sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

 போராடி பொழுதுபோக்க அடுத்த திட்டம் ரெடி!

/

 போராடி பொழுதுபோக்க அடுத்த திட்டம் ரெடி!

 போராடி பொழுதுபோக்க அடுத்த திட்டம் ரெடி!

 போராடி பொழுதுபோக்க அடுத்த திட்டம் ரெடி!


PUBLISHED ON : நவ 26, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 26, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.சந்திரமவுலி, திருவண்ணாமலையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் போராட்டம் தொடரும். சட்ட முன்வடிவுகள் மீது முடிவெடுக்க கவர்னருக்கு காலக்கெடு விதிக்கும் வகையில், அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை ஓய மாட்டோம்' என சூளுரைத்துள்ளார், முதல்வர் ஸ்டாலின்.

ஒரு வகுப்பை கண்காணித்து கட்டுப்பாட்டில் வைக்க, மாணவர்களில் ஒருவரை வகுப்பு தலைவனாக நிறுத்துவது போல், ஒரு பஞ்சாயத்தை நிர்வகிக்க, பஞ்சாயத்து தலைவரையும், மாநில நிர்வாகத்தை கன்ட்ரோல் செய்ய கவர்னரையும் அரசியல் நிர்ணய சட்டம் அனுமதித்துள்ளது.

ஆனால், தி.மு.க.,வை பொறுத்தவரை, மக்கள் ஓட்டளித்து அவர்களை தேர்ந்தெடுத்து விட்டால், மாநில நிர்வாகம் மட்டுமல்ல, உலகமே அவர்கள் கண்ணசைவுக்கு ஏற்ப ஆட வேண்டும் என்று நினைக்கிறது.

அதன்படி, திராவிட மாடல் அரசு அனுப்பும் அத்தனை மசோதாக்களிலும், கண்ணை மூடி கவர்னர் கையெழுத்திட வேண்டும் என்று எதிர்பார்க்கிறது!

அதன் வெளிப்பாடுதான், 'ஓயமாட்டோம், உறங்க மாட்டோம், சட்டப்போராட்டம் தொடரும்' என்ற அறைகூவலும், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை, 'இது தீர்ப்பு அல்ல; கருத்து' என்று விமர்சிப்பதற்கும் காரணம்.

தி.மு.க.,வினருக்கு என்று சில கல்யாண குணங்கள் உண்டு.

அதில் முக்கியமானது போராட்டமும், பொழுதுபோக்கும்!

ஆட்சியில் இருந்தால், தினசரி மாலையில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்று அறிவிப்புகளை வெளியிடுவதும், பேச்சாளர்களை வைத்து ஆட்சியாளர்களை இந்திரன், சந்திரன், சூரியன், சுக்கிரன் என்று புகழ்பாட வைப்பதும், ஆட்சியில் இல்லாவிட்டால், தம்பிடிக்கு பிரயோஜனமில்லாத காரணத்தை முன்வைத்து போராட்டம், ஊர்வலம் நடத்தி பொழுது போக்குவது வழக்கம் .

அவ்வகையில், 2016 முதல் 2021 வரை தி.மு.க.,வின் கைகளில் மாட்டிக் கொண்டு முழித்தது, நீட் தேர்வும், பூரண மதுவிலக்கும்!

அந்த இரண்டு விஷயங்களை முன்னிறுத்தி, எத்தனை விதமான நாடகங்களை தி.மு.க.,வினர் அரங்கேற்றினர் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

அதேநேரம், ஆட்சியில் அமர்ந்தபின், அதுகுறித்து பேச்சு மூச்சை காணோம்.

அதுபோல், வரும் தேர்தலில் தி.மு.க., தோல்வி அடையும் பட்சத்தில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான செயல் திட்டம் இப ் போதே அவர்களுக்கு கிடைத்து விட்டது.

அதுதான், 'கவர்னருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை சட்டப்போராட்டம்' என்ற திட்டம்!

கழகத்தின் நீட் தேர்வு ஒழிப்பு போராட்டங்களால் சில அப்பாவிகளின் உயிர்கள் பலியாயின.

அடுத்து, 2026- - 31 வரை நடக்க இருக்கும் போராட்டம், எத்தனை உயிர்களை காவு வாங்க போகிறதோ... கழகத்திற்கே வெளிச்சம்!

lll

சிதறி கிடந்தால் வெற்றி கிடைக்குமா? ம.பாலசுந்தரம், தாசில்தார் (பணி நிறைவு), பெரியகுளத்திலிருந்து எழுதுகிறார்: பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணி அநேக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்துள்ளது. இது, பிரதமர் மோடிக்கும், பீஹார் முதல்வர் நிதிஷ்குமா ருக்கும் கிடைத்த வெற்றி.

அதேபோன்றதொரு வெற்றியை எதிர்பார்த்து பகல் கனவு காண்கிறார், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி.

எப்படி நடக்கும்?

பீஹாரில் 2020ல் நடந்த சட்டசபை தேர்தலில், தங்களின் பரம பகையாளியான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைக்க மறுத்து, பா.ஜ., போட்டியிட்ட, 110 தொகுதிகளை தவிர்த்து, 133 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது, சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி.

அந்த தேர்தலில் லோக் ஜனசக்தி, 1 தொகுதியில் தான் வென்றது என்றாலும், 34 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளத்தின் தோல்விக்கு காரணமாக இருந்தது.

அதனால் தான், தற்போது நடந்த சட்டசபை தேர்தலில், சிராக் பஸ்வானை சமாதானப்படுத்தி, நிதிஷ் குமாருக்கும் எடுத்துக்கூறி, இரண்டு கட்சிகளையும் ஒருங்கிணைத்தது பா.ஜ.,

தற்போது, பீஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது என்றால், அதற்கு காரணம், இரு துருவங்களாக இருந்த நிதிஷ் குமாரும், சிராக் பஸ்வானும் இணைந்து களம் கண்டதால் தான்!

ஆனால், அ.தி.மு.க.,வில் என்ன நடக்கிறது... பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க பா.ஜ., எடுக்கும் முயற்சிகளை எல்லாம் புறம் தள்ளிக்கொண்டு இருக்கிறார் பழனிசாமி.

அ.தி.மு.க.,வின் ஓட்டுகள், தொகுதி மற்றும் ஜாதிவாரியாக பிரிந்து கிடக்கையில், பீஹார் போன்ற வெற்றி தமிழகத்தில் எப்படி கிடைக்கும்?

கடந்த, 2019ல் இருந்து நடந்த அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க., தோல்வி அடைந்துள்ள நிலையில், தற்போது, முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் செங்கோட்டையனையும், அவரது ஆதரவாளர்களையும் கட்சியிலிருந்து நீக்கியாகி விட்டது.

இப்படி ஒவ்வொரு செங்கலாக உருவிக் கொண்டிருந்தால், அ.தி.மு.க., என்ற கட்டடம் எப்படி ஸ்டராங்காக இருக்கும்?

பீஹார் போன்ற வெற்றியை பழனிசாமி சுவைக்க வேண்டும் என்றால், பிரிந்து சென்ற அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வாக இணைந்து, கூட்டணி கட்சிகளை அரவணைத்து தேர்தலை சந்தித்தால் தான், வரும் சட்டசபை தேர்தல் பழனிசாமிக்கு வெற்றியை தரும்!

lll

பீஹாரை மறந்து விட வேண்டாம்! குரு பங்கஜி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஊழலால் சீர்குலைந்த அரசு நிர்வாகம், சுரண்டப்படும் இயற்கை வளம், பெருக்கெடுத்து ஓடும் டாஸ்மாக் மதுபானம், அன்றாடம் நிகழும் கொலை, கொள்ளைகளால் தடுமாறும் சட்டம் - ஒழுங்கு என, மாநிலத்தை தலைகுனிய வைத்துக் கொண்டிருக்கும் கட்சி தி.மு.க.,

இக்கட்சியின் தென்காசி மாவட்ட செயலர் ஜெயபாலன், பிரதமர் மோடியை தீர்த்து கட்டினால் தான், தமிழகம் நன்றாக இருக்கும் என்று பேசியுள்ளார்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனை கடித்த கதைபோல், உள்ளூரில் மிரட்டல் செய்து பிழைப்பு நடத்தும் தி.மு.க., உடன்பிறப்பு ஒன்று, இப்போது, ஒரு நாட்டின் பிரதமருக்கே மிரட்டல் விடுத்துள்ளது.

அதை, இங்குள்ள காவல் துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. தன் கட்சிக்காரர் என்பதால், கண்டிக்க வேண்டிய முதல்வரோ மவுனம் காக்கிறார்.

அரசியலமைப்பு சட்டப்படி ஆட்சி நடத்தும் முதல்வர் என்றால், ஜெயபாலனை ஜாமினில் வெளிவர முடியாதபடி கைது செய்து சிறையில் அல்லவா அடைத்திருக்க வேண்டும்!

இப்படித்தான், 1990 களில் பீஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா கட்சி தலைவர் லாலு பிரசாத்தின் ஆட்சியில், அக்கட்சி குண்டர்கள் பொதுமக்களை மிரட்டி, அடித்து, கொலை செய்து என்று அராஜகத்தில் ஈடுபட்டனர். இப்போது, அக்கட்சி அங்கு கோமா நிலையில் உள்ளது.

பீஹார் மக்களைப் போன்று, தமிழக மக்களும் வரும் சட்டசபை தேர்தலில் இது போன்ற, அரசியல் ரவுடிகளை ஓட்டு எனும் ஆயுதத்தால் தீர்த்து கட்டி, அரசியலை விட்டு அப்புறப்படுத்த வேண்டும்!

அப்போது தான் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கும்!

lll






      Dinamalar
      Follow us