PUBLISHED ON : டிச 21, 2025 03:01 AM

புரியாமல் உளறாதீர்கள்!
ஆர்.சுப்பராமன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை, 'ஆட்டை' போட்ட வழக்கில், பா.ஜ.,வின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி போட்டிருந்த வழக்கோடு, அமலாக்கத்துறை தன்னையும் இணைத்து கொண்டதை டில்லி சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதுதான் உண்மை நிலையே தவிர, 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையின் சொத்துக்களை, காங்கிரஸ் பார்லி., குழு தலைவர் சோனியாவும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலும்,'ஆட்டை' போட்டது நியாயம் என்றோ, அதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளதென்றோ, இருவரும் ஐ.எஸ்.ஐ., முத்திரையிட்ட நேர்மையாளர்கள், நாணயஸ்தர்கள் என்றோ சொல்லவில்லை.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச்சட்டத்தின் கீழ் தகவல்களை பகிர்ந்து, அந்த குற்றம் தொடர்பாக விசாரிக்குமாறு மற்றொரு சட்ட அமலாக்கக் குழுவை உருவாக்கக்கோர, அமலாக்கத் துறைக்கு முழு உரிமையும் உள்ளது.
உண்மை இவ்வாறிருக்க, தமிழக முதல்வர் ஸ்டாலின், 'நேஷனல் ஹெரால்டு வழக்கு தீர்ப்பின் வாயிலாக, எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்க, மத்திய பா.ஜ., அரசு, மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதை மீண்டும் ஒருமுறை நீதித்துறை அம்பலப்படுத்தி உள்ளது.
'காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் தவறிழைக்காதது நிரூபணமாகி உள்ளது. பா.ஜ.,வின் இந்த பழிவாங்கும் நோக்கம், நாட்டின் உயர் புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மையை மீண்டும் சிதைத்து, அவற்றை வெறுமனே அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவதற்கான கருவிகளாக சுருக்குகிறது' என, மத்திய அரசை கடித்துக் குதறி இருக்கிறார்.
விபரம் புரியாமல் பேசும் இவருக்கா நாம் ஓட்டளித்தோம் என, அவ்வப்போது கூனிக்குறுக வைக்கிறார் ஸ்டாலின்.
இந்நாட்டிலுள்ள சட்டங்களில் உள்ள ஓட்டைகள், வழக்கை தாமதப்படுத்தி கொண்டிருக்கின்றனவே அன்றி, சோனியாவும், ராகுலும் நிரபராதிகள், அரிச்சந்திரனின் வழித்தோன்றல்கள் என்று நீதிமன்றம், எங்கும் எப்போதும் குறிப்பிடவேயில்லை!
சவால்கள் உள்ளன விஜய்! எஸ்.பி.சுந்தரபாண்டியன், திருப்பூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணிக்கு, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தலைவலியாக இருக்கும் என்றும், இத்தேர்தலில் அவர் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்றும் பரவலாக பேச்சு அடிபடுகிறது.
திராவிட கட்சிகளை எதிர்த்து, தேர்தலில் களமாடுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல!
இரு திராவிட கட்சியினரும் தாங்கள் மட்டுமே ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பர். அதனால், புதியவர்களை வர விடாமல் தடுக்க, என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்வர்.
அவ்வகையில், வரும் ஜனவரிக்கு மேல் அரசியல் கட்சிகளின் கூட்டணி உறுதியாகி, வேட்பாளர் தேர்வு நடைபெறும் போது, த.வெ.க.,விற்கு பிரச்னை ஆரம்பமாகும்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போன்று, பலரும் த.வெ.க.,வில் இணையலாம்; அவர்கள் தேர்தலில் போட்டியிட, 'சீட்' கேட்கலாம்; அதேபோல் எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத செல்வந்தர்கள் பலர், அவர்கள் வசிக்கும் தொகுதியில் போட்டியிட த.வெ.க.,விற்கு வரலாம்.
இதுபோன்று வருவோருக்கு சீட் ஒதுக்கும் பட்சத்தில், விஜயின் ஆரம்ப காலத்தில் இருந்து இன்றுவரை அவருடன் பயணிக்கும் நிர்வாகிகள் அதிருப்தி அடைந்து, வேறு கட்சிகளுக்கு செல்லலாம்!
அதேபோன்று, த.வெ.க.,வில் சீட் பெற்றவர்களே, வேறு கட்சிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு விலை போகவும் வாய்ப்புள்ளது.
த.வெ.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்தோர், திராவிடகட்சிகளின் வற்புறுத்தலால் வேட்பு மனுவை வாபஸ் பெறலாம். இதுபோன்ற நிகழ்வுகள் கடந்தகாலங்களில் நடந்தவைதான்; வரும் தேர்தலில் நடக்காது என்று கூற இயலாது.
இதுபோன்ற பல சவால்களை எல்லாம் எதிர்கொண்டு, இரு திராவிட கட்சிகளுக்கும், விஜய் சிம்ம சொப்பனமாக விளங்குவாரா அல்லது அரசியல் எனும் கடலில் கரைந்து காணாமல் போகப் போகிறாரா என்பது தேர்தல் முடிவுகளுக்கு பின்தான் தெரியவரும்!
அமைச்சர் மகேஷ்... உங்கள் அடிப்படை வேலையில் கவனம் செலுத்துங்கள்! ப.ராஜேந்திரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருவள்ளூர் மாவட்டம், கொண்டாபுரம் காலனி அரசு பள்ளி வளாகத்தில், பக்கவாட்டு வர் இடிந்து விழுந்து, மோஹித் என்ற மாணவன் பலியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த ஒரு பள்ளி மட்டுமல்ல; எத்தனையோ அரசு பள்ளிகள் சரியான பராமரிப்பின்றி உள்ளன. மாணவர்களும், ஆசிரியர்களும் தங்கள் உயிரை கையில் பிடித்தபடி தான் வகுப்பறைகளில் நுழைய வேண்டியதாக இருக்கிறது.
பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததால், ஒரு மாணவன் மட்டும் உயிரிழந்திருக்கிறான். கூரைகளும் இடிந்து விழுந்திருந்தால், என்ன நிகழ்ந்திருக்குமோ...!
மோஹித்தை நம்பி வாழும் அவனது பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள துயரத்திற்கு, பணம் ஈடாகுமா?
'கல்வியில் சிறந்தது தமிழ்நாடு' என விழா எடுக்கும் அரசு, பள்ளிகளின் தரம் குறித்து கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த நெடுமானுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில், சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த இரண்டாம் வகுப்பு மாணவி நவீதா, பாம்புக்கடிக்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாள் என்ற செய்தியும், அவளது பெற்றோருடன் நம்மையும் பதற வைக்கிறது.
சீர்காழி ஒன்றியத்தில் உள்ள மாத்தாம்பட்டினத்திலிருந்து கோணயாம்பட்டினம் பள்ளிக்கு, அப்பகுதியில் உள்ள முல்லையாற்றை கடந்து, மூங்கில் பாலத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து மாணவ - மாணவியர் செல்கி ன்றனர்.
அமைச்சர் மகேஷ்... நீங்கள் உங்கள் அரசியல் வாழ்க்கைக்குச் செலுத்தும் மணி நேரங்களில், சிறிதளவேனும், அரசு பள்ளிகளின் தரம், மாணவர் மேம்பாடு குறித்தும் கவனம் செலுத்துங்களேன்... ப்ளீஸ்!
அரசு நடைமுறைப் படுத்துமா? ஜி.ராமச்சந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: -------------------------------------------------------- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில், ரொக்கப் பணமும் வழங்குவது உண்டு. அச்சமயங்களில், ரேஷன் கடை பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவதுடன், கார்டுதாரர்களும் நீண்ட வரிசையில் காத்திருப்பர்.
அதை தவிர்க்க, இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் ரொக்கப்பணம் வழங்கினால், மற்ற அரசு திட்டங்களில் செய்வது போல், கார்டுதாரர்களின் வங்கிக் கணக்கில் பணத்தை நேரடியாக செலு த்தி விட்டால் எல்லாருக்கும் எளிதாக இருக்கும்.
வங்கிக் கணக்கில் மொபைல் எண்ணை இணைக்காத வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரொக்கமாக வழங்கலாம்.
தமிழக அரசு நடை முறைப்படுத்துமா?

