PUBLISHED ON : நவ 19, 2026 12:00 AM

இந்திராவின் நியாயங்களை
ஒதுக்குவது சரியல்ல!
பி.என்.கபாலி, சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: இந்திய அரசியல் வரலாற்றில், இன்று வரை ஒரு வரலாற்று பிழையாக பார்க்கப்படுவது, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா கொண்டு வந்த, ‘எமர்ஜென்சி’யை தான்!
இந்திராவின் மருமகளும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவியுமான சோனியா கூட, தன் சுயசரிதையில், எமர்ஜென்சி குறித்து, ‘இந்திராவின் தவறான முடிவு’ என குறிப்பிட்டுள்ளதாக, ‘தினமலர்’ நாளிதழில் படித்தேன்.
ஒரு ஜனநாயக நாட்டில், இதுபோன்ற அடக்குமுறை, சர்வாதிகாரத்தனம் என்றாலும், இந்திராவின் நிலையில் வைத்தும் இவ்விஷயத்தை நாம் பார்க்க வேண்டும்.
ஏனெனில், இந்திரா அவரது தந்தை நேருவால், அரசியலில் திணிக்கப்பட்டவர் அல்ல; முன்னாள் பிரதமர் லால் பகதுார் சாஸ்திரி மறைவிற்கு பின், 1966ல் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில், காங்கிரஸில் மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா, அதுல்யா கோஷ், சஞ்சீவ ரெட்டி, எஸ்.கே.பாட்டீல் என பல மூத்த தலைவர்கள் இருந்தனர்.
இதில், எவரை தேர்ந்தெடுத்தாலும் மற்ற வர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள் என்ற நிலையில், இந்திராவை தேர்ந்தெடுத்தார், கர்ம வீரர் காமராஜர்.
கேவலம் பெண் தானே, தங்கள் கைப்பாவையாக ஆட்டிப்படைக்கலாம் என்ற எண்ணத்தில், மூத்த தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
அச்சூழ்நிலையில், இந்திராவின் முன் இருந்தது, ஆள்வதா, அடங்கிப் போவதா என்ற கேள்வி தான்!
காங்கிரஸ் மூத்த தலைவர்கள், இந்திராவை செயல்பட விடாமல் முடக்குவதில் குறியாக இருந்தனர். உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டுமானால், அவர்களை ஓரம் கட்டினால் தான் முடியும் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சியை இரண்டாக பிளந்தார், இந்திரா.
அதன்பின் தான், மன்னர் மானிய ஒழிப்பு, வங்கி தேசியமயம் போன்ற மிக முக்கிய முடிவுகளை அவரால் எடுக்க முடிந்தது; பாகிஸ்தான் பலவீனப்படுத்தப்பட்டது. ஆயினும், மற்ற தலைவர்கள் கொடுத்த குடைச்சல் குறையவில்லை.
வரையறையற்ற சுதந்திரம் நாட்டை முன்னேற விடாது; சீனா, சிங்கப்பூர், ரஷ்யா, வளைகுடா நாடுகள் முன்னேறிய தற்கு காரணம், அங்கு நிலவும் சர்வாதிகார ஆட்சி முறையே!
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற ஜனநாயக நாடுகளிலும் கட்டுப்பாடுகள் உண்டு. இந்தியாவைப் போல், அங்கு, தான்தோன்றித்தனமாக மக்கள் செயல்பட முடியாது.
எனவே, இங்கு நிலவும் கட்டுப்பாடற்ற ஜனநாயகத்தை வரையறைபடுத்தாமல், வளர்ச்சி காண முடியாது என்று எண்ணினார், இந்திரா.
அதனால், தனக்கு குடைச்சல் கொடுத்த இம்சை அரசர்களை சிறையிலிட, எமர்ஜென்சியை கொண்டு வந்தார். இதை, நியாயப்படுத்த முடியாது என்றாலும், இந்திராவின் பக்கம் இருக்கும் நியாயங்களை புறந்தள்ளி, அவரை ஹிட்லர், முசோலினி போல் உருவகப்படுத்து வதும் சரியல்லவே!
lll
மின் கட்டண கொள்ளை நிற்குமா?
ஞா.சேகரன், ஆலங்குளம், மதுரை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: எங்கள் வீடு, கீழ் தளம், மேல் தளம் என இரண்டு வீடுகளாக கட்டப்பட்டு, தனித்தனி மின் இணைப்பு பெறப்பட்டு, தனித் தனியாக பல ஆண்டுகளாக மின் கட்டணம் கட்டி வந்தோம்.
கடந்த 2025, மார்ச் முதல், ஒரு மின் இணைப்பு எண்ணை மறைத்து, அடுத்த மின் இணைப்பு எண்ணில், இரு மீட்டர்களின் யூனிட்களை ஒன்றாக சேர்த்து, மூன்று மடங்கு மின் கட்டணம் வசூலித்து வருகிறது, மின் வாரியம்.
தனித்தனியாக மின் கட்டணம் கட்டியபோது, உபயோகித்த யூனிட்டிற்கு மட்டும் பணம் செலுத்தினோம். ஒரே பில்லாகப் போட்டத்தில் இருந்து உபயோகிக்காத யூனிட்டிற்கும் மின் கட்டணம் வசூலித்து வருகின்றனர்.
கடந்த ஓராண்டாகவே, செயற்கையான இந்த கட்டண அதிகரிப்பால், பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தனித் தனியாக மீட்டர் இருந்த போது, மொத்தமே, 2,000 ரூபாய் தான் மின் கட்டணம் செலுத்தப்பட்டது. தற்போதோ, 7,000 ரூபாய் வரை கட்ட வேண்டியுள்ளது. இந்தக் கொடுமையை யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியவில்லை.
இதனால், பொருளாதார சிரமம் ஏற்படுகிறது. மின்வாரியம் இதுபோன்ற மின் இணைப்புகளை நீக்கி, எப்போதும் போல், தனித் தனி பில் வழங்க வேண்டும்.
எங்களுக்கு இலவச மின்சாரம் தேவை இல்லை; நாங்கள் உபயோகிக்கும் மின்சாரத்திற்கு உரிய கட்டணத்தை மின்வாரியம் வசூலித்தாலே போதும்!
lll
