PUBLISHED ON : மே 01, 2025 12:00 AM

அரசியல் சாசனத்தை தகர்த்தது யார்?
ஆர்.குமரன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'குடியுரிமை திருத்த
சட்டம், வக்ப் சட்டம் என, உளி வைத்து அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பா.ஜ.,
அரசு. அரசியல் சாசனத்தின் முக்கிய அம்சமே கூட்டாட்சி. தேர்தலில், 400
இடங்களை பெற பா.ஜ., சபதம் எடுத்தது. மக்கள், அவ்வளவு இடங்களை கொடுத்து
இருந்தால், ஆக்கிரமிப்பு வீடுகளை புல்டோசர் வைத்து இடிப்பது போல், அரசியல்
சாசனத்தை சுக்கு நுாறாக உடைத்து, புதிய அரசியல் சாசனத்தை கொண்டு
வந்திருப்பர்' என்று கூறியுள்ளார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்
சிதம்பரம்.
அரசியல் சாசன சட்டத்தை நுாற்றுக்கணக்கான முறை திருத்தி தகர்த்தது காங்., ஆட்சியில் தான்!
அரசியல்
எதிரிகளை பழிவாங்க, அரசியல் சாசன சட்டத்தை திருத்தி, எமர்ஜென்சி கொண்டு
வந்தது யார்? எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில், 356வது சட்டப் பிரிவை
பயன்படுத்தி, ஆட்சியை கலைத்தது எவரது ஆட்சியில்?
கூட்டாட்சி என்ற
பெயரில் இங்கே கொள்ளை அடித்ததுடன், நாட்டின் பாதுகாப்பு குறித்த எந்த
அக்கறையும் இல்லாமல், காஷ்மீரின் பல பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்யவிட்டு,
பாகிஸ்தானின் அத்தனை பயங்கரவாத செயல்களையும் இந்தியர்கள் அனுபவிக்க
பிள்ளையார் சுழி போட்டது காங்கிரஸ்!
நல்ல நிலையில் இயங்கி
கொண்டிருந்த ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தை, பழுதானது என்று
குறிப்பிட்டு, சகாய விலைக்கு பாகிஸ்தானுக்கு விற்று, அதன்வாயிலாக, அவர்கள்
அடித்த கள்ள நோட்டுகளை இந்தியாவில் தாராளமாக புழக்கத்தில் விட்டது யார்?
பழுதானது
என்றால், பயன்படுத்த இயலாதது என்று தானே அர்த்தம்... ஆனால், அந்த
இயந்திரத்தின் வாயிலாக நம் கரன்சிகளை அச்சிட்டு, நம் நாட்டுக்குள்ளேயே
வினியோகித்திருக்கிறது என்றால், மத்தியில் ஆண்ட காங்., கட்சி பாகிஸ்தானுடன்
கொஞ்சி குலாவியுள்ளது என்று தானே அர்த்தம்?
காங்கிரஸ் கட்சி
விட்டுச் சென்ற கோளாறுகளையும், குழப்பங்களையும், பா.ஜ., அரசு கொஞ்சம்
கொஞ்சமாக சரிசெய்து வருவது அரசியல் சாசனத்தை தகர்ப்பது என்றால், காங்.,
செய்த மேற்படி காரியங்களுக்கு என்ன பெயர்?சிதம்பரம் பதில் கூறுவாரா?
ராஜினாமா நாடகம்!
ஆர்.மருதன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒருவர் தான் வகிக்கும் பதவியை, 'ராஜினாமா' செய்வதாக அறிவித்தால், அதை ஏற்று, அவரை பதவியில் இருந்து விடுவிப்பது மரபு!
கருணாநிதியின் ஆட்சி காலத்தில் அவருக்கு எதிராக கட்சியிலோ அல்லது அமைச்சரவையிலோ லேசாக ஒரு முணுமுணுப்பு எழுந்தால் கூட போதும்... உடனே செயற்குழுவையோ, அமைச்சரவை கூட்டத்தையோ கூட்டி, அவர்கள் முன்னிலையில், 'நான் ராஜினாமா செய்கிறேன்' என அறிவித்து, அடுத்த அறையில் சென்று அமர்ந்து விடுவார், கருணாநிதி.
அப்புறம் என்ன... அங்கே குழுமி இருப்பவர்கள், தங்களுக்குள் வாக்குவாதம் செய்து, கடைசியாக, கருணாநிதி முன் சென்று, வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில், போருக்கு செல்லும் கணவனை, 'போகாதே... போகாதே... என் கணவா! பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்!' என்று நடிகை பத்மினி பாடுவது போல், 'ராஜினாமாவை மறுபரிசீலனை செய்து, மீண்டும் பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று ஒப்பாரி வைப்பர்.
அக்காட்சி தான், ம.தி.மு.க.,வில் அரங்கேறிஉள்ளது.
வைகோ கட்சி துவங்கிய காலத்தில் இருந்து கூடவே இருப்பவர், மல்லை சத்யா.
கடந்த 2019 பார்லிமென்ட் தேர்தலுக்கு முன், கட்சிக்குள் திணிக்கப்பட்டு, முதன்மை செயலர் என்ற பதவியும், கூடவே எம்.பி., பதவியும் பெற்றவர், துரை வைகோ.
தி.மு.க.,விலிருந்து வைகோவை நீக்கியபோது, அதை தாங்க முடியாமல், 10க்கும் மேற்பட்டவர் தீக்குளித்து மாண்டனர். அவர்களைப் போல், ராமகிருஷ்ணன், மல்லை சத்யா போன்றவர்கள் முட்டாள்தனமாக தீக்குளிக்காமல், கூடவே இருந்து பதவிகளை பெற்று, கட்சி பணியாற்றினர்.
ஆனாலும், வைகோ வின் நடவடிக்கைகள், அவரிடமிருந்து ஒவ்வொருவராக விலகி செல்ல வைத்தது. கடைசியாக எஞ்சி நிற்பது, மல்லை சத்யா மட்டும் தான்.
இந்நிலையில், துரை வைகோ ராஜினாமா என்ற குண்டை துாக்கிப் போட்டதும், பயந்து விட்டார் வைகோ.
மகனின் ராஜினாமாவை ஏற்றால், கட்சி சத்யாவின் கைக்கு போய்விடும். கட்சியையும், கட்சியின் சொத்துகளையும் ரத்த சொந்தம் இல்லாதவரிடம் தாரை வார்க்க முடியுமா?
கருணாநிதியிடம் ஒப்பாரி வைத்து ராஜினாமாவை திரும்பப் பெற வைப்பது போல, தன் மகனின் காலில் விழுந்து, ஒருவழியாக, ராஜினாமாவை, 'வாபஸ்' வாங்க வைத்து விட்டார், வைகோ!
வாழ்க ஜனநாயகம்!
இதில் கூடவா அரசியல் செய்வர்?
வெ.சீனிவாசன், திருச்சியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நான் காரைக்குடி அழகப்பர் கல்லுாரியில் படித்த காலத்தில், கல்லுாரிக்காக நிறுவனர் தானமாக அளித்துள்ள நிலங்களையும், கட்டுமானங்களையும் கண்டு, அவரது தாராள மனதை நினைத்து வியந்துள்ளேன்.
தமிழகத்தில் திராவிட ஆட்சிகளின் வருகைக்கு முன், அழகப்பர் செட்டியாரைப் போல், ஆயிரக்கணக்கான தனவந்தர்களை பார்க்க முடிந்தது.
ஆனால், கழகங்களின் ஆட்சிக்கு பின், கொடையாளிகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போனது. காரணம், தான, தர்மம் செய்வோருக்கு உரிய மதிப்போ, மரியாதையோ கிடைப்பதில்லை; அவமதிப்பே கிடைக்கிறது.
உதாரணத்திற்கு, வெள்ளக் காலத்தில் தனவந்தர்கள் நிவாரணப் பொருட்கள் கொண்டு வந்தால், பாதிக்கப்பட்டோர் நேரடியாக பெற முடியாது. அதை கட்சிக்காரர்கள் மொத்தமாக பிடுங்கி, தங்கள் தலைவர்களின் புகைப்படம் மற்றும் கட்சி சின்னம் பொறித்த, 'ஸ்டிக்கர்'களை அவற்றின் மீது ஒட்டி, ஏதோ கட்சி சார்பில், சம்பந்தப்பட்ட அரசியல்வாதி கொடுப்பதைப் போல் கொடுப்பர்.
உண்மையில் எவர் கொடுத்தது என்பது தெரியாது. பிறர் தரும் தானத்தில் கூட, தான் சார்ந்த கட்சியும், தாங்களும் நல்ல பெயர் சம்பாதிக்க வேண்டும் என்ற அற்ப புத்தி!
சமீபத்தில், வைகை நதி கரையோரங்களை ஜே.சி.பி., இயந்திரம் கொண்டு சுத்தம் செய்து வந்த ஓர் அறக்கட்டளை, கட்சிக்காரர்களின் அடாவடியால், வேலையை நிறுத்தி விட்டு சென்று விட்டனர்.
இதுபோன்ற மட்டமான அரசியல் தலையீடு இருந்தால், எவர் தான் தொண்டு செய்ய முன்வருவர்?
இவர்களும் நல்லது செய்ய மாட்டார்கள்; பிறரையும் நல்லது செய்ய விடமாட்டார்கள்.
விட்டால், பிச்சைக்காரரரின் திருவோட்டு காசுக்கு கூட சொந்தம் கொண்டாடி, அதற்கும், 'ஸ்டிக்கர்' ஓட்டுவர் போலிருக்கு!
@