PUBLISHED ON : ஏப் 30, 2026 12:00 AM

எல்.நாராயணன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவி என்பது எப்போதும் ஒரு முள் கிரீடம் தான். செல்வப்பெருந்தகையை தலைவராக நியமித்தபோதே எழுந்த எதிர்ப்புகள், இப்போது அவர் மாற்றப்படப் போகிறார் என்ற செய்தி வந்தவுடன், ஒரு மிகப்பெரிய கோஷ்டிப் பூசலாக உருவெடுத்துள்ளது.
தலைவர் பதவி காலியாகப் போகிறது என்று தெரிந்தவுடனேயே, டில்லி மேலிடத்திற்கு படையெடுக்கும் தமிழக காங்கிரஸ் 'பெரிய தலைகளின்' ஆர்வம் வியப்பளிக்கிறது.
செல்வப்பெருந்தகை, தி.மு.க.,வுடனான கூட்டணியை உறுதி செய்ததில் முக்கிய பங்கு வகித்தாலும், மூத்த தலைவி சோனியாவின் செல்ல மகன் ராகுலுக்கு முரணாக சில கருத்துகளை வெளியிட்டது, செல்வப் பெருந்தகைக்கு பாதகமாக முடிந்து விட்டது.
தேர்தல் பிரசாரத்தின் போதே, 'தேர்தல் முடிந்தவுடன் நான் விலகிக் கொள்கிறேன்' என்று அவர் சொன்னது, கட்சிக்குள் இருந்த அழுத்தத்தையே காட்டுகிறது. ஆனால், அவர் விலகுவதற்கு முன்பே கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, சசிகாந்த் செந்தில் என, ஒரு பெரும் பட்டாளமே அந்த நாற்காலியில் அமரத் தயாராக இருப்பதுதான் வேடிக்கை.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தேய்ந்து வருகிறதா அல்லது வளருகிறதா என்ற கவலை யாருக்கும் இருப்பதாகத் தெரிய வில்லை; அந்த பதவியைப் பிடிப்பதில் தான் அனைவரும் மும்முரமாக இருக்கின் றனர். ராகுலின் நம்பிக்கையைப் பெற ஒரு கோஷ்டி முயன்றால், மற்றொரு கோஷ்டி மல்லிகார் ஜுன கார்கே வாயிலாக காய் நகர்த்துகிறது.
ஒவ்வொரு முறையும் தலைவர் மாறும் போது, 'புதிய ரத்தம் பாயும், கட்சி வலுப்பெறும்' என்று சொல்லப்படும் வார்த்தைகள், வெறும் அறிக்கைகளாகவே முடிந்துவிடுகின்றன. 28 தொகுதிகளில் போட்டியிட்டு, ஆறு இடங்களில் மட்டுமே பிரசாரம் செய்த ஒரு தலைவரின் கீழ் இயங்கிய கட்சி, இப்போது அடுத்த தலை வரைத் தேடி அலைவது, அந்த இயக்கத்தின் பலவீனத்தையே காட்டுகிறது.
பதவிக்காக முட்டிமோதும் தலைவர்கள், மக்களின் பிரச்னைகளுக்காக எப்போது ஒன்றுசேர்ந்து போராடப் போகின்றனர்? தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, தலைவர் நாற்காலிக்கு பஞ்சாயத்து இன்னும் சூடுபிடிக்கும். இது கை கொடுக்குமா அல்லது கண்ணைக் குத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
