PUBLISHED ON : நவ 21, 2026 12:00 AM

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!
செ.சாந்தி, மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கள்ளக்குறிச்சி பெண் கலெக்டர் பத்மஜாவுக்கு, த.வெ.க., - எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தமிழக அரசியலில் சூட்டை கிளப்பியுள்ளது.
இக்குற்றச்சாட்டை அருள் விக்னேஷ் மறுத்து வந்தாலும், சம்பந்தப்பட்ட கலெக்டர் பத்மஜா, இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதுடன், அவர் கணவரும், விழுப்புரம் மாவட்ட கலெக்டருமான ஷேக் அப்துல் ரஹ்மான், அருள் விக்னேஷ் மீது புகார் கொடுத்துள்ளது கவனிக்கத் தக்கது.
ஆனால், 'கலெக்டருக்கு அதுபோன்ற குறுஞ்செய்தியை அருள் விக்னேஷ் அனுப்பவே இல்லை; ஈ.வெ.ரா., நுாலக முறைகேட்டை திசை திருப்பவே, இப்பிரச்னையை தி.மு.க., கிளப்புகிறது' என்று, சுகாதார துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.
அப்படியெனில், அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தை திசை திருப்பவே, நுாலக புத்தக கொள்முதல் ஊழல் விவகாரத்தை, ஆளுங்கட்சி கையில் எடுத்துள்ளது என்றும் கூறலாமே!
கடந்த தி.மு.க., ஆட்சியில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில், 'யார் அந்த சார்' என்பதை மறைக்க, தி.மு.க.,வினர் அரங்கேற்றிய நாடகத்தில், திராவிட மாடல் அரசின் மானம் கப்பலேறியதை முதல்வர் மறந்து விடக் கூடாது.
எவர் தவறு செய்திருந்தாலும், அது தன் கட்சியை சேர்ந்தவர்களே என்றாலும், நடுநிலையோடு நடவடிக்கை எடுத்தால் தான், மக்களின் நம்பிக்கையை முதல்வர் விஜய் பெற முடியும். இல்லையென்றால், தி.மு.க., - அ.தி.மு.க., போல், த.வெ.க.,வும் ஒரே குட்டையில் ஊறும் மட்டையாகி விடும்!
lll
காவல் துறையின் மாண்பை காப்பாற்றுங்கள்!
கோ.பாண்டியன், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தீபாவளிஅன்று, தேனி மாவட்டம் சமதர்மபுரம் பகுதியில், சாலையை மறித்து பட்டாசு வெடித்தவர்களை தட்டி கேட்ட காவல் துறை எஸ்.ஐ., செந்தில்குமாரை, அந்த கும்பல் அடித்துக் கொன்றுள்ளது.
சென்னை செங்குன்றத்தில், வாலிபர் ஒருவர் பொது மக்களை தாக்க, தகவலறிந்து தடுக்க வந்த எஸ்.ஐ.,யை, அந்த வாலிபர் கத்தியால் வெட்டியுள்ளார். எஸ்.ஐ., எதிர் தாக்குதல் நடத்தி, தன்னை தற்காத்து கொண்டுள்ளார்.
கடலுார் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே, இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பந்தமாக, விசாரணைக்கு சென்ற காவல் ஆய்வாளரின் சீருடையை, ரவுடி ஒருவன் பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளான்.
இப்படி காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண மக்களின் நிலை?
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், காவல் துறை நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இருந்தது இல்லை. எப்போது, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததோ, அப்போது இருந்து காவல் துறை மட்டுமல்ல; அனைத்து அரசு துறைகளிலும் கட்சிக்காரர்களின் அத்துமீறல்கள் அதிகரித்து விட்டன.
அதிலும், காவல் துறையை ஏவல் துறையாகவே மாற்றிய பெருமை கருணாநிதியையே சாரும்.
தி.மு.க., கரைவேட்டி கட்டியவர்கள் எல்லாம் காவல் நிலையத்தில் கட்ட பஞ்சாயத்து செய்து, பிழைப்பு நடத்தி வந்தனர். கட்சிக்காரர்களின் கட்டளையை மீறி, எந்த நபர் மீதும் வழக்கு பதியவோ, கைது செய்யவோ முடியாது.
சமுதாயத்தில் காவல் துறையினரின் மதிப்பு, மரியாதையை கெடுத்தவர்களே, தி.மு.க.,வினர் தான்.
தி.மு.க., ஆட்சி காலத்தில் விதைக்கப்பட்ட இந்த விஷ விதை, தற்போது பொதுமக்களிடம் பல்கிப் பெருகியுள்ளது. விளைவு... பொது மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய காவல் துறையினர், தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள, இன்று போராட வேண்டியுள்ளது.
அதேநேரம், காவல் துறையினரும் தங்களுக்கான அதிகார வரம்புகள் என்ன என்பதை உணர்ந்து, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, தங்கள் கடமையை செய்ய வேண்டுமே தவிர, அளவற்ற அதிகாரங்கள் தங்களுக்கு இருப்பதாக நினைத்து, அடாவடித்தனம் செய்யக்கூடாது.
ஒரு நாட்டில் சட்டம் - ஒழுங்கு சரியாக இருந்தால் தான், மக்கள் நிம்மதியாக வாழ முடியும். காவல் துறையின் மாண்பை கெடுக்க முனைந்தால், சட்டம் - ஒழுங்கு தானாகவே சீர்கெட்டுவிடும்.
எனவே, ஆளும் அரசு காவல் துறையின் மாண்புகளை கெடுக்கும் கயவர்களை, ஆரம்ப நிலையிலே யே கண்டறிந்து ஒடுக்குவது, மக்களுக்கு மட்டுமல்ல; ஆட்சிக்கும் நல்லது! lll
