PUBLISHED ON : நவ 04, 2026 12:00 AM

மலை அடிவார பகுதி ஆக்கிரமிப்பு தடுக்கப்பட வேண்டும்!
எஸ்.வி.ஆனந்தம், குடியாத்தம், வேலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: திருவண்ணாமலை கோவில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில், ‘நீர்நிலைகள் மற்றும் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்போருக்கு பட்டா வழங்குவதை அனுமதிக்க முடியாது’ என்று கூறியுள்ளது, சென்னை உயர் நீதிமன்றம்.
இதேபோன்று, தமிழக மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள நகராட்சிகள், ஊராட்சிகளில் நில ஆக்கிரமிப்புகள் செய்யப்படுவது குறித்தும், நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏனெனில், மலைப் பகுதியின் அடிவார நிலங்களை தனிநபர்கள் ஆக்கிரமித்து, வீடுகள், கடைகள், வணிகக் கட்டடங்களை கட்டி, அவற்றை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டுகின்றனர். குறிப்பாக, அரசியல் மற்றும் பணபலம் உள்ளவர்களே இத்தகைய ஆக்கிரமிப்பில் ஈடுபடுகின்றனர்.
அதனால், அரசும், மாவட்ட நிர்வாகமும், மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள அனைத்து நகராட்சி மற்றும் ஊர்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கெடுத்து, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும்.
அதேநேரம், வாழ்வாதாரத்திற்காக குடிசை அமைத்து வாழும் ஏழை, எளிய மக்களின் சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மனிதாபிமான முறையில் அவர்களுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக் கலாம்!
மலைகள் வெறும் நிலப்பரப்புகள் அல்ல; அவை மழைநீரை தேக்கி, ஊற்றுகள், ஓடைகள், ஆறுகள் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரங்களை பாதுகாக்கும் ஓர் அரண்.
அத்தகைய பாதுகாப்பு அரணை, நில கொள்ளையர்களின் பேராசைக்கு, அரசு அழிய விடக் கூடாது!
lll
அரவை ஆலைகளை கண்காணிக்க
வேண்டும்!
அ.யாழினி பர்வதம், சென்னையிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘வாழைப்பழத்தை கையில் கொடுப்பதுடன் நின்று விட மாட்டோம்; அதை உரித்தே கொடுப்போம்’ என்பது போன்று, இதுவரை ரேஷன் கடைகளில் கோதுமை கொடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, அதற்கு பதிலாக கோதுமை மாவு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது, தமிழக அரசு.
வரவேற்கப்பட வேண்டிய விஷயம் தான்; ஏனெனில், முதியோரால் கோதுமையை வாங்கி, சுத்தப்படுத்தி, காய வைத்து, பின், அரவை மில்லில் கொடுத்து அரைத்து உபயோகிப்பது, சிரமமான விஷயம்.
இப்படி நேரடியாக மாவாக கொடுத்தால், சர்க்கரை நோயால் பீடிக்கப்பட்டுள்ள முதியோர் எளிதாக பலன் பெறுவர்.
அதேநேரம், ரேஷனில் கொடுக்கும் கோதுமையின் தரம் எப்படிப்பட்டது என்பது, ரேஷன் பொருட்கள் வாங்கும் அனைவரும் அறிந்த விஷயம் தான்!
மணல், கல், துாசு, கோதுமை கதிரின் துகள்கள் என்று குப்பையாக இருக்கும். அதை வாங்கிச் செல்லும் மக்கள் தான், புடைத்து சுத்தப்படுத்தி, கழுவி, வெயிலில் காய வைத்து அரைத்து பயன்படுத்துவர்.
தற்போது, தனியார் மாவு ஆலைகளுக்கு அரசு கோதுமையை கொடுத்து அரைக்கச் சொல்லும் போது, அவர்கள் எந்த அளவு அக்கறையோடு சுத்தப்படுத்துவர் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி!
‘யாருக்கு தெரியப் போ கிறது...’ என்று, கோதுமையை சுத்தப்படுத்தாமல், குப்பை கூளங்களுடன் அரைத்துக் கொடுத்து விட்டால், அதை உண்பவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும்.
அதனால், அரசு இந்த விஷயத்தில், தனியார் ஆலைகளுக்கு கடுமையான விதிமுறைகளை விதிக்க வேண்டும்.
சுகாதாரமான முறையில் அரைக்கவில்லை எனில், சம்பந்தப்பட்ட அரவை ஆலைகள் மீது நடவடிக்கைஎடுக்கப்படும் என்று அறிவுறுத்த வேண்டும்.
உணவு துறையும் இவ்விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொண்டால், மக்களுக்கு சுத்தமான கோதுமை மாவு கிடைக்கும்! lll
