்லி விட்டதே!
/
தேர்தல் முடிவுகள் சொல்லி விட்டதே!
PUBLISHED ON : பிப் 09, 2025 12:00 AM

என்.வைகை வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்திருக்கும் பட்ஜெட்டை கூட்டணி கட்சியினர் வரவேற்றுள்ளனர்; எதிர்க்கட்சியினர் வழக்கம்போல், 'உப்பு சப்பில்லாத பட்ஜெட்; மாயாஜால பட்ஜெட்' என்று வசை பாடி உள்ளனர்.
எதிர்க்கட்சியினரின் வசைபாடலுக்கு காரணம், பீஹார், ஆந்திரா மற்றும் பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதிகளை வாரி வழங்கியுள்ளதால் ஏற்பட்டுள்ள வயிற்றெரிச்சல்!
'இது ஏழைகளுக்கான பட்ஜெட் இல்லை; பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆக உதவும் பட்ஜெட்' என்று எப்போதும் கூறும் பல்லவியை சிலர் பாடியுள்ளனர்.
ஆண்டு வருமானம், 12 லட்சம் வரை இருப்போருக்கு, வருமானவரி விலக்கு அளித்திருப்பது, பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கும் மட்டும் அல்லவே... தமிழகத்திற்கும் தானே!
இந்த வரிவிலக்கால், மத்திய அரசுக்கு1 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று தெரிந்தும், மக்களுக்காக இந்த சலுகைகளை அளித்துள்ளார், நிதியமைச்சர்.
மூத்த குடிமக்களுக்கு நிரந்தர கழிவாக, 50,000 ரூபாயில் இருந்து, 1 லட்சம் ரூபாயாக உயர்த்தி இருப்பதும் பாராட்ட வேண்டிய அம்சம் அல்லவா?
இதன் வாயிலாக, இவர்கள் 13 லட்சம் ரூபாய் சம்பாதித்தாலும், வருமானவரி செலுத்த வேண்டியது இல்லை. இதுவரை, எந்த நிதியமைச்சரும் இந்த அளவுக்கு வருமானவரி சலுகைகள் அளித்ததில்லை.
நிர்மலா சீதாராமன் அளித்திருக்கும் பட்ஜெட் ஏழைகளுக்கானதா, பணக்காரர்களுக்கானதா என்பதை டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சியினருக்கு உணர்த்தி விட்டதே!
'இண்டியா' கூட்டணியினருக்கு இப்போது தெரிந்து இருக்குமே இது யாருக்கான பட்ஜெட் என்று!
நீதி கிடைக்குமா?
கே.ரங்கராஜன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் தலைவர் 'முதல்வர்
பதவி ஏற்றவுடன், நம்ம ஆளுங்க மணல் மற்றும் கனிம வளங்களை எல்லாம் எடுத்துச்
செல்லலாம்' என்று கூறினார், அப்போதைய எம்.எல்.ஏ.,வும், தற்போதைய
அமைச்சருமான செந்தில்பாலாஜி.
அவர் கூறியது போல், தென் மாவட்டங்களில், 'டெண்டரில்' குறிப்பிட்டதற்கு மேல், கனிம வளங்களை அள்ளி எடுக்கின்றனர், உடன்பிறப்புகள்.
இதில் என்ன விசேஷம் என்றால், அமைச்சர்களும், மாவட்ட ஆட்சியர்களும், காவல் துறையும் அவ்வளவு ஒற்றுமையாக பணிபுரிகின்றனர்.
சமீபத்தில்,
கனிம வள கொள்ளை குறித்து புகார் அளித்த புதுக்கோட்டை மாவட்டம்
வெங்களூரைச் சேர்ந்த ஜெகபர் அலி, சினிமா பாணியில் லாரி ஏற்றி
கொல்லப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட ஜெகபர் அலி, முன்னாள்
அ.தி.மு.க., கவுன்சிலர்; ஆனால், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தன்
பங்குக்கு ஏதோ ஒரு கேள்வி கேட்க வேண்டுமே என்ற ரீதியில் அறிக்கை விட்டதுடன்
சரி... தன் கடமை முடிந்து விட்டதாக போய் விட்டார்.
ஏன் அவர் இதுகுறித்து, தி.மு.க.,வை கடுமையாக விமர்சனம் செய்யவில்லை? எல்லாம் பங்காளிகளின் ரகசிய டீல்!
இது புரியாமல், நீதி, நேர்மை என்று புறப்பட்டால், இப்படித் தான் லாரியில் அடிபட்டு இறக்க நேரிடும்.
ஜெகபர்
அலி குடும்பத்திற்கு நீதி கிடைக்குமா என்பதை, தமிழகத்தில் மனுநீதி சோழன்
ஆட்சி நடப்பதாக கூறிய, காங்., தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தை தான் கூற
வேண்டும்!
எப்போது விடிவு காலம்?
ப.ராஜேந்திரன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: அரசியல் கட்சிகள்,
சாலைகளை ஆக்கிரமித்து, கட்சிக் கொடிகளை நட்டு போக்குவரத்துக்கு இடையூறு
அளித்து வந்த நிலையில், 'தேசிய மாநில நெடுஞ்சாலைத் துறைகள், உள்ளாட்சி
அமைப்புகள், அரசின் இதர துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில்
நிறுவப்பட்டுள்ள கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின்
கொடிக்கம்பங்களை, 12 வாரங்களில் அகற்ற வேண்டும்' என்ற, உயர் நீதிமன்ற மதுரை
கிளையின் உத்தரவு, மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
அரசியல்
கட்சியினர் கொடிகளை நட்டு, 'நான் உயரமா, நீ உயரமா' என்று கம்பங்களின்
உயரத்தை அதிகப்படுத்தி, அவை எப்போது தலையில் விழுமோ என்று பொதுமக்களை
அச்சுறுத்துகின்றனர்.
சாலையில் கொடிகள் இருக்கக் கூடாது என்று கூறிய
உயர் நீதிமன்றம், 'பொதுக் கூட்டங்களின்போது, கட்சிகள் தங்கள் கொடிகளை
நட்டு, சாலைகளை நாசப்படுத்தக் கூடாது' என்றும் கூறி இருக்கலாம்!
'தேர்தல்
பிரசாரம், பொதுக்கூட்டம், ஊர்வலம் போன்ற நிகழ்ச்சி களின்போது, பொது
இடங்களில் கொடிக்கம்பங்களை தற்காலிகமாக நிறுவ சம்பந்தப்பட்ட கட்சிகள்,
அமைப்புகளிடம் அரசு கட்டணம் வசூலித்து அனுமதியளிக்கலாம்; கொடி நட தோண்டிய
பள்ளத்தை அக்கட்சிகள், அமைப்புகள் முன்பு போல் சீரமைத்து தர வேண்டும்'
என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால்,
அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் போடாத நாட்களே இல்லையே... அதிலும்,
தேர்தல் நெருங்கி விட்டால் கேட்கவே வேண்டாம். 1 கிலோ மீட்டர் துாரத்திற்கு
கட்சிக் கொடிகளை நட்டு, புதிதாக போடப்பட்ட சாலைகளையும் சின்னாபின்னமாக்கி
விடுவர்.
முதல் நாள் ஒரு கட்சி கொடியை நட்டு, பேருக்கு பள்ளத்தை மூடும்; மறுநாள் இன்னொரு கட்சி, அதைத் தோண்டி கொடியை நடும்!
கடைசியில், சாலை கந்தல் சீலை போல் காட்சியளிக்கும்!
இதற்கு எல்லாம் எப்போது விடிவு வரும்?
பாதை மாறினால் பலன் கிடைக்குமா?
என்.ஏ.நாகசுந்தரம்,
குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: தமிழக அரசியலில் திருமாவளவன்சாதித்தது, தி.மு.க., தயவில்வெற்றி
பெற்று, எம் பி.,யாகடில்லிக்கு போனது தான்!
இதைத் தாண்டி, அவரது அரசியல் வாழ்வில் என்ன சாதித்து விட்டார்?
எந்த
மக்களை முன்னிறுத்தி, அவர்களுக்கு அதிகாரத்தை பெற்றுத்தரப் போவதாக கட்சி
ஆரம்பித்தாரோ, அந்த மக்கள் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து
இறந்த போதும், வேங்கை வயல் சம்பவத்திலும் அவர்களுக்காக பெரிதாக குரல்
கொடுக்க முடியாமல், ஒப்புக்கு ஒரு கண்டனம் தெரிவிக்க தான் முடிந்தது
இவரால்!
வி.சி., கட்சிக்கு வாழ்வு வந்தது போல், லாட்டரி அதிபர்
மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா கட்சியில் சேர்ந்தார்; மது ஒழிப்பு மகளிர்
மாநாடு என, கட்சிக்குபுத்துயிரும் தந்தார். சோர்ந்து போன சிறுத்தைகள், நம்
தலைவரும் முதல்வராகும் காலம் கனிந்து விட்டது என ஆனந்தக்கூத்தாடிய போது,
தி.மு.க., வுக்கு ஆதவ் தந்த குடைச்சல் பேச்சுகள், திருமாவுக்கு தலைவலியைத்
தர, கடைசியில் கட்சியை விட்டு வெளியேறி விட்டார் ஆதவ்.
இன்று, தமிழக
வெற்றிக் கழகம் அவரை தேர்தல் பிரசார பொதுச்செயலராக நியமித்து,
அரவணைத்துக்கொண்டது. தன்னை அரசியல்வாதியாக அடையாளப்படுத்திய திருமாவுக்கு
ஆதவ் நன்றி சொல்லி, பொன்னாடை போர்த்தி உள்ளார்.
தி.மு.க., நட்பு மீது அதிருப்தியில் தவிக்கும் திருமாவுக்கு, பாதை மாறி பயணிக்க பொன்னாடை அணிவிப்பு அச்சாரமாகும்!
அதேநேரம், பாதை மாறினால், திருமாவுக்கு பலன் கிடைக்குமா?