sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

பரமார்த்த குருவும், அவரது சீடர்களும்!

/

பரமார்த்த குருவும், அவரது சீடர்களும்!

பரமார்த்த குருவும், அவரது சீடர்களும்!

பரமார்த்த குருவும், அவரது சீடர்களும்!


PUBLISHED ON : ஆக 28, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 28, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.ராஜா ரகுராமன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, பார்லிமென்டில், 'இம்பீச்மென்ட்' எனப்படும், பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர, 'இண்டியா' கூட்டணி ஆலோசித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், நடத்தை விதி மீறலைக் காரணம் காட்டி பார்லிமென்டில் அவர் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தாலும், லோக்சபா மற்றும் ராஜ்ய சபா என இரு சபைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.,க்கள் ஆதரவு இருந்தால் தான், ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய முடியும். அதற்கு தேவையான பலம் எதிர்க்கட்சிகளிடம் இல்லை.

ஆனாலும், பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர துடிக்கின்றனர்.

இதற்கிடையே, ஆடிக்காற்றில் அம்மியே பறந்து கொண்டிருக்கும் போது, இலவம் பஞ்சான ஸ்டாலின் தன் இருப்பையும் வெளிக்காட்டி கொள்ள, தேர்தல் ஆணையத்துக்கு ஏழு கேள்விகளை கேட்டுள்ளார்.

அதற்கு தகுந்த பதிலை அளித்துள்ள தேர்தல் ஆணையம், 'இறந்து போனவர்கள், வெளி மாநிலங்களுக்கு குடி பெயர்ந்தோர் பெயர்கள் பீஹார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஆனால், நீங்களோ நீக்கியதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, நாங்கள் கூறுவோரையும் நீக்குங்கள் என்றும் கூறுகிறீர்கள். உங்கள் செயல்பாடே குழப்பமாக உள்ளதே...' என்று நெத்தியடியாய் பதில் அளித்துள்ளது.

எதையும் ஆழமாக யோசிக்காமல், எழுதி நீட்டுவோரின் காகிதங்களில் எல்லாம், கண்ணை மூடி கொண்டு கையெழுத்திட்டு அனுப்பினால், இப்படித்தான் வாங்கி கட்ட வேண்டும்!

ஒருபுறம் தேர்தல் கமிஷனரை பதவி நீக்கம் செய்ய போதுமான, எம்.பி.,க்கள் இல்லை; ஆனாலும், இண்டியா கூட்டணியினர் தீர்மானம் போடுகின்றனர்.

மறுபுறம், எதுவும் புரியாமல் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்டு, மூக்குடைபடுகிறது, தி.மு.க.,!

ஆக மொத்தம் இண்டியா கூட்டணியினரைப் பார்க்கும்போது, பரமார்த்த குருவும், அவரது அதி புத்திசாலி சீடர்களும் தான் நினைவுக்கு வருகின்றனர்!



அரசு யோசிக்குமா? ரா.ஷண்முகசுந்தரம், அவி நாசி, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருப்பூர், அவிநாசி பேருந்து நிலையம் அருகே, காலை 8:30 மணி க்கு பின், 'அண்ணா... ஸ்கூலுக்கு லேட்டாச்சு... லிப்ட் குடுங்க!' என்றும், 'அண்ணா... பஸ் வரல... போற வழியில இறக்கி விடுறீங்களா... ப்ளீஸ்' என்றும், 'பஸ்ல பயங்கர கூட்டம்; கால் வைக்க கூட இடமில்ல. நீங்க போற வழியில நான் இறங்கிக்கவா?' என்று கெஞ்சும் மாணவ - மாணவியரின் குரலை அதிகமாக கேட்கலாம்.

அவிநாசியில் மட்டுமல்ல; தமிழகத்தின் பல இடங்களிலும் இதே நிலைதான்.

காலை வேளையில், அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்குச் செல்லும் ஏழை - நடுத்தர குடும்பத்து மாணவர்கள் படும்பாடு, சொல்லிமாளாது.

அரசுப் பேருந்துகள் குறித்த நேரத்தில் வருவதில்லை. அப்படியே வந்தாலும் கால் வைக்க கூட இடமில்லாத அளவு பயணியர் கூட்டம்.

இதனால், பள்ளி செல்ல தாமதமாகி விடக் கூடாதே என்ற பதற்றத்தில், அவ்வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம், 'லிப்ட்' கேட்டு கெஞ்சுகின்றனர், மாணவ - மாணவியர்.

இதை காணும் எவருக்கும் மனம் கலங்கித்தான் போகும்!

'வானத்தை வில்லாக வளைத்து, மேகத்தில் பஞ்சு மெத்தை போட்டு மக்களை துாங்க வைப்போம்' என்ற ரீதியில், தேர்தல் அறிக்கைகள் விடும் ஆளும் அரசுக்கும், பிரதான எதிர்க்கட்சிக்கும் இந்த ஏழை மாணவர்களின் அடிப்படை பிரச்னை மட்டும் காதுக்கு எட்டாமல் போனதன் மர்மம் என்ன?

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் கொடுத்தால் மட்டும் போதுமா... அவர்கள் பள்ளி செல்ல போதுமான பேருந்துகள் வேண்டாமா?

திட்டங்கள் போட்டால் மட்டும் போதாது; அதை குறை சொல்ல முடியாத அளவிற்கு செயல்படுத்தி காட்ட வேண்டும். அதில் தான், ஆட்சியாளர் களின் நிர்வாகத் திறன் அடங்கியுள்ளது.

காலை நேரம், கூலித் தொழிலாளிகள், அலுவலகம் செல்வோர் என, அனைத்து பேருந்துகளுமே நிரம்பி வழிந்தபடி தான் வரும். அக்கூட்டத்திற்குள் சிறு மாணவர்கள் முண்டி அடித்து நுழைந்து, நசுங்கி... பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கிறது.

ஏழை வீட்டில் பிறந்தால், இப்படித் தான் அனைத்திற்கும் அல்லல்பட வேண்டுமா? பின் எதற்கு அரசு உள்ளது?

பள்ளிகளில் காலை - மதிய உணவு, இலவசமாக புத்தகம் என்று வசதிகள் செய்து கொடுத்தால் மட்டும் போதாது; அதை உண்பதற்கும், கற்பதற்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும். அதற்கு அவர்கள் சுலபமாக பள்ளி வந்து செல்ல, பேருந்து வசதி இருக்க வேண்டும்.

எத்தனையோ திட்டத்தை அறிவிக்கும் தமிழக அரசு, மாணவர்களுக்கு பேருந்து வசதி செய்து தரும் திட்டத்தையும் கொண்டு வரலாம். மாணவர்களுக்கு இலவசமாக பேருந்தை இயக்காவிட்டாலும், குறைந்த கட்டணத்தில் இயக்கலாம்.

இதனால், லட்சக்கணக்கான ஏழைப் பெற்றோர், தங்கள் பிள்ளைகள் பத்திரமாக பள்ளி சென்று வருவர் என்று நிம்மதி அடைவர்.

அரசு யோசிக்குமா?



தமிழா, தெலுங்கா எந்த பக்கம் தி.மு.க.,? வி.எச்.கே.ஹரிஹரன், திண்டு கல்லி லிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: துணை ஜனாதிபதி வேட்பாளராக மஹாராஷ்டிரா கவர்னர் ராதாகிருஷ்ணனை அறிவித்துள்ளது, தேசிய ஜனநாயக கூட்டணி.

இதை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டர்.

கடந்த 1999ல் பார்லிமென்ட் தேர்தலில், கோவை தொகுதியில், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லக்கண்ணுவை வென்ற ராதாகிருஷ்ணன், கட்சி பேதம் பாராமல், வெற்றி சான்றிதழை நல்லகண்ணுவிடம் நேரில் கொடுத்து ஆசி பெற்றார். அந்த அளவு அரசியல் பண்பு மிக்கவர்.

அவர் துணை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளது, தி.மு.க.,விற்கு தான் தர்ம சங்கடம். ஏனெனில், 'தமிழனை ஆதரிக்கிறீர்களா, இல்லையா' என்று வேதாளம், விக்கிரமாதித்தனிடம் கேட்பது போல், பா.ஜ., - தி.மு.க.,விடம் கேட்கும். தி.மு.க.,வோ இல்லை என்று சொல்லவும் முடியாது; 'ஆம்' என்று ஆமோதிக்கவும் முடியாது.

அதேநேரம், கம்பும் உடையாமல், பாம்பும் சாகாமல் அடிக்க கடைந்தெடுத்த அரசியல்வாதிகள் இருக்கும் 'இண்டியா' கூட்டணிக்கு தெரியாதா, அரசியல் சதுரங்கத்தில் எப்படி காய் நகர்த்துவது என்று?

இதோ... பா.ஜ., கூட்டணி கட்சியான, தெலுங்கு தேச கட்சி தலைவரான சந்திரபாபுவிற்கு, 'செக்' வைப்பது போல், தெலுங்கானாவைச் சேர்ந்த முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டியை துணை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்து விட்டனர், இண்டியா கூட்டணியினர்.

பா.ஜ., தலைமை ஸ்டாலினுக்கு, 'செக்' வைத்தது; இண்டியா கூட்டணியினர் சந்திரபாபுவிற்கு, 'செக்' வைத்துள்ளனர்.

இந்த சதுரங்கத்தில் ஸ்டாலின் தமிழகம் பக்கம் இருப்பாரா அல்லது இன பாசத்தில் தெலுங்கானா பக்கம் சாய்வாரா என்பது செப்., 9ல் தெரிந்து விடும்!








      Dinamalar
      Follow us