PUBLISHED ON : நவ 02, 2025 12:00 AM

ரா.தங்கசாமி, நெல்லையில் இருந்து எழுதுகிறார்: ஏழை - பணக்காரர் என்பது போல், உலகில் ஏதோ ஒருவகையில் ஏற்றதாழ்வுகள் இருக்கவே செய்கின்றன. இதற்கு எந்த நாடும், மதமும் விதிவிலக்கு அல்ல.
ஆனால், என்னமோ ஹிந்துக்களிடம் தான் ஜாதி வேற்றுமைகள் இருப்பது போலவும், அதை அழித்தே தீருவோம் என்ற ரீதியிலும் ஜாதி ஒழிப்பு என்ற பெயரில், தி.மு.க., அரசியல் சதிராட்டம் ஆடுகிறது.
ஜாதி பெயர்களில் எத்தனையோ ஊர்கள் உள்ளன. தேவர் குளம், பெத்த நாயக்கன் பாளையம், பெத்த நாடார் பட்டி, செட்டியார் பட்டி, முதலியார் பட்டி, ரெட்டியார் பட்டி, இடையன்குளம் என, இப்படி எத்தனையோ ஊர்கள் ஜாதி பெயர்களை தாங்கியுள்ளன.
அதிலுள்ள ஜாதியை மட்டும் நீக்கிவிட்டால், அவ்வூர்களில் வாழும் மக்கள் ஜாதி பாகுபாடுகள் நீங்கி, சமத்துவ கொடி ஏந்தி விடுவரா?
இப்படித்தான், முன்னாள் தமிழக முதல்வரும், இந்தியாவின் கடைசி கவர்னருமான மூதறிஞர் ராஜாஜியின் பெயரை, துாய தமிழில் கூறுவதாக ராசாசி என்கின்றனர். ஏன் ஸ்டாலின் பெயரை சுடாலின் என்று சொல்ல வேண்டியது தானே?
'ஸ்'மட்டும் தமிழ் எழுத்தா?
அதேபோன்று, காங்., கட்சியை சேர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஓமந்துார் ராமசாமி ரெட்டியாரை, அவர் ஜாதிப் பெயரை தவிர்ப்பதாக கூறி, ஓமந்துாரார் என்றே அழைக்கின்றனர்.
வரலாற்று தலைவர்களின் பெயர்களை மறக்கடிக்கவும், பட்டியலின மக்களின் ஓட்டுகளை பெறவும் தி.மு.க., கையாளும் யுக்தி இது!
'கனவில் கண்ட பணம் கைச்செலவிற்கு உதவாது' என்பது போல், பெயர் பலகைகளில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்குவதால், சமத்துவமும் தழைத்து விடாது; தி.மு.க.,வின் ஓட்டு வங்கியும் உயர்ந்து விடாது!
lll
தேர்தலை தி.மு.க., புறக்கணிக்குமா? ரா.செந்தில்முருகன், திருப்பூரில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தல் கமிஷன் மேற்கொள்ளும்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை, முதல்வர் ஸ்டாலின்
கடுமையாக எதிர்த்துள்ளார். சிறுபான்மையினர், பெண்கள் ஓட்டுகளை தேர்தல்
கமிஷன் நீக்கி மோசடி செய்துவிடும் என்று அதற்கு காரணமும் கூறுகிறார்.
அவரது உடன்பிறவா சகோதரரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்,
பா.ஜ.,வை எதிர்க்க எடுத்த அதே ஆயுதத்தை, ஸ்டாலினும் எடுத்துள்ளார்.
அதேநேரம், தமிழக தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள அர்ச்சனா பட்நாயக்,
தமிழக கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. அத்துடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல்
நடத்தும் அலுவலர்கள், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தான். இவர்கள், ஆளும்
தி.மு.க., அரசால் நியமிக்கப்பட்டவர்கள்.
வீடுவீடாக சென்று, வாக்காளர் பட்டியலில் திருத்தப்பணியில் ஈடுபடுவோர் அரசு பள்ளி ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள்.
இவர்களில் கணிசமானவர்கள் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் ஆதரவு சங்கங்களில் இருப்பவர்கள்.
இதற்கான டேட்டா என்ட்ரி போன்ற பணிகளை செய்யவும், ஆளும் தி.மு.க., அரசு தான் ஊழியர்களை நியமிக்கப்போகிறது.
இந்திய தலைமை தேர்தல் கமிஷனின் நேரடி பணியாளர்கள் என்று எவரும் இல்லாத
நிலையில், அரசியல் கட்சி ஏஜென்ட்டுகளின் கண்காணிப்பில், தமிழக அரசு
ஊழியர்களால் நடத்தப்படும் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்
பணிகளில் எப்படி மோசடி செய்ய முடியும்... முதல்வர் விளக்குவாரா?
எதிர்க்கட்சிகளின் கூற்றுப்படி, தேர்தல் கமிஷன் மோசடியில் ஈடுபடுகிறது
என்பது உண்மையானால், தி.மு.க., - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரும்
சட்டசபை தேர்தலை புறக்கணிக்குமா?
கேட்கிறவன் கேனையனாக இருந்தால், எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டுமாம்... அதுபோன்று இருக்கிறது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு!
lll
வாக்கு சுத்தம் வேண்டாமா முதல்வருக்கு? க.அருச்சுனன்,
செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த, 2023 மே 17
அன்று, தமிழக முதல்வர் வெளியிட்ட பத்திரிகை செய்தியில், அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்களுக்கு, 2023 ஏப்., 1 முதல் அகவிலைப்படி உயர்வு, 38லிருந்து, 42
சதவீதமாக உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டிருந்தது.
மேலும்,
'எதிர்வரும் காலங்களில் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்
போதெல்லாம், அதை பின்பற்றி, தமிழக அரசும், அரசு அலுவலர் மற்றும்
ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை செயல்படுத்தும்' என்று
அறிவித்திருந்தார், முதல்வர் ஸ்டாலின்.
அதன்படி இதுவரை
அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில், 2025 ஜூலை1 முதல் மத்திய அரசு
வழங்கிய அகவிலைப்படி உயர்வை, தமிழக அரசு தற்போது கண்டு கொள்ளவில்லை.
தீபாவளிக்கு அறிவிப்பு வெளியாகும் என்று காத்திருந்தும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. கொடுத்த வாக்கை மறந்து விட்டார் முதல்வர்.
இதேபோன்று தான், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், ஊதிய உயர்வு தொடர்பான
அரசாணையை அமல்படுத்தவும், காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், அரசு
டாக்டர்களுக்கான கூட் டமைப்பு சார்பில், 2019 அக்., 25ம் தேதி முதல்,
டாக்டர்கள் சிலர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் சாகும்
வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
அப்போதைய எதிர்க்கட்சித்
தலைவரான ஸ்டாலின், டாக்டர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து,
'தி.மு.க., ஆட்சியில் கருணாநிதி வெளியிட்ட அரசாணையை அமல்படுத்த தானே
போராடுகிறீர்கள்... இந்த ஆட்சியில் நடைமுறைப்படுத்த மாட்டார்கள்; அடுத்து,
தி.மு.க., ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றி தருகிறேன்...' என்று வாக்குறுதி
அளித்தார்.
ஆனால், தி.மு.க., ஆட்சி அமைந்து நான்கு ஆண்டுகளை
கடந்தும், கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை முதல்வர். இப்போது வரை
டாக்டர்கள் அதே கோரிக்கையை வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர்.
மேலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓட்டுகளையும், தேர்தலின் போது
அவர்கள், 'தயவை' பெறவும், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பழைய பென்ஷன்
திட்டத்தை அமல் படுத்துவோம் என்றும் வாக்குறுதி கொடுத்தார்.
இப்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், டாக்டர்களுக்கு மட்டுமின்றி தமிழக
மக்களுக்கும் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து விட்டு, இப்போது, அது
குறித்து கேட்டால், கள்ள மவுனம் சாதிக்கிறார்.
ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு வாக்குச் சுத்தம் வேண்டாமா?
lll

