sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லை!

/

நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லை!

நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லை!

நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லை!

2


PUBLISHED ON : ஜன 29, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 29, 2025 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.சுகுமாறன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், நீதிமன்றம் கொடுக்கும் தீர்ப்புகளை அப்பாவி பொதுமக்களை தவிர, அரசியல் கட்சியினரோ, வியாபாரிகளோ கொஞ்சமும் மதிப்பதும் இல்லை; அவற்றை பொருட்படுத்துவதும் இல்லை என்பதை சற்று கூர்ந்து கவனித்தால் உணர முடியும்.

மதுரை விளாங்குடி, பழங்காநத்தம் ரவுண்டானா அருகே, அ.தி.மு.க., கொடிக் கம்பம் நட அனுமதி கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு, நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, 'பொது இடங்களில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கொடிக் கம்பங்களை, 12 வாரங்களில் அகற்ற வேண்டும். தவறினால் அரசே அகற்றி, அதற்குரிய செலவு தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதன்படி, 12 வாரங்களுக்கு பின், அதாவது வரும் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பின், எத்தனை கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன என்று கவனித்து பாருங்கள்... ஒரு கொடிக்கம்பம் கூட அகற்றப்பட்டிருக்காது!

சென்னையில், பிராட்வே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் உள்ள பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் பகுதி பிளாட்பாரங்களில், கடை வைக்க கூடாது என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, அப்பகுதியில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், அந்த பலகைக்கு கீழ், கோவிந்தப்ப நாயக்கன் தெரு முனையில் இருந்து, பிரகாசம் சாலை சந்திப்பு வரை பிளாட்பாரத்தில் கடைகளை பரப்பி, இன்றும் வியாபாரம் செய்து கொண்டு இருக்கின்றனர், வியாபாரிகள்.

அரசியல் கட்சியினர் வைக்கும் பிளக்ஸ் பேனர்கள், வாகன ஓட்டிகள் மீது சரிந்து விழுந்து, உயிரிழப்பு நேரிடும்போது, பேனர்கள் வைக்க தடை விதித்து நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்றன.

அதை, எந்த அரசியல் கட்சியும் மதிப்பது இல்லை; 'நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது' என்ற அகம்பாவத்தில், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள சாலைகளில் கூட பேனர்கள் வைக்கின்றனர்.

அரசியல் கட்சியினர் மட்டுமல்ல; விளம்பர நிறுவனங்களும் நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதில்லை.

வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்து, விபத்தை ஏற்படுத்தும் வகையில், விளம்பர பலகை வைக்கக் கூடாது என்று, நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், விளம்பர பேனர்களின் எண்ணிக்கை கூடுகிறதே தவிர, குறையவில்லை.

நீதிமன்ற உத்தரவின் மீது அவ்வளவு மரியாதை!



ஆண்டவனாலும் தடுக்க முடியாது!


ஆர்.மகேசன், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'மத்திய நிதிக் குழு நிர்ணயித்ததை விட குறைவாகத் தான் கடன் பெற்றுள்ளோம்' என்று பெருமைபட்டுள்ளார், தமிழக நிதி அமைச்சர்தங்கம் தென்னரசு.

'தலைகுப்புற விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை' என்பதை போல் உள்ளது அமைச்சரின் பேச்சு!

எந்த ஒரு தொலைநோக்கு திட்டத்தையும் ஏற்படுத்தாமல், சாராய வியாபாரத்தை மட்டுமே நம்பி ஆட்சி நடத்திய திராவிடக் கட்சிகளால், தமிழகத்தின் கடன் பெருகிக் கொண்டே போகிறது.

இரு திராவிடக் கட்சிகளின் நிர்வாகச் சீர்கேட்டால், அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் இரு முக்கிய துறைகளான போக்குவரத்தும், மின்சாரத் துறையும் அதல பாதாளத்தில் இருக்கின்றன.

தமிழக போக்குவரத்து துறையின் கீழ் உள்ள எட்டு கோட்டங்களில், ஏராளமான பஸ்களும், டிப்போ கட்டடங்களும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2011-ல், 2,009 கோடி ரூபாயாக இருந்த போக்குவரத்து துறையின் கடன், 2021-ல், 13,325 கோடியாக உயர்ந்துள்ளது.

இது தவிர, காப்பீடு நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகை, தொழிலாளர்களின் வைப்பு நிதி, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப் பயன்கள் என, மொத்த கடன், 20,000 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது.

கடந்த 2001-ல் குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்றபோது, அம்மாநில மின் வாரியம், 2,300 கோடி ரூபாய் கடனில் மூழ்கியிருந்தது.

பதவியேற்ற ஆறு ஆண்டுகளில், அக்கடன் முழுதையும் அடைத்து, 600 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதோடு, 16 மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்குமளவுக்கு மின் உற்பத்தியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றி, சாதனை செய்தார் மோடி.

ஆனால், தமிழக மின் வாரியமோ, திறமையற்ற அமைச்சர்களிடம் சிக்கி, 1.60 லட்சம் கோடி ரூபாய் கடனில் மூழ்கிக் கிடக்கிறது.

இலவச பஸ் பயணத்திற்காக, 1,500 கோடி, மகளிர் உரிமைத் தொகைக்காக மாதம், 1,500 கோடி, நகைக்கடன் தள்ளுபடிக்காக 5,000 கோடி.

இலவச மின்சாரத்துக்காக பல ஆயிரம் கோடி என தேவையில்லாமல் நிதியை விரயம் செய்து, மாநிலத்தின் கடன் சுமையை அதிகரித்துக் கொண்டே போகிறது திராவிட மாடல் அரசு. ஆனால், இரு திராவிடக் கட்சிகளின் முன்னாள், இந்நாள் அமைச்சர்களின் சொத்து மதிப்பு மட்டும் ஆண்டுதோறும் கூடிக்கொண்டே போகிறது!

தொலைநோக்கு திட்டம் இல்லாத திராவிடக் கட்சிகளின் ஆட்சி இனியும் தொடர்ந்தால், தமிழகம் திவாலாவதை ஆண்டவனாலும் தடுக்க முடியாது!



மனிதநேயத்தோடு அணுகலாமே!


ந.பிரபாகரன், புதுச்சேரியிலிருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: 'லைசன்ஸ் பெற்று நாய்கள் வளர்க்கலாம்; மற்ற நாய்களை கொன்று விடலாம் அல்லது இறைச்சிக்காக நாய்களை ஏற்றுமதி செய்யலாம்' என, கடந்த 14ம் தேதி, ஒரு வாசகர் கடிதம் எழுதிஇருந்தார்.

எந்த உயிரையும் கொல்வதை, சாதாரண நிகழ்வாக ஏற்க முடியாது. மனிதனுக்கு உயிர் வாழ உரிமை உள்ளதுபோல், அனைத்து உயிர்களும் வாழ, உரிமை உள்ளது.

மனிதர்களை அண்டிப் பிழைக்கும் பூனை, நாய்களின் இனப்பெருக்கத்தை, தற்போதுள்ள நிலையிலேயே கட்டுப்படுத்தி, அவற்றுக்கு, தன்னார்வலர்களும், அரசும் புகலிடம் அளிக்கலாம்.

பல நேரங்களில் தெருநாய்கள், இரவு நேரங்களில் நடமாடும் சந்தேக நபர்களைப் பார்த்து குரைக்கின்றன; அது, குடியிருப்போருக்கு ஒரு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்த உதவுகிறது.

தங்கள் வீட்டில் மீதமாகும் உணவுகளை, பலரும், தெருநாய்களுக்கு இடும் வழக்கத்தையும் நாம் பார்க்கிறோம்.

சும்மா போகும் தெருநாய்களை சிலர் சீண்டுகின்றனர். வித்தியாசமான நபர்களைக் கண்டால், அவை குரைக்கின்றன.

ஒன்றிரண்டு தெருநாய்களுக்கு நோய் உபாதையால் வெறிபிடிக்கிறது. அதற்கும் அரசு தீர்வு காணலாம்.

தெருநாய்கள் பிரச்னையை வன்மத்தோடு அணுகாமல், மனிதநேயத்தோடு அணுகினால் நல்லது!








      Dinamalar
      Follow us