தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ போராட்டக்காரர்களுக்கு கிலுகிலுப்பை காட்டும் அரசு!

 போராட்டக்காரர்களுக்கு கிலுகிலுப்பை காட்டும் அரசு!

 போராட்டக்காரர்களுக்கு கிலுகிலுப்பை காட்டும் அரசு!


PUBLISHED ON : ஜன 16, 2026 01:50 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 16, 2026 01:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.சுப்புராமன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களை சேர்ந்தவர்கள், சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தாவிட்டால், காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருந்த, 'ஜாக்டோ- - ஜியோ' சங்கத்தினரை, தலைமை செயலகத்திற்கு வரவழைத்து, 'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்' என்ற பெயரில், அவர்களை ஏமாற்றி விட்டது, தி.மு.க., அரசு.

'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்' என்பதே, தேர்தல் நேரங்களில் கழகம் வழங்கும், 'டுபாக்கூர்' வாக்குறுதிகளுக்கு நிகரானது என்பதை புரிந்து கொள்ளாத புத்திசாலிகள், இந்த ஜாக்டோ - -ஜியோ சங்க நிர்வாகிகள்.

இதில், 2021 சட்டசபை தேர்தலின் போது கழகம் அளித்த தேர்தல் வாக்குறுதி, எண் 181 ஐ நிறைவேற்ற கோரி, தொடர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் , ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும்!

அரசியல் கட்சிகள், 'தேர்தல் வாக்குறுதிகள்' என்று சொல்வதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டாமா... அது, தேர்தலுக்கானதே தவிர, வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அமல்படுத்துவதற்கான உத்தரவாதம் அல்ல என்பது!

'தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மோசம் போகாதீர்கள்' என்று, இதைவிட பட்டவர்த்தனமாக எவராலும் கூற முடியுமா?

போராட்டம் எனும் அழுகையை நிறுத்த, அரசு உங்களுக்கு காட்டும் கிலுகிலுப்பை தான் தேர்தல் வாக்குறுதிகளே தவிர, அது உண்மை அல்ல!

எனவே, ஜாக்டோ - ஜியோவினர் மற்றும் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், அரசியல் கட்சிகள் அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி ஏமாறாமல், 2026 சட்டசபை தேர்தலிலாவது, ஆக்கப்பூர்வமான திட்டங்களை முன்னிறுத்துவோருக்கு ஓட்டளித்து வெற்றி பெறச்செய்யுங்கள்; அடுத்த தலைமுறைக்காவது நல்ல ஆட்சி கிடைக்கட்டும்!



மானிய விலையில் தரலாமே! ரா.கணபதிராமன், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.22 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா, 3,000 ரூபாய் ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி - சேலை வழங்கி வருகிறது, தமிழக அரசு.

அதேநேரம், பொங்கல் என்பது ஹிந்துக்கள் மட்டும் கொண்டாடும் பண் டிகை. ஆனால், 'சமத்துவம்' என்ற பெயரில், எல்லா மதத்தினருக்கும் பொங்கல் பரிசு வழங்குகின்றனர்.

சரி தான்... சிறுபான்மையினருக்கு கிடைக்காத ஒன்றை, ஹிந்துக்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்று திராவிட கட்சிகள் நினைத்திருக்கலாம்!

முன்பு, பொங்கல் பரிசுத் தொகுப்பில், பச்சரிசி, வெல்லம், நெய், முந்திரி பருப்பு வழங்கினர். இப்போது, பச்சரிசி, சீனி, கரும்பு மட்டுமே தருகின்றனர். பொங்கலில் வெல்லம் தான் போடுவரே தவிர, சர்க்கரையை போட மாட்டார்கள் என்பது திராவிட மாடல் அரசுக்கு தெரியாதா?

அதேபோன்று, கரும்புடன், மஞ்சள் குலையும் சேர்த்து வழங்க வேண்டும். அதுதான், முழுமையான பொங்கல் தொகுப்பாக இருக்க முடியும். பொருட்கள் கொடுப்பதில் ஊழல் செய்வர் என்றால், பணம் மட்டும் கொடுக்கலாமே!

இவை எல்லாவற்றையும் விட, மாநிலத்தின் பொருளாதாரம் தள்ளாட்டத்தில் இருக்கும் நிலையில், இலவசமாக கொடுப்பதற்கு பதில், மானிய விலையில் தரமான பொருட்களை ரேஷனில் தரலாமே!



அதிகாரிகளுக்கு எதற்கு சம்பளம்? கே.என்.சந்திரன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மதுரை மாநகராட்சி, துாய்மை பணியாளர்களை நேரடியாக வேலைக்கு அமர்த்தாமல், டெண்டர் வாயிலாக தனியார் கான்ட்ராக்டில் விட்டுள்ளனர். அவர்களோ, துாய்மை பணிகளை சரிவர செய்வதில்லை.

தினமும் வீடு தேடி குப்பை அள்ள வரவேண்டியவர்கள், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வருகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி, 'வாட்ஸாப்' எண் அல்லது குறை தீர்ப்பு மையம் வாயிலாக புகார் அளித்தால், அந்த தனியார் நிறுவனம் மிரட்டுகிறது.

கூடவே, மாநகராட்சி உயர் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் அழைத்து, 'இனிமேல் புகார் கொடுக்க வேண்டாம்' என, அவர்கள் பங்குக்கு மிரட்டுகின்றனர்.

மாநகராட்சி சுகாதார ஆய்வாளர், கவுன்சிலர், மேலதிகாரிகள் அனைவருமே, மாநகராட்சியின் மோசமான நிர்வாகத்தை ஒப்புக்கொள்கின்றனர்.

அதனால், பொதுமக்களுக்கு என்ன பயன்?

வரி வாங்குவதிலும், அபராதம் போடுவதிலும் அபார வேகம் காட்டும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு, வாங்கிய பணத்துக்கு வேலை பார்க்க தெரியாதா?

காலியிட வரி, சொத்து வரி என இரண்டு வரிகளையும், இரு அரையாண்டுக்கு, ஒரே நேரத்தில் வசூலிக்கின்றனர்.

ஒரு வரி மட்டும் வாங்கலாம் அல்லது ஆறு மாதத்துக்கு ஒருமுறை வாங்கலாம். ஆனால், இவர்கள் இரு அரையாண்டுக்கான காலியிடம் மற்றும் சொத்து வரியுடன், தாமத அபராதம் சேர்த்து வசூலிக்கின்றனர்.

மாநகராட்சியின் தாமதமான செயல்பாடுகளுக்கு கூட, பொதுமக்கள்தான் அபராதம் கட்ட வேண்டுமா?

முறையாக அபராதத்துடன் வரி வாங்கிய பின், அதற்கான சேவை எங்கே?

மாநகராட்சி நிர்ணயிக்கும் அத்தனை அடாவடி வரியையும் மக்கள் கட்ட வேண்டும். ஆனால், தினமும் குப்பை அள்ள வண்டி வராததையும், ஆட்கள் பற்றாக்குறையும் மக்கள் புரிந்து கொண்டு துர்நாற்றத்திற்குள் வசிக்க வேண்டுமா?

வேலை செய்யாத மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதற்கு அரசு கார், சம்பளம்?



புகைப்பழக்கம் மறையும்! ஆர்.ஹரிகோபி, புதுடில்லியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சிகரெட் மீது கூடுதல் வரி விதித்துள்ளது மத்திய அரசு.

இந்த சமயோசித வரிவிதிப்பால் உண்டாகும் விலையேற்றம், புகை பிடிப்பவர்களின் பட்ஜெட்டின் அடிமடியிலேயே கை வைத்துள்ளது.

இதனால், தினசரி உபயோகிக்கும் சிகரெட்டின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

சிகரெட்டின் விலை, புகைக்க நினைக்கும் இளைஞர்களை யோசிக்க வைக்கும். கூட்டிக் கழித்து பார்த்தால், இந்த வரிவிதிப்பு வரவேற்கத்தக்கதே!

இத்துடன் நின்று விடாமல், புகைப்பழக்கத்தால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து, சிறார்கள் மனதில் பதியும் வண்ணம் பள்ளிகளில் திரும்ப திரும்ப போதிக்க வேண்டும்.

வந்தபின் களைவதைக் காட்டிலும், வருமுன் காப்பதே எளிது!

அரசும், புகையின் விபரீதத்தை கருத்தில் வைத்து, அதன் உற்பத்தியை குறைக்கும் செயலில் ஈடுபட வேண்டும்.

புகையிலை வஸ்துகளை தீண்டத்தகாத பொருளாக எண்ணும் மனநிலை ஏற்பட்டாலே போதும்; இப்பழக்கம், மெல்ல மறைந்து போகும்!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us