தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ கற்றாரை கற்றோரே காமுறுவர்!

 கற்றாரை கற்றோரே காமுறுவர்!

 கற்றாரை கற்றோரே காமுறுவர்!


PUBLISHED ON : செப் 29, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 29, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: டில்லியில் உலக தலைவர்கள் பங்கேற்ற, 'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில், தமிழின் பெருமையை உலகறிய செய்த பிரதமர் மோடியின் செயல் நெகிழ வைத்தது.

உலகத் தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்ற போது, மேடையின் பின்னணியில், தமிழகத்தின் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலின் மூன்றாவது பிரகாரத்தின் புகைப்படம் பிரமாண்டமாக வைக்கப்பட்டிருந்தது. சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை வரவேற்ற போது, பிரதமர் மோடி அந்த பிரகாரத்தின் சிறப்பம்சங்களையும், அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினார். அதேபோன்று, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பை பரிசாக வழங்கினார்.

இதுமட்டுமல்ல... 2019ல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய போது கூட, கணியன் பூங்குன்றனாரின், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற புகழ்பெற்ற புறநானுாற்று வரிகளை மேற்கோள் காட்டித் தான் உரையை துவக்கினார், பிரதமர் மோடி.

வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம், 'உலகிலேயே மிகத் தொன்மையான தமிழ் மொழி, எங்கள் நாட்டில் உள்ளது' என்று உலகத் தலைவர்கள் மத்தியில் தொடர்ந்து பெருமையுடன் குறிப்பிட்டு வருகிறார்.

வட மற்றும் தென்மாநிலங்களுக்கு இடையிலான கலாசார மற்றும் ஆன்மிகப் பிணைப்பை வலுப்படுத்த, தன் சொந்தத் தொகுதியான உ.பி.,யில் உள்ள வாரணாசியில், 'காசி தமிழ் சங்கமம்' என்ற மாபெரும் நிகழ்வை நடத்தினார்.

வாரணாசி பள்ளிகளில், 'தமிழ் கற்கலாம்' என்ற பிரசாரத்தின் வாயிலாக, பிற மாநில மாணவர்களிடையேயும் தமிழ் மொழியை படிக்க ஊக்கப்படுத்தியுள்ளார்.

இப்படி, எப்போதும் தமிழை உயர்த்தி பேசும் பிரதமர் மோடியை தான், தமிழகத்தில் உள்ள ஒரு கூட்டம், அவரை தமிழுக்கு எதிரி என்பது போல் சித்தரிக்கிறது.

தமிழ் மொழிக் காவலர்கள் போல் வேடமிடும் இக்கும்பல், இதுவரை, தமிழ் வளர்ச்சிக்காக சிறு செங்கல்லைக் கூட எடுத்து வைத்ததில்லை. ஆனாலும், தமிழை வைத்து பிழைப்பு நடத்த, 'ஹிந்தி மொழியை படித்தால், தமிழ் அழிந்து விடும்' என்று கூறி, மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை எதிர்க்கிறது!

உத்தர பிரதேசம், அசாம், டில்லி, மே.வங்கம், ஹரியானா போன்ற மாநிலங்களில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. அங்கெல்லாம், அம்மாநில மொழிகள் அழிந்து, தமிழ் கோலோச்சுகிறதா என்ன?

கற்றாரை கற்றார் தான் காமுறுவர்; அதுபோன்று, கல்வியின் அவசியமும், மொழியின் சிறப்பும் அதை முறையாக கற்றவர்கள் தான் அறிவரே தவிர, ஆட்சி அதிகாரத்திற்காக போலி வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றும் சுயநல அரசியல்வாதிகளால் அல்ல!

-----

அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்!



பழ.சுந்தரமூர்த்தி, கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சமீபத்தில் குடும்பத்துடன் சென்றிருந்தேன். விடுமுறை தினம் என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தரிசனத்திற்காக பொது வழியும், கட்டண தரிசனத்திற்காக தனி வழியையும் ஏற்படுத்தி இருந்தனர். கட்டணம் செலுத்தி வழிபாட்டுக்கு செல்வோரிடம், மேலும், 20 ரூபாய் பெற்று, 'கோடி அர்ச்சனை' என பதிவிட்ட கட்டணச் சீட்டு வழங்கி, அவர்களை ஒரு மண்டபத்தின் வழியாக உள்ளே செல்ல அனுமதித்தனர்.

அந்த மண்டபத்தில் ஒரு மின்விசிறி கூட இல்லை. மஹா மண்டபத்திற்குள் நுழையும் இடத்தில் மட்டும் ஒரு மின்விசிறி இருந்தது; ஆனால், அதுவும் வேலை செய்யவில்லை.

இதனால், வெயிலின் தாக்கத்தால் வரிசையில் நின்றிருந்தவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாயினர்; குழந்தைகள் அழ ஆரம்பித்தனர்.

ஒருபுறம் கடுமையான வெயில்; மறுபுறம் குழந்தைகளின் அழுகை என, ஒரே அவஸ்தை!

இதில், கோடி அர்ச்சனை என்ற பெயரில், 20 ரூபாய் வசூலித்தனரே தவிர, அதுபோன்று எந்த அர்ச்சனையும் நடைபெறவில்லை.

இதுகுறித்து புகார் அளிக்க கோவில் அலுவலகத்திற்கு சென்றால், அங்கிருந்த அலுவலர் சொகுசாக மின்விசிறிக்கு கீழே அமர்ந்து மொபைல் போனில் பேசுகிறார், பேசுகிறார்... பேசிக் கொண்டே இருக் கிறார்; எங்களை கண்டு கொள்ளவே இல்லை.

வேறு வழியில்லாமல் நாங்களாகவே, 'நீங்கள் மின்விசிறிக்கு கீழே அமர்ந்து சுகமாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அங்கோ, பக்தர்கள் குழந்தைகளுடன் வெயிலில் கஷ்டப்படுகின்றனர். தயவு செய்து அங்கே ஒரு மின்விசிறி அமைக்க நடவடிக்கை எடுங்கள்' என்றோம்.

'உங்கள் புகாரை மட்டும் சொல்லிவிட்டு போங்கள்; அதைவிடுத்து, நான் மின் விசிறியின் கீழ் அமர்ந்திருப்பதை பற்றி பேச உங்களுக்கு எந்த, 'ரைட்ஸ்'சும் கிடையாது' எனக் கடுமையாக பேசி எங்களை அனுப்பிவிட்டார்.

கடந்த ஆட்சியில் தான் இதுபோன்று அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொண்டனர் என்றால், புதிய ஆட்சியிலும் அது தொடர்வது வேதனையாக இருக்கிறது.

இதேபோன்று தான், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலில், கார் நுழைவு கட்டணமாக, 25 ரூபாய் வசூல் செய்கின்றனர். ஆனால், கட்டண விபரங்கள் அடங்கிய எந்த அறிவிப்பு பலகையும் இல்லை.

பொதுவாக, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், கையடக்க வடிவில் உள்ள மின்னணு சாதனத்தின் வாயிலாக சீட்டு வழங்கி, கட்டணத் தொகையை வசூல் செய்வர். ஆனால், இங்கோ அச்சடிக்கப்பட்ட துண்டு சீட்டை தந்து கட்டணம் வசூலிக்கின்றனர்.

இதுவும் ஒரு வகையில் கையாடல் தானே?

அறநிலையத் துறை அமைச்சர் இதுபோன்ற விஷயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

-----

ஏரியின் மீது விமான நிலையம் அமைக்கலாமே!



வி.ராஜகோபாலன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பரந்துார் விமான நிலைய திட்டத்தை கைவிட்டு விட்டது, தமிழக அரசு. ஆனாலும், சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியம் தேவை.

தற்போது, விஞ்ஞானம் வெகுவாக முன்னேறி வருகிறது. கடலில் நீண்ட துாரத்திற்கு ரயில், சாலை பாலங்கள் அமைப்பதை காண்கிறோம். அதுபோல், செம்பரம்பாக்கம் ஏரியின் மீது விமான ஓடுபாதை அமைக்கலாம்; ஏரியின் நீர்வரத்து பகுதிகளை சுற்றி சுவர் அமைத்து பாதுகாக்கலாம்.

இதற்காக நிலம் கையகப்படுத்தும் வேலை இல்லை; செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகில் தான் ஹூண்டாய் கார் கம்பெனி உள்ளது. ஹூண்டாய் ஹெவி இஞ்சினியரிங் கம்பெனி வாயிலாகவே, ஒப்பந்த முறையில் இதை நிறைவேற்றலாம்.

செம்பரம்பாக்கம் ஏரியின் இடம் போதாது என்றால், மதுராந்தகம் ஏரியை கூட பரிசீலிக்கலாமே!


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us