PUBLISHED ON : ஜன 26, 2026 01:47 AM

தங்க நகை விற்பனையில் ஒழுங்குமுறை சட்டம் வருமா?
வேலங்குடி முரளி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருக்கும் நிலையில், நகை வாங்கும்போது வசூலிக்கப்படும் சேதாரம் மற்றும் செய்கூலி தொடர்பான நடைமுறைகள் மிகப்பெரிய கேள்விகளை எழுப்புகின்றன.
முன்பு, மனித உழைப்பில் நகைகள் தயாரிக்கப்பட்டபோது, உருக்கம் மற்றும் வடிவமைப்பின் போது சிறிதளவு தங்கம் சிதறுவது தவிர்க்க முடியாது என்பதால், அந்த நகைக்கான மதிப்பு, 'சேதாரம்' எனும் பெயரில் வசூலிக்கப்பட்டது; மேலும், தனியாக,'செய்கூலி'யும் இருந்தது.
இன்றைய சூழலில், பெரும்பாலான நகைகள் தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் வாயிலாக ஒரே வார்ப்பில், பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன.
இத்தகைய உற்பத்தி முறைகளில் சேதாரம் மிகக் குறைவாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனாலும், இயந்திரத் தயாரிப்புகளுக்கும், கைத் தயாரிப்புகளுக்கும் ஒரே அளவில் சேதாரம் கணக்கிடுவது சரியா?
அத்துடன், நகை வணிகத்தில் சேதாரம் மற்றும் செய்கூலி என்பது அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான நடைமுறையில் இல்லை. சில இடங்களில் கிராம்களாகவும், சில இடங்களில் சதவீதங்களாகவும் கணக்கிடப்படுகிறது.
இதனுடன், செய்கூலி மற்றும் ஜி.எஸ்.டி., சேர்க்கப்படுவதால், நகையின் இறுதி விலை தங்கத்தின் அடிப்படை மதிப்பை விட அதிக அளவில் உயர்கிறது.
இங்கே கவனிக்க வேண்டிய கணக்கு, ஒரு சவரன் தங்கம் என்பது, 8 கிராம்; ஆனால், இன்று நகை வாங்கச் சென்றால் சேதாரம், செய்கூலி என்ற பெயரில், பல இடங்களில் ஒரு கிராம் தங்கத்தின் விலைக்கு இணையான தொகையை கூடுதலாக வசூலிக்கின்றனர்.
அதாவது, 8 கிராம் தங்கம் வாங்கச் செல்லும் ஒருவர், 9 கிராம் தங்கத்திற்கான விலையை செலுத்துகிறார்.
தங்கத்தின் விலை சவரனுக்கு, 1.13 லட்சம் ரூபாய் என்ற நிலையில், இந்த கூடுதல் ஒரு கிராம் விலை என்பது சிறிய தொகை அல்ல. இது, மக்களை ஏமாற்றும் நடைமுறையாக மாறியிருக்கிறது.
'சேதாரம்' எனக் குறிப்பிடப்படும் தங்கம் முழுமையாக அழிந்துவிடுவதில்லை; அது, தங்கத் துகள்களாக உற்பத்தி செய்பவர்களிடத்திலேயே உள்ளது.
அப்படியிருக்க, அதன் முழு மதிப்பையும் வாடிக்கையாளர்களே ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏன்?
வாங்கும் நேரத்தோடு பிரச்னை முடிவதில்லை. தேவைக்காக நகைகளை விற்கச் சென்றால், ஒரு கடையில் வாங்கிய நகையை மற்றொரு கடை வாங்க மறுப்பதும் அல்லது தங்கத்தின் மதிப்பில் கழிவு செய்வதும் பரவலாக உள்ளது.
வாங்கினாலும் இழப்பு; விற்றாலும் இழப்பு என்றால், இது என்ன வகையான வணிகம்?
தொழில்நுட்பமும், வணிக அமைப்புகளும் முற்றிலும் மாறியுள்ள நிலையில், பழைய நடைமுறைகள் மட்டும் மாற்றமின்றி தொடர்வது சரியா?
வணிகம் என்பது விற்போருக்கும், வாங்குவோருக்கும் நடுநிலையாக இருக்க வேண்டுமே தவிர, நுகர்வோரை மட்டும் நசுக்குவதாக இருக்கக் கூடாது.
எனவே, மத்திய அரசு தங்க நகை வணிகத்தில் நுகர்வோர் நலனை கருத்தில் கொண்டு, தங்க நகை விற்பனையில் ஒழுங்குமுறை விற்பனை சட்டத்தை கொண்டுவர வேண்டும்!
நாம் தான் முடிவு செய்யணும்! வெ.சீனிவாசன், திருச்சியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மஹாராஷ்டிரா மாநிலத்திலிருந்து திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த ஏழை மக்கள் சிலரின் சிறுநீரகங்கள், அறுவை சிகிச்சை வாயிலாக திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றன.
இம்மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ராஜரத்னம், தலைமறைவாக உள்ளார்; மஹாராஷ்டிரா போலீஸ் இவரை தேடி வருகிறது.
இவர் திருச்சி மாவட்ட தி.மு.க., முக்கிய புள்ளியாக இருந்தவரும், முன்னாள் அமைச்சருமான, செல்வராஜின் மருமகனாம்.
திருச்சியில் இந்த செல்வராஜின் ஆதிக்கம் மேலோங்கியபோது, அவரை சமன் செய்வதற்காக, இப்போதைய முக்கிய புள்ளியான அமைச்சர் நேரு வளர்க்கப்பட்டார்.
நேருவும், கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதி ஆகிவிட்டார்; வாரிசையும் எம்.பி., ஆக்கி விட்டார்.
சமீபத்தில், ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ஊழல் புகார்தொடர்பான விசாரணைகளில் சிக்கியுள்ளார். இப்போது, அவரும் மிக வலிமையானவராக ஆகி விட்டபடியால், அவரை சமன் செய்ய, துணை முதல்வருக்கு நெருங்கிய ஒருவர் இப்போது, திருச்சி மாவட்டத்தில் முக்கியத்துவம் பெற்று வருகிறார்.
தமிழகத்தில், நாமக்கல் பகுதியைச் சேர்ந்த சில ஏழை, எளிய மக்களின் சிறுநீரகங்களும், திருச்சி அருகில், தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் அறுவடை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இப்படி சிறுநீரக கொள்ளை ஒருபுறம் என்றால், தி.மு.க.,வின் முக்கிய புள்ளியான ஜாபர் சாதிக் என்பவர் போதைப் பொருட்கள் கடத்தலில் கில்லியாக இருந்துள்ளார்.
கனிம வள, மணல் கொள்ளை, ரியல் எஸ்டேட், சாராய உற்பத்தி, பொறியியல், மருத்துவ கல்லுாரிகள், மருத்துவமனைகள் போன்ற வியாபாரங்கள், கோவில் சொத்துக்கள் கொள்ளை, நிலங்கள் ஆக்கிரமிப்பு, கோவில்களுக்கு செலுத்த வேண்டிய குத்தகை, ஒப்பந்த தொகைகளை வருடக்கணக்கில் நிலுவையில் வைப்பது...
கமிஷன் பெற்றுக் கொண்டு அரசு பணிகளுக்கான டெண்டர்களை முடிவு செய்வது போன்ற அனைத்து தவறான செயல்பாடுகளிலும் ஈடுபடுவது பெரும்பாலும் அரசியல்வாதிகளே; குறிப்பாக ஆளும் கட்சியும், அதன் கூட்டணி கட்சிக் காரர்களுமே!
பொதுவெளியில் பேசும் போது, 'நாங்கள் ஏழைப் பங்காளன், அவர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவே அவதாரம் எடுத்துள்ளோம்' என்றெல்லாம் சொல்லி, தமிழகத்தை, 50- - 60 ஆண்டுகளாக சூரையாடி வருகின்றனர்.
இந்தியாவிலேயே ஊழல் என்றால், சட்டென்று பெரும்பாலானோர்க்கு நினைவுக்கு வருவது, தமிழகமும், தி.மு.க.,வுமே!
தகுதி, திறமை, கறை படியாத கைகளை உடையவர்களா, மக்களுக்கு உண்மையிலேயே சேவை செய்வதில் ஆர்வம் உள்ளவர்களா என்று தகுதிகளைப் பார்ப்பதை விட, எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள், தேர்தலுக்கு எவ்வளவு பணம் செலவழிக்கக் கூடியவர்கள் என்ற தகுதிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரும் கட்சிகள் தான் த மிழகத்தில் இருக்கின்றன.
இவர்களை நாம் ஆட்சி செய்ய விடப் போகிறோமா அல்லது உண்மையிலேயே மக்களுக்கு சேவை செய்ய முற்படுவோரை தேர்ந்தெடுக்கப் போகிறோமா... நாம் தான் முடிவு செய்ய வேண்டும்!

